தலைமுறைகளை கடந்து பலன் தரும் பலா
பலாவை ஊன்றி 5 ஆண்டுகள் ஆகி விட்டால், அது 50 தலைமுறைக்கு பலன் கொடுக்கும். 1500 ஆண்டுகள் வரை இருக்கும்.
முக்கனிகளில் தித்திக்கும் சுவை நிறைந்த 2-வது பழமாக பலா விளங்கி வருகிறது. பலா என்று சொன்னால் அனைவரின் நினைவுக்கும் வருவது பண்ருட்டி. ஆம்... இங்கு விளையும் பலா பழங்கள் மற்ற இடங்களை விட சுவை நிறைந்ததாக இருக்கிறது. இதனால் பண்ருட்டி பலா பழங்கள் மும்பை வரை உலா வருகிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் பண்ருட்டி பலாவுக்கு தனி மவுசு உண்டு என்றால் அது மிகை அல்ல.
பலாவின் ரகங்கள் சுவையை தீர்மானிப்பதில்லை. பலாப்பழங்கள் விளையும் நிலம் தான் சுவையை தீர்மானிக்கின்றன என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா!
ஆம்! இது தான் உண்மை.
மானாவாரி நிலங்களில் விளையும் பலா பழங்கள் சுவை மிகுந்ததாகவும், தண்ணீர் பாங்கான இடங்களில் உள்ள மரங்களில் விளையும் பழங்கள் சுவை குறைந்ததாகவும் இருக்கும். ஏனெனில் நீர்பாங்கான இடத்தில் விளையும் பலா பழத்தின் சர்க்கரை சத்தை நீரானது நீர்க்கச்செய்து விடுவதால் இனிப்பு சுவை குறைந்து விடுகிறது. பழங்களின் வெளித்தோற்றத்தைப் பார்த்து சுவையானது தானா? என்று கணிக்க முடியாது, பலாப்பழச்சுளையை சுவைத்து பார்த்தே சுவையை அறிய முடியும்.
பலா மரத்தில் ஒரு பூக்காம்பில் அதிகபட்சமாக 4 காய்கள் வரையும், ஒரே மரத்தில் அதிக பட்சமாக 750 காய்கள் வரையும் காய்க்கும். ஒரு காய் குறைந்த பட்சம் ½ கிலோ முதல் அதிகபட்சமாக 100 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும்.
ருசியான பலா பழத்தின் கொட்டைகளில் இருந்து கிடைக்கும் கன்றுகள் அனைத்தும் தாய் மரத்தைப்போல் ருசியான பழங்களை தராது. ஏனெனில் ஒவ்வொரு பூவும் (சுளையும்) வெவ்வேறு மரத்தின் ஆண் பூக்களுடைய மகரந்தங்களால் கருவுற்றிருக்கலாம். ஆகவே ஒரே பழத்தில் உள்ள கொட்டைகளில் இருந்து உருவாகும் கன்றுகள் தாய் மரத்தைப் போல் ருசியான கனிகளை தரும் என்று எதிர்பார்க்க கூடாது என்று வேளாண் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
* கற்பக விருட்சம்
ஆனால் பலா என்றால், அதன் பழத்தை மட்டும் சாப்பிட்டு விட்டு கொட்டையை தூக்கி வீசி எறிந்து விடுவோம். மற்றவை பலன் தராது என்று பெரும்பாலானோர் நினைத்து விடுகின்றனர். அது உண்மை அல்ல.
பலாவில் உள்ள அனைத்தும் பலன் தரக்கூடியது. இதனால் தான் வேண்டியவற்றை தரும் கற்பக விருட்சம் பலா என்று கூறுகின்றனர்.
''பலாப்பழத்தின் சுளைகளை அப்படியே எடுத்து சாப்பிடுவது போல், பலாப்பழங்களில் இருந்து ஜூஸ், அல்வா, அப்பளம், வற்றல் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து சாப்பிடலாம். இதை விற்பனை செய்து லாபமும் அடையலாம். தற்போது வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் பலாவில் மதிப்பு கூட்டிய பொருட்களை விற்பனை செய்து பயன் அடைந்து வருகிறார்கள்.
இதன்படி பச்சை பலா கறி துண்டு, பச்சை பலாக்கொட்டை, பலா பிஞ்சு ஊறுகாய், பலா உலர் வற்றல், பலா சுளை மாவு, பலாக்கொட்டை மாவு, பலாச்சுளை வற்றல், தேனில் ஊறிய பலாச்சுளை, தேனில் பலா குல்கந்து, பலாக்கொட்டை காபி, பலாச்சுளை அல்வா, பலா ஜாம் ஆகியவை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள்.
இது தவிர மானாவாரியில் பலா சாகுபடி செய்வதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் வருமானத்தை விவசாயிகள் பெற முடியும்'' என்றும், இந்த பலாவின் முக்கியத்துவம் பற்றியும் ஓய்வு பெற்ற வேளாண்மை அதிகாரி ஹரிதாஸ் நம்மிடம் பகிர்ந்தார்.
* தலைமுறை
அவர் கூறுகையில், ''பலாவின் பெருமைகளை அனைவருக்கும் கொண்டு செல்லும் விதமாக பலா திருவிழாவை 2-வது ஆண்டாக பண்ருட்டி பத்திரக்கோட்டையில் நடத்தி வருகிறோம். அண்டை மாநிலமான கேரளாவில் பலா சாகுபடி காலத்தில் வாரந்தோறும் பலா வாரம் கொண்டாடுகிறார்கள்.
அதிகமாக உற்பத்தியாவதால், அதை அழிக்க வேண்டும். அனைவரும் சாப்பிட வேண்டும் என்ற நோக்கில் கொண்டாடுகிறார்கள். அதன்படி தமிழக மக்களும் பலாவை நிறைய இடங்களில் சாகுபடி செய்ய வேண்டும்.
நிலத்தடி நீர் பாதிக்காது. இடு பொருட்கள், ரசாயன உரம் எதுவும் தேவையில்லை. பலாவை ஊன்றி 5 ஆண்டுகள் ஆகி விட்டால், அது 50 தலைமுறைக்கு பலன் கொடுக்கும். 1500 ஆண்டுகள் வரை இருக்கும். பலாவுக்கு சாவு கிடையாது. அதை வெட்டாமல் பாதுகாக்க வேண்டும்.
ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு பலா தோட்டத்தை கொடுத்தால், அந்த தலைமுறைக்கு அனைத்தும் கிடைக்கும். வருமானம், வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி என அனைத்தும் உயரும். பலா மரம் வைத்திருந்தால், அடுத்தவர்களிடம் கடன் வாங்கும் நிலைக்கு செல்லமாட்டார்கள். நஷ்டம் இல்லாத ஒரே தொழில். பலாவை தொடர்ந்து பயிரிட்டால் வீட்டையும், நாட்டையும் பாதுகாக்க முடியும். பாருக்குள்ளே நல்ல மரம் பலா மரம் என்று கடந்த 2006-ம் ஆண்டு முதல் சொல்லி வருகிறேன். கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்சமாக இருக்கிறது.
* பலா கொட்டை மாவு இட்லி
பலா கொட்டையை அவித்து சர்க்கரை போட்டால் மில்க் ஷேக் கிடைக்கும். பலா கொட்டை மாவில் இருந்து இட்லி, தோசை செய்யலாம். பலா சுளையில் முறுக்கு, அல்வா, வற்றல், ஐஸ்கிரீம் என ஆயிரம் விதமான பொருட்களை தயாரித்து சாப்பிட முடியும். அதை விற்பனை செய்து அதிக வருமானத்தை ஈட்ட முடியும். 300 முதல் ஆயிரம் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து கேரளா, கர்நாடகாவில் விருது பெற்ற முன்னோடி விவசாயிகளும் உள்ளனர்.
