சைக்கிளிங்கில் பதக்கங்களை குவிக்கும் `பறக்கும் பாவை'..!

படிப்பாக இருந்தாலும் சரி, விளையாட்டாக இருந்தாலும் சரி மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் முழு முயற்சியோடு பயிற்சி மேற்கொண்டால் வெற்றி பெறலாம்.

Update: 2023-06-06 13:48 GMT

வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் காற்றைக்கிழித்துக்கொண்டு சைக்கிளிங்கில் பறக்கும் பாவையாக பதக்கங்களை குவிக்கிறார், இந்த மாணவி. ஆம்... அவர் தான் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடைக்கு செல்லும் வழியில் குட்டையூர் என்னும் கிராமத்தை சேர்ந்த தபித்தா.

15 வயதே ஆன இவர் தற்போது மேட்டுப்பாளையம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று 11-ம் வகுப்பில் காலடி யெடுத்து வைக்க உள்ளார். சைக்கிளிங் போட்டியிலும் சாதித்து வரும் அவரிடம் நடத்திய நேர் காணல் இதோ...

சைக்கிளிங் போட்டி மீது ஆர்வம் வந்தது எப்படி?

நான் ஆரம்பத்தில் கோவை தீத்திப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தேன். 7-ம் வகுப்பு படிக்கும்போது அந்த பள்ளியில் சைக்கிளிங் போட்டிக்காக மாணவர்கள் சிலர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அந்த சைக்கிள் நாம் சாதாரணமாக ஓட்டும் சைக்கிள் மாதிரி இல்லாமல் வித்தியாசமாக தெரிந்தது. அப்போது அந்த மாணவர்களிடம் சென்று விவரம் கேட்டேன். அப்போதுதான் அது போட்டி ரீதியாக ஓட்டும் சைக்கிள் என்பதும், அவர்கள் சைக்கிள் பந்தயத்திற்கு தயாராவதும் தெரியவந்தது. இதனால் எனக்கும் அந்த சைக்கிளிங் பயிற்சி பெற்று, போட்டியில் சேர வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

எத்தனையோ விளையாட்டு போட்டிகள் இருந்தபோதிலும் சைக்கிளிங் போட்டியை தேர்ந்தெடுத்தது ஏன்?

எனக்கு விளையாட்டுகள் மீது ஆர்வம் உண்டு. இதனால் கூடைப்பந்து உள்பட பல்வேறு போட்டிகளில் குழுவாக சோ்ந்து பங்கேற்று விளையாடி இருக்கிறேன். ஆனால் அதுபோன்ற விளையாட்டுகளில் ஒரு அணியுடன் சேர்ந்து தான் விளையாடி சாதிக்க முடியும் என்பதால், தனித்திறனை வெளிப் படுத்தும் வாய்ப்பாக சைக்கிளிங் போட்டி என்னை கவர்ந்தது. இதனால் இதில் கடின பயிற்சிகள் பெற்றேன். தொடர்ந்து சாதனை படைத்து வருகிறேன்.

சைக்கிளிங் பயிற்சியாளர்கள் கொடுக்கும் பயிற்சி மற்றும் எனது தீவிர முயற்சி தான் சைக்கிளிங் போட்டியில் சாதிக்க ைவக்கிறது.

சைக்கிளிங் போட்டியில் எத்தகைய சாதனைகளை படைத்து இருக்கிறீா்கள்?

கடந்த 2022-ம் ஆண்டு அசாமில் நடந்த 14 வயதுக்குட்பட்டோர் டைம் ட்ரெயில் சைக்கிள் போட்டியில் 500 மீட்டர் தூரத்தை 42 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றேன். அதன்பிறகு 16 வயதுக்குட்பட்டோர் டீம் டைம் ட்ரெயில் சைக்கிள் போட்டியில் வெள்ளிப் பதக்கங்களை வென்றேன். மேலும் இந்த ஆண்டு மராட்டிய மாநிலம் நாசிக்கில் நடந்த 10 கிலோமீட்டர் டைம் டிரெயில் போட்டியில் தங்கப் பதக்கமும், டீம் டைம் டிரை 20 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற 16 வயதுக்கான சீனியர் பிரிவில் கலந்து கொண்டு வெண்கலப்பதக்கமும் வென்று உள்ளேன். தேசிய அளவில் மட்டும் 4 பதக்கங்களை பெற்று உள்ளேன். ஒட்டுமொத்தமாக இதுவரை 10-க்கும் மேற்பட்ட பதக்கங்கள், சான்றிதழ்கள் பெற்று உள்ளேன்.

சைக்கிளிங் பயிற்சி எப்படி இருந்தது?

