மருத்துவ சேவைக்கு கிடைத்த மகத்தான விருது

நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக பணியாற்றும் செவிலியர்களை தேர்வு செய்து அவர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது.;

Update:2023-07-23 10:07 IST

 செவிலியர்களுக்கான மிக உயரிய கவுரவம் ஆகும். இந்த ஆண்டுக்கான விருதினை, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஆர்.ரெட்டியப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் சுகந்தி பெற்றிருக்கிறார்.

தான் ஆற்றிய சமூக பணி, விருது குறித்த அனுபவங்களை அவர் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

* உங்களைப் பற்றி சிறு அறிமுகம் கொடுங்கள்?

என்னுடைய பெயர் சுகந்தி. நான் ஆர்.ரெட்டியப்பட்டியில் செவிலியராக பணியாற்றி வருகிறேன். கணவர் பெயர் கனகராஜ். வங்கியில் பணியாற்றுகிறார். எங்களது மகள் வைஷ்ணவி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு படித்து வருகிறாள்.

* செவிலியர் பணியை தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

எனக்கு சிறு வயது முதலே, மக்களுடன் இணைந்து பொதுச்சேவை ஆற்றும் ஆசையும், ஆர்வமும் இருந்தது. குறிப்பாக, வலிகள் நிறைந்த கடினமான வேளைகளில், மக்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களுக்கு உதவிட ஆவலாக இருந்தேன். அதற்கு செவிலியர் பணி, சிறப்பானதாக இருக்கும் என்ற அடிப்படையில்தான், இந்த பணியை தேர்வு செய்தேன். எனது குடும்பத்தில் இதுவரை செவிலியராக யாரும் ேவலை செய்ததில்லை. ஆதலால் இந்த பணியில் என்னை இணைத்துக் கொண்டு என்னால் முடிந்த அளவிற்கு பொதுமக்களுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டேன்.

* உங்களது செவிலியர் பணி எங்கு, எப்போது தொடங்கியது?

1996-ம் ஆண்டு கரூர் மாவட்டம் சேங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் என்னுடைய சேவை பணியை தொடங்கினேன். அங்கு 8 மாதங்கள் பணியாற்றினேன். பின்னர் 1997-ம் ஆண்டு ஆர்.ரெட்டியப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டேன். அன்றிலிருந்து இன்றுவரை இங்கு தான் சேவை பணியாற்றி வருகிறேன்.

* நீங்கள் மேற்கொள்ளும் பணி குறித்து விளக்குங்கள்?

ஆர்.ரெட்டியப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணிகளை, ஆரோக்கியமாக கவனிப்பதுதான் என்னுடைய தலையாய கடமை. அவர்கள் முதன் முதலில் கர்ப்பிணி என்பதை பதிவு செய்ய வரும் போதில் இருந்து குழந்தை பெற்றெடுக்கும் வரை என்னுடைய கண்காணிப்பிலேயே வைத்து கொள்வேன்.

கர்ப்பிணிகள் முதலில் பதிவு செய்த உடன் அவர்களுக்கு தேவையான தடுப்பூசி, சத்து மாத்திரை, இரும்புச்சத்து குறைவாக இருந்தால் அவற்றை சரி செய்யும் கவனிப்புகள், தேவைப்பட்டால் ரத்தம் ஏற்றுதல் என கர்ப்பிணி பெண்களை ஆரோக்கியமாக கவனித்து, சுக பிரசவத்திற்கு தயார்படுத்தி குழந்தை பெற்றெடுக்க தேவையான அனைத்துக்கும் ஏற்பாடு செய்து கொள்வேன். அதேபோல குழந்தை பெற்ற பிறகும், அந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு தாயையும், சேயையும் கவனித்து கொள்வேன். இதுமட்டுமின்றி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருபவர்களுக்கு ஏதேனும் முதலுதவி தேவைப்பட்டாலும் செய்வேன்.

* கர்ப்பிணி பெண்களோடு பயணிக்கிறீர்கள். உங்களது பணியில் பிரசவம் பார்த்த அனுபவம் உண்டா?

தற்போது கிராமப்புறத்தில் உள்ள மருத்துவமனையிலும் பிரசவம் பார்க்கும் வசதி வந்து விட்டது. ஆனால் முன்பு நாங்கள் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு பிரசவம் பார்ப்போம். அந்தவகையில் நான் கர்ப்பிணிகளின் வீட்டிற்கே சென்று இதுவரை 30 பேருக்கு பிரசவம் பார்த்து உள்ளேன். அத்தனையும் சுக பிரசவம் தான்.

* கொரோனா கால பணிகள் எப்படி இருந்தது?

கொரோனா காலகட்டத்தில் செவிலியர்கள், மருத்துவர்கள் ஆற்றிய சேவையை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த அளவிற்கு மிகவும் கஷ்டப்பட்டோம். 4 முககவசங்களை அணிந்து கொண்டு தான் பணியாற்றினேன். தண்ணீர் கூட குடிக்க முடியாது. விடுமுறை இல்லாமல் பணியாற்றினேன். உடல் நிலை சரியில்லை என்றாலும் பணிக்கு சென்று விடுவேன். கொரோனா காலகட்ட பணிகளை என்றுமே வாழ்வில் மறக்க முடியாது.