பலா ஒரு அதிசயம். அதில் உள்ள ரகசியங்கள் வெளியே போகாமல் உள்ளது. அந்த ரகசியங்களை வெளியே கொண்டுபோக வேண்டும் என்பதற்காகத் தான் முயற்சி எடுத்து வருகிறோம். பலாவின் முக்கியத்துவம் பற்றி யாருக்கும் தெரியவில்லை. எந்த விழாக்களும் பலா இல்லாமல் கொண்டாடக்கூடாது.
என்னுடைய தோட்டத்தில் 120 வகையான பலாவை தொகுத்து வளர்த்து வருகிறேன். மேலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, புனே, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ரகங்கள் உள்ளன. தற்போது 60-க்கும் மேற்பட்ட ரகங்கள் காய்த்து உள்ளன.
ஒரு ஏக்கர் பலா சாகுபடியில் குறைந்தது ரூ.1 லட்சமும், அதிகபட்சம் ரூ.3 லட்சமும் வருமானம் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு 80 முதல் 100 மரங்கள் வளர்க்க வேண்டும். 6-வது ஆண்டில் இருந்து மகசூல் கிடைக்கும். ஒரு மரத்தின் சராசரி மகசூல் 200 முதல் 250 கிலோ வரை, 20 டன்கள் கிடைக்கும். ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ. 2½ லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும். இதை நம்பி பயிரிடலாம். தற்போது நாம் பலாவில் இருந்து 25-க்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டிய பொருட்களை தயாரிக்க முடியும்'' என்றார்.
மருந்தாகும் பலா
பச்சை பலாக்கறி - நீரிழிவு நோயை போக்கும்
பலாக்கொட்டை - உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்
பலா நார்ச்சத்து - உடல் பருமனை போக்கும்
பலாச்சுளை - தீராத மலச்சிக்கலை போக்கும்
பலாச்சுளை, கொட்டை - உயிர் கொல்லி நோயை குணப்படுத்தும்
பலாச்சுளை சாறு - சிறுநீரக குழாய் தொற்றைப் போக்கும்
பலா ரகங்கள்
அதிக எடையுள்ள பழம் தரும் அதிசய மரமாக பலா உள்ளது. இது பல்வேறு சூழ்நிலைகளில் வளரும் அற்புதமான மரம். இயற்கை சீற்றங்களை தாங்கி வளரும். பலா மரங்களை அதன் பழச்சுளைகளின் நிறத்தை வைத்து மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை என பல நிறங்களில் வகைப்படுத்தலாம். முன்பு பண்ருட்டி பகுதியில் வெள்ளை மற்றும் மஞ்சள் ரகங்கள் மட்டுமே விளைந்தன. தற்போது அனைத்து நிறங்களிலும் பலா மரத்தை வளர்க்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு பாலூர்-1, பாலூர்-2, பேச்சிப்பாறை-1, ராஜ ருத்ராட்சே, சூர்யா தாய்லாந்து ஆரஞ்சு, தேன் மஞ்சள், ரூபி ஆரஞ்சு, டூபர்கி பிங், ராணிப்பேட்டை பலா, மிருது பலா, பப்புள்கம், அசோக் மஞ்சள், ஆயிரம் காய்ச்சி, பண்ருட்டி பலா, ஏ.2 பிரிக்ஸ், எஸ்.ஜே.2, டெனி கிரீம், நெல்லை அல்வா, ஹம்லஸ் வெள்ளை ஆப்பிள், வியட்நாம் சூப்பர் ஏர்லி, பெங்களூரு கேன்டி, தேன் பலா, தங்கப்பலா, லால்பாக் மதுரா, ஒடுக்கு பலா, சங்கரா, சித்து, செம்பருத்தி, மங்களா சிவப்பு, அசோகா சிவப்பு, செந்தூரா, பின் பலா, மினி மலேசியா, மகா பத்ரி, சிறு பத்ரி, சதம் பத்ரி, மிருது பத்ரி, மிட்டாய் பலா போன்ற பல்வேறு வகையான பலாக்கள் உள்ளன.