தேசிய அளவிலான போட்டிக்கு செல்லும் முன்பு நான் அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் பயிற்சிக்கு சென்றுவிடுவேன். ஏனென்றால் ஒருநாளைக்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வரை சைக்கிள் ஓட்ட வேண்டும். சைக்கிளில் கேரளாவில் கோகுலம் ஹைவேஸ் ரோட்டில் பயிற்சி எடுப்பேன். 50 கிலோ மீட்டர் தூரம் ஒரு பாதையிலும், மீதமுள்ள 50 கிலோமீட்டர் வந்த பாதையிலேயே சென்று பயிற்சியை நிறைவு செய்வேன். காலையில் தாமதமாக சென்றால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் பயிற்சிக்கு இடையூறு ஏற்படும். இதன்காரணமாக தான் அதிகாலையில் பயிற்சியை தொடங்குகிறேன். இதில் ஆண்களும் சேர்ந்து பயிற்சிக்கு வருவார்கள். அவர்களுக்கு இணையாக சைக்கிளை ஓட்டி பயிற்சி பெற வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் பயிற்சியை நிறைவு செய்தால் தான் பயிற்சியும் திருப்தியாக இருக்கும். போட்டியில் பங்கேற்கும்போதும் வெற்றி இலக்கை அடைய உதவியாக இருக்கும்.

சைக்கிளிங் போட்டி கடினமாக இருக்குமா?

மிகவும் கடினம் தான். சாலையிலும், தனி சைக்கிளிங் டிராக்கிலும் போட்டி அரங்கேறும். அதில் சாலையில் பல்வேறு வாகனங்கள் வரும் என்பதால் மிகவும் கவனமாக சைக்கிளை இயக்க வேண்டும். ஏதாவது வாகனம் சைக்கிள் மீது மோதினாலோ அல்லது தட்டிவிட்டாலோ சேதம் நமக்கு தான்.

உங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாதது எது?

சைக்கிளிங் போட்டியில் கலந்து கொண்டு பல வெற்றிகளை பெற்றபோதும் குடும்ப சூழ்நிலையால் சொந்தமாக சைக்கிள் இல்லையே என்ற கவலை எனது மனதில் இருந்து கொண்டே இருந்தது. இதுதொடர்பாக கடந்த 3 மாதங் களுக்கு முன்பு மாவட்ட விளையாட்டு அலுவலர் மூலம் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்டம் செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் கோரிக்கை அளித்து இருந்தேன். உடனடியாக அவர் அதை நிறைவேற்றி விலை உயர்ந்த சைக்கிள் வாங்கி கொடுத்ததுடன், 2 ஸ்பேர் வீல்களும் கொடுத்து உதவியது என்னால் என்றுமே மறக்க முடியாது.

ரூ.13.99 லட்சம் மதிப்பிலான சைக்கிளை தமிழ்நாட்டிலேயே முதல் மாணவியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் பெற்றதை, அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.

சைக்கிளில் சாதனை செய்ய வாழ்க்கையில் வறுமை இடையூறாக இருந்த போதும் எனது மாபெரும் கனவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலம் நிறைவேறி உள்ளது. இப்படியொரு நெகிழ்ச்சியான அனுபவத்தை கொடுத்தவருக்கு, நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

உங்களிடம் பிடித்தது என்ன?

வெற்றிக்காக கடுமையாக உழைப்பதும், எடுத்த காரியத்தை உடனுக்குடன் செய்து முடிப்பது எனக்கு பிடித்த விஷயங்கள். அத்துடன் எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை விரைவில் செய்து முடிப்பேன். இறுதியில் அதில் வெற்றியும் பெறுவேன்.

உங்களின் அடுத்தகட்ட ஆசை என்ன?

தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் சைக்கிளிங் போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது லட்சியம். இதற்காக கடும் பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன்.

தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு தாவியது ஏன்?

10-ம் வகுப்பை தனியார் பள்ளியில் தான் படித்தேன். அதன்பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக என்னால் அங்கு தொடர்ந்து படிக்க இயலவில்லை. இதனால் மேட்டுப்பாளையம் அரசு பள்ளியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் 10-ம் வகுப்பில் பாதியில் சேர்ந்து படித்தேன். படிப்புடன் சைக்கிளிங் பயிற்சி, தேர்வுக்கு பயிற்சி என்று இரு பயிற்சிகளையும் சிறப்பாக செய்தேன். இதனால் தற்போது இரண்டிலும் வெற்றிபெற்று உள்ளேன்.

கடந்த ஒரு ஆண்டாக சைக்கிளிங் போட்டிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள எல்.என்.சி.பி.இ. பயிற்சி மையத்தில் தங்கி இருந்து இடைவிடாது பயிற்சி பெற்று வருகிறேன். காலை பயிற்சியை முடித்த பின்னர் ஆன்லைன் வகுப்பில் பள்ளி பாடங்களை படிப்பேன். தற்போது 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 11-ம் வகுப்புக்கு செல்ல உள்ளேன்.

உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்களேன்?

எனது தந்தை சசி. தாய் ஜெயந்தி. எனது தாய் கடந்த ஒரு ஆண்டாக மஸ்கட் நாட்டில் வீட்டு வேலை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். எனக்கு ஒரு அண்ணன் உள்ளார். அவர் நான்கு சக்கர வாகன மெக்கானