தனித்தீவு.. தனி ஒருவன்.. ஒரு லட்சம் மரக்கன்றுகள்...!

மாங்குரோவ் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார் முருகேசன்.

Update: 2023-06-01 15:46 GMT

கேரளம் இயற்கையின் அத்தனை அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற அழகான தேசம். ஆனால் கடல் பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு அசவுகரியமான பூமி. திடீர் கடல் சீற்றம், சூறாவளி புயல், கடல் மட்டம் உயர்வு, அதனால் கடல் வெள்ளம் புகுவது போன்ற பிரச்சினைகள் சில பகுதிகளில் நீடித்துக்கொண்டிருக்கின்றன. அவற்றுள் வைபின் தீவு முக்கியமானது.

கொச்சிக்கு அருகில் உள்ள இந்த தனித் தீவு கடல் மட்டத்தில் இருந்து தாழ்வான பகுதியில் அமைந்திருக்கிறது. அதனால் கடல் மட்டம் உயரும் போதெல்லாம் சட்டென்று கடல் வெள்ளம் தீவுக்குள் புகுந்து அங்குள்ள வீடுகளை சேதப்படுத்திவிடுகிறது. அங்கு வசிப்பவர்களின் வாழ்வாதாரத்தையும் தான்.

அதனால் அங்கு வசித்தவர்கள் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். ஆனால் முருகேசன் மட்டும் வாழ்ந்த இடத்தை விட்டு செல்ல மனமில்லாமல் தனது குடும்பத்துடன் அங்கேயே வசித்து வருகிறார். கடல் வெள்ளம் சீறி வரும்போதெல்லாம் இவரது வீட்டு சுவரை சேதப்படுத்திவிடும். அதனால் சுவர்கள் எப்போதும் ஈரப்பதமான தோற்றத்துடனேயே காட்சி அளிக்கும்.

அதற்கு தீர்வு காணும் முயற்சியில் இறங்கியவர், மாங்குரோவ் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்.

மாங்குரோவ் மரங்கள் மூலம் கட்டமைக்கப்படும் சதுப்புநில காடுகள் கடல் அரிப்பு, கடல் சீற்றத்தால் எழும் வெள்ளம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. தனது வீட்டையொட்டிய பகுதிகளில் மாங்குரோவ் மரக்கன்றுகளை நடும் பணியை தனி ஒருவராக மேற்கொண்டு வருகிறார். இதுவரை ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டுவிட்டார். அவர் ஆரம்பத்தில் நட்டு வளர்த்த மாங்குரோவ் கன்றுகள் அடர்ந்து வளர்ந்து காடுகளாக உருவெடுத்துள்ளன. அவை கடல் வெள்ளத்தை கட்டுப்படுத்துகின்றன.

அதனால் கடல் வெள்ளத்தில் இருந்து தற்காலிக நிவாரணம் பெற்றிருக்கிறார். ஆனாலும் மாங்குரோவ் மரக்கன்றுகளை நடும் பணியை நிறுத்தவில்லை. தனது வீட்டிலேயே மாங்குரோவ் மரக்கன்று வளர்ப்புக்கான நர்சரி பண்ணையை நிறுவி இருக்கிறார்.

சென்னையை சேர்ந்த எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையிடம் இருந்தும் மாங்குரோவ் மரக்கன்றுகள் பெறுகிறார். மூங்கில்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதற்குள் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கிறார். அவரது மனைவி கீதா உதவி புரிகிறார்.

''நான் விதைகளை சேகரிக்க நிறைய தூரம் பயணம் செய்ய வேண்டும். என் மனைவி தன்னால் இயன்ற அளவு நர்சரி பராமரிப்புக்கு உதவுகிறார். விதைகளை சேகரித்து, அதனை வளர்த்து, பின்பு வேறு இடங்களில் நடும் பணியை நான் ஒருவனே மேற்கொள்வதால் சோர்வாக இருக்கிறேன். ஆனாலும் என்னால் இந்த பணியை நிறுத்த முடியவில்லை. எங்கள் குழந்தைகள் நாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை சந்திக்கக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த பணியை தொய்வில்லாமல் செய்கிறேன்'' என்கிறார்.

'சதுப்புநில மனிதன்' என்று அழைக்கப்படும் முருகேசன் தனது வீட்டை சுற்றி மட்டுமின்றி வைபின் கடற்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மரங்களை நட்டு வருகிறார்.

''நான் சிறுவனாக இருந்தபோது கடலில் இருந்து தீவுகளை பிரிக்கும் அளவுக்கு ஏராளமான சதுப்பு நில பரப்புகள் அமைந்திருந்தன. அவற்றின் கரையோரங்களில் மாங்குரோவ் மரங்கள் வளர்க்கப்பட்டன. அவை காடுகளாக மாறி கடல் கொந்தளிப்பு, கடல் வெள்ளத்தில் இருந்து பாதுகாத்தன. எங்கள் வாழ்க்கையின் பிரிக்க முடியாத பகுதியாக சுற்றுச்சூழல் அமைந்திருந்தது. ஆனால் இப்போது கொச்சியில் கூட சதுப்பு நிலங்கள் சில இடங்களில் மட்டுமே திட்டுகளாக காணப்படுகின்றன'' என்று வருத்தத்தோடு சொல்கிறார்.

கேரள வனத்துறையின் கருத்துபடி, மாநிலத்தில் 1975-ம் ஆண்டுவாக்கில் 700 சதுர கிலோமீட்டராக இருந்த சதுப்பு நிலப்பரப்பு இப்போது வெறும் 24 சதுர கிலோமீட்டராக சுருங்கிவிட்டது. கடலோர சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைப்பது மாநிலத்தில் உள்ள சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளை கடுமையாக சேதப்படுத்தியுள்ளன. அந்த நிலையை மாற்றும் நோக்கில் தனி ஒருவனாக முருகேசன் போராடி வருகிறார். அவரது சேவை பணியை பாராட்டி ஏராளமான அமைப்புகள் விருது வழங்கி கவுரவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்