சொர்க்கத்தின் வாசலைத் தேடி... 'புலிக்கூடு' நோக்கிய தனிமை பயணம்

இந்துக்களுக்கு ‘காசி’, கிறிஸ்தவர்களுக்கு ‘ஜெருசலம்’, முஸ்லிம்களுக்கு ‘மெக்கா’ எப்படியோ அதுபோல பவுத்தர்களுக்கு இது ஒரு புனித இடம்.;

Update:2023-08-20 10:41 IST

''பாரிசிற்கு ஒரு ஈபிள் டவர், அமெரிக்காவிற்கு ஒரு சுதந்திர தேவி, எகிப்திற்கு ஒரு பிரமிட், இந்தியாவிற்கு ஒரு தாஜ்மகால் போன்றே 'புலிக்கூடு' எனும் டைகர்ஸ் நெஸ்ட், அதன் சொந்த நாடான பூட்டானின் தனித்துவ அடையாளங்களுள் ஒன்று. டைகர்ஸ் நெஸ்ட்டை காணும் ஆவல், பலரை போலவே எனக்கும் இருந்தது. அங்கு சென்றுவந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்'' என்று உற்சாகத்தோடு பேச ஆரம்பிக்கிறார், அல்லிராணி. திருச்சியை சேர்ந்தவரான இவர், பயண பிரியர். திருச்சியில் இருந்து, சென்னை, ஐதராபாத், பக்டோரோ வழியே புலிக்கூடு சென்று வந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

''டைகர்ஸ் நெஸ்ட் என அழைக்கப்படும் புலிக்கூடு, 'இமயமலையில்' அமைந்திருக்கும் புத்த மடாலயம். இது தென் ஆசிய நாடுகளில் ஒன்றான பூடானின் பாரோ நகரத்தில், குறிப்பாக மேல் பாரோ பள்ளத்தாக்கின் பக்கவாட்டு ஓரத்தில் ஒரு குன்றின் மீது தொங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து 3,120 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

ஒரு நெடிய மரம். அதன் உச்சியிலிருந்து விரியும் கிளை. அதில் இலைகளுக்கிடையே ஒரு பறவைக்கூடு தொங்குவதைப் பார்க்க எப்படி ரம்மியமாக இருக்குமோ, அப்படிதான் இந்த மடாலயமும். இயற்கை எழில் நிரம்பும், மலையில் செங்குத்தாக அமைந்திருக்கிறது.

பெரும்பாலான நேரங்களில் மடாலயம் 'வெண் மேகங்கள்' சூழ்ந்தே காட்சியளிக்கிறது. இம்மடாலயத்தை அடைய பலரும் பயன்படுத்துவது, 'பைன்' காடுகளுக்கு இடையிலுள்ள மண் மற்றும் பாறை பாதையை தான்.

பூடான் சென்றடைந்ததும், என் பூடான் வழிகாட்டியான லட்சுமணனுடன், 'புலிக் கூடு' பயணத்தை திட்டமிட்டேன். மடாலயம் சென்று வர, ஒரு நாள் முழுவதும் ஒதுக்குங்கள் என்றார். சாதாரணமாக 5 முதல் 6 மணி நேரம் மலைப்பயணம் சென்று, வர ஆகுமாம். இதுதவிர பூடானில் ஜூன் மாதம் மழைக் காலம் தொடங்கிவிட்டால், புலிக்கூடு பாதை இன்னும் கடினமாகிவிடும். மழைநீரால் பாறைகள், பாதைகள் வழுக்கத் தொடங்கும். எனவே, மழைப்பொழிவு அதிகமானால் மலைப் பயணத்தை தவிர்ப்பது நல்லது என்றார் வழிகாட்டி.

அவரது கூற்றுப்படியே, அன்றிரவு அதிக மழை பெய்யத் தொடங்கியது. கூடவே, என் மனக்கவலையும் தொடங்கியது. ஆவலாய் இவ்வளவு தூரம் வந்தும், ஒரு நல்ல அனுபவத்தை மழை கெடுத்துவிடுமோ என்ற அச்சம், தூக்கத்தை விரட்டியது. இருப்பினும் விடிவதற்குள் மழை நின்றிருந்தது. மழைக்கு பின்னான அந்த காலைப்பொழுது, அத்தனை அழகானதாக தெரிந்தது'' என்று புலிக்கூடு செல்வதற்கு முன்பு இருந்த பரிதவிப்பை பகிர்ந்தவர், புலிக்கூடு பயணத்தின் அலாதியான அனுபவங்களை கூற தொடங்கினார்.

''புலிக்கூடு செல்வதற்கான மலை அடிவாரத்தின் தளம் திறக்கும் நேரம் காலை 8.30. அதற்கேற்ப விடுதியிலிருந்து புறப்பட்டு, வந்து சேர்ந்தோம். நுழைவாயிலின் அருகே நினைவுப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் வாங்குவதற்கான கடைகள் தென்பட்டன. ரூ.50-க்கு செதுக்கப்பட்ட மர நடை குச்சிகள் பயணத்திற்கு துணையாக வர, வாடகைக்கு கிடைக்கிறது.

மலையேற பெரியவர்களுக்கு ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக நுழைவுச்சீட்டு மற்றும் வழிகாட்டி இல்லாமல் எவரும், மேலே செல்ல அனுமதி இல்லை. அப்படிச் செல்பவர்கள் கீழே திரும்ப அனுப்பப்பபடுவர். எனக்கான அனுமதிச்சீட்டை பெற்று எதிர்ப்பார்ப்புகளை சுமந்து, மெல்ல நடையைத் தொடங்கினேன். வாயிலை தாண்டி குன்றின் அடிப்பகுதியை கடப்பதற்குள், ஒன்றிரண்டு வயல்வெளிகள் தென்பட்டது. இங்கு உள்ளூர்வாசிகள், குதிரைகளை வைத்திருந்தார்கள். அவை நமது மலையேற்றப் பாதையில் மூன்றில், ஒரு பங்குத் தொலைவை கடக்க வாடகைக்கு கொடுக்கப்படுகிறது.

குதிரைகள் வேண்டாமென்று முடிவெடுத்து, சிறிது தூரம் மேலே ஏறியிருப்போம். திடீரென்று மழை பொழியத் தொடங்கியது. அருகில் இருந்த மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றோம். எங்களைப் போலவே சில குதிரையும், குதிரைக்காரர்களும் வந்து ஒதுங்கினர்.

மழை பெய்தால் நடப்பது சிரமம் தான். ஏற்கனவே ஏறி வந்த தொலைவே, ஆங்காங்கே வழுக்கியது. குதிரைக்காரர்களின் நிலையை எண்ணினேன், கவலைக்குரியது தான். அவர்களது வாழ்வாதாரமும் அங்கு வரும் பயணிகளை நம்பிதான் என்பது புலப்பட்டது. மழை நின்றவுடன் குதிரையை சிறிது தொலைவாவது பயன்படுத்த வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டேன். என்ன ஆச்சரியம், சொல்லி வைத்தார்போல மழை நின்றது.

குதிரையில் ஏறி பயணம் செய்யத் தொடங்கினேன். மனமும் மீண்டும் புலிக்கூடு அழகில் லயித்தவாறே பயணப்பட தொடங்கியது. மூன்றில் ஒரு பங்கு பயணத்தை கடந்தவுடன், இறக்கி விட்ட குதிரைக்கும், குதிரைக்காரருக்கும் பணத்தை கொடுத்து நன்றி கூறி நடையைத் தொடர்ந்தேன். இப்போது என்னைப்போலவே, அவர்களுக்கும் மகிழ்ச்சி. சொல்லப்போனால், மலைப்பாதையில் குதிரையேற்றம் என்பதே ஒரு தனி அனுபவம்தான்'' என்றவர், புலிக்கூடு என்ற பிரமாண்டத்தை, முதன் முதலாக நேரில் பார்த்த அனுபவத்தை விளக்கினார்.

''குதிரையில் இருந்து இறங்கிய இடத்தில் இருந்து வெகு தூரத்தில் உள்ள மலையின் மேல் ஒரு பெரிய புள்ளி தெரிகிறது. அந்தப்புள்ளிதான் நான் தேடிவந்த புலிக்கூடு. தாயின் 'சீலை முந்திக்குள்' முகம் மறைத்து விளையாடும் குழந்தைபோல, அவ்வப்போது 'மேகங்களுக்குள் ஒளிந்து' கொண்டு, மேகம் விலகி தென்படும் புலிக்கூடு நமக்குள் பேரானந்தத்தை பூக்கச் செய்கிறது.

மழைச்சாரல் வரவேற்பும், நீல பைன் மரங்களின் வாசமும், அரிய பறவைகளின் சத்தமும், திசையெங்கிலும் தூய்மையான காற்றும், குளிரூட்டும் மேகக் கூட்டங்களும் என வழிநெடுகிலும், மனம் பரவசத்தால் துள்ளியது.

இப்படியாக இரண்டு மணி நேரம் நடைபயணமாக கடந்தபின் சிறு புள்ளியாய் தெரிந்த புலிக்கூடு, பேருருவம் கொள்வது தெரிந்தது. கரடு, முரடான மலைப்பாதை முடியும் தருவாயில் திடீரென புலிக்கூடு பார்வையிலிருந்து மறைந்தது. அதுபோலவே பாதையும் தட்டையாய் மாறியது. அடுத்து வந்த ஒரு மலை முகட்டை சுற்றி திரும்பியபோது என் கண்கள் வியந்து விரிந்தன.

புலிக்கூட்டை நெருங்க, நெருங்க அதன் பேரழகு மனதை மயக்கியது. சிகப்பு மற்றும் தங்க நிறத்திலான கூரையுடன், வெள்ளைச் சுவர்களைக் கொண்ட மடாலயம் எவ்வளவு பெரியது என்பதையும் உணர முடிந்தது.

டைகர்ஸ் நெஸ்ட்டின் கம்பீரக் காட்சி இதுவரை ஏறி வந்த களைப்பை நீக்கி, புத்துணர்ச்சியை தந்தது. கூடவே மன வலிமையையும் தந்திருந்தது. வெறுமனே மடாலயத்தை தரிசிக்க வந்த நமக்கே இத்தனை மன வலிமை தேவையென்றால், இந்த மடாலயத்தை உருவாக்க, கரடுமுரடான மலை விளிம்பில் நின்று உழைத்திட்ட மனிதர்களின் மன உறுதியை பாராட்டியே ஆக வேண்டும்.

அங்கேயே நின்றுவிட்டால் எப்படி? வா என்னிடம் என்பதுபோல எதிரில் புலிக்கூடு புன்னகைத்தது. நடையைத் தொடர்ந்தேன். கிட்டத்தட்ட 700 படிகள் கீழே இறங்கி, பின் 250 படிகள் மேலே ஏற வேண்டும். ஏனெனில் நாங்கள் உண்மையில் புலிக்கூடு இருந்ததை விட சற்று உயரத்தில் இருந்தோம். அதைக் கடந்த பின் மடாலய வாயிலில் அனுமதிச்சீட்டு சரி பார்க்கப்பட்டு வந்த நேரம் அதில் குறிக்கப்பட்டது. நேரம் சரியாக காலை 11.30 மணி.

நாம் கொண்டு சென்ற பைகள், அலைபேசி, நடைக்குச்சி போன்ற அத்தனையும் அலுவலக அறைக்குள் வாங்கி வைக்கப்படுகின்றன. மடாலயத்தின் புனிதத்தை, அமைதியை, கலாசாரத்தை கெடுப்பவை என எதுவும் இங்கே அனுமதிக்கப்படுவதில்லை'' என்றவர், புலிக்கூடு மடாலயத்திற்குள் சென்றுவந்த சுவாரசியங்களை பகிர்ந்து கொள்கிறார்.

''மடாலயத்தில் 8 குகைகள் உள்ளன, அவற்றில் சில மட்டுமே பொதுமக்கள் அணுகக்கூடியவை. இந்த மடங்களின் துறவிகள், இங்குள்ள குகைகளில் பல ஆண்டுகளாக வாழ்ந்து தியானம் செய்கிறார்கள். அதை அவர்களின் மகிழ்ச்சியான வீடு என்று அழைக்கிறார்கள். அங்கு சந்திக்க நேர்ந்த ஒரு துறவியுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போதே வழிகாட்டி, மழை வலுக்கும் முன், கீழிறங்க வேண்டும் என்றார் சைகையால். கொஞ்சமும் மனமின்றி, அங்கிருந்து கீழிறங்கத் தொடங்கினேன்.

வழிப்பாதையின் நடுவில் எதிர்மலையில் இருந்த சிற்றுண்டியகத்தில் தேநீர் வாங்கியதோடு எதிர் மலையில் வீற்றிருந்த புலிக்கூட்டை பார்த்தவாறே பருகத் தொடங்கி இருந்தேன். இல்லை, புலிக்கூட்டுடன், மனதார பேசக் தொடங்கியிருந்தேன்.

அந்தப் பொழுதில் கோப்பையை கையில் ஏந்தி நின்றதும், மறுபடியும் அபாயகரமான வளைவுகளில் பயணத்தை தொடர்ந்து கீழே வந்ததும், குதிரையேறி பயணித்ததும், எங்கள் வாகனத்திற்காக காத்து நின்றதும், ஏதோ மாய உலகத்தில் தானாக நடந்தது போன்றே எனக்கு தோன்றியது.

''நீங்கள் புலிக்கூடு மடாலயம் வந்து விடுவீர்கள் என்று காலையில் நான் நம்பவில்லை. பாதி தொலைவோடு போதும் என திரும்பி விடுவீர்கள்' என்று நினைத்தேன். ஏனெனில், அப்படித்தான் இங்கு பலரும் செய்வார்கள். குதிரையில் இருந்தும் விழுந்து விடுவீர்களோ? என்ற பயமும் என்னிடத்தில் இருந்தது'' என்றார், வழிகாட்டி.

''என்னை அழைத்ததும், இயக்கியதும், மனதை, உடலை, உணர்வை நிரப்பி அனுப்பியதும், புலிக்கூடாய் வீற்றிருக்கும் என் பிரபஞ்சம்'' என்று, அவருக்கு நான் எப்படி விளக்கிச் சொல்வேன். சிறு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு, வாகனத்தில் ஏறினேன்.

விடுதிக்கு திரும்பும்போது தொலைவில் மீண்டும் புள்ளியாய் தெரிந்த புலிக்கூட்டிற்கு, என் பிரபஞ்சத்திற்கு மனதில் நன்றி கூறிக்கொண்டே வந்தேன். சொர்க்கம் என்பது பேரானந்தமும், பேரமைதியும் தவழும் இடம் என்றால், பேரானந்தமும், பேரமைதியும் நம் உணர்வு என்றால், அந்த உணர்வை நான் எட்டி வந்தேன் என்பதில் துளியும் ஐயமில்லை. நான் சொர்க்கத்தின் வாயிலை தொட்டு வந்தேன் என்றுதானே அர்த்தம்.

அந்த அர்த்தத்தை, தன்னை நாடி, தேடி, ஓடி வரும் அனைவருக்கும் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளானாலும் பூட்டானின் புலிக்கூடு என்றும் கொடுத்துக் கொண்டே இருக்கும்'' என்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்