* உங்கள் பணிக்கு, விருது அங்கீகாரம் எப்படி கிடைத்தது?

'நைட்டிங்கேல்' விருது பற்றி எனக்கு நன்கு தெரியும். ஆனால் நமக்கு கிடைக்குமா? என்ற தயக்கத்தில், இருந்தேன். இருப்பினும் இந்த முறை நாமும் முயற்சி செய்யலாம் என்ற எண்ணத்தில் விண்ணப்பித்தேன். அதாவது என்னை பற்றிய முழு விவரம், பணி விவரம், புகைப்படம் ஆகியவற்றுடன் வட்டார மருத்துவ அலுவலரின் சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து அனுப்பினேன். என்னுடைய சேவைக்கான அங்கீகாரமாக, 'நைட்டிங்கேல்' விருது கவுரவம் கிடைத்துள்ளது.

 

* விருது கிடைத்த தகவல் எப்படி வந்தது?

என்னை போன்று நிறைய பேர் இந்த விருதிற்காக விண்ணப்பம் செய்திருந்தனர். இருப்பினும், எனக்கு கிடைக்குமா என்ற தயக்கத்தில் இருந்தேன். விண்ணப்பம் செய்து சில நாட்கள் கழித்து ஒரு போன் வந்தது. அப்போது அவர்கள் நீங்கள் நைட்டிங்கேல் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளீர்கள் என கூறினர். அந்த தகவலை கேட்டதும் நான் அனுபவித்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

* விருது பெற்றபோது, எப்படி உணர்ந்தீர்கள்?

நான் விருது வாங்க செல்லும்போது சற்று தயக்கத்துடன் தான் சென்றேன். இருந்தாலும் ஜனாதிபதி கையால் விருது வாங்குவதை நினைக்கும்போது, மகிழ்ச்சி இரட்டிப்பானது. ஒரு பெண்ணிற்கான விருது கவுரவத்தை (எனக்கு), மற்றொரு பெண் வழங்கி கவுரவிப்பது (பெண் ஜனாதிபதி) எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம். இந்த விருது என்னை மேலும் சிறப்பாக பணியாற்ற ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.

* கிராமங்களில் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது ?

நான் பணியாற்றியது, ஆர்.ரெட்டியப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் என்றாலும் எனக்கு பணி ஒதுக்கப்பட்ட இடம் பெருமாள் தேவன் பட்டியில் உள்ள துணை சுகாதார நிலையம். அது ஒரு ராணுவ கிராமம். அதாவது அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் ராணுவத்தில் தான் பணியாற்றுகின்றனர். என்னுடைய மருத்துவசேவையை உணர்ந்து, அவர்கள் பெரும்பாலும் வெளியில் மருத்துவம் பார்ப்பதே இல்லை. அதேபோல இலங்கை அகதிகள் முகாம் உள்பட 18 கிராமங்கள் என்னுடைய கண்காணிப்பில் உள்ளன. இந்த கிராமங்களில் கர்ப்பிணிகள் மட்டுமின்றி காய்ச்சல், வயிற்றுப்போக்கு என எதுவாக இருந்தாலும் என்னை தேடி தான் வருவார்கள்.

அவர்கள் மிகவும் பாசத்துடன் பழகக்கூடியவர்கள். வீட்டில் ஒருவர் போல நினைத்து என்னிடம் பழகுவார்கள். அவர்களுக்கு சேவை யாற்றிய அனுபவம் எனக்கு மகிழ்ச்சியை தந்தது.

* எதிர்கால திட்டம் பற்றி கூறுங்கள்?

இந்த விருது என்னை மேலும் மேலும் சேவை பணியாற்ற ஊக்கப்படுத்துகிறது. மற்றவர்கள் குறை சொல்ல முடியாத அளவிற்கு நடந்து கொள்ள வேண்டும் என மிகுந்த கவனத்துடன் செயல்படுவேன். இதுபோன்ற நடைமுறைகளால் தான் இந்த விருது கிடைத்தது. அதுவும் நான் விண்ணப்பம் செய்த முதல் முயற்சியிலேயே இந்த விருது கிடைத்தது, கடவுள் எனக்கு கொடுத்த பெரும் பாக்கியம்.

என்னுடைய கடைசி மூச்சு வரை, சேவை பணி தொடரும். என்னுடைய சேவைக்கும், உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரம் தான் இந்த விருது என புன்னகையுடன் கூறி கொண்டு தனது மருத்துவ பணியை தொடங்க புறப்பட்டார், நைட்டிங்கேல் விருது வென்ற சுகந்தி.

ஒரு பெண்ணிற்கான விருது கவுரவத்தை (எனக்கு), மற்றொரு பெண் வழங்கி கவுரவிப்பது (பெண் ஜனாதிபதி) எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம். இந்த விருது என்னை மேலும் பணியாற்ற ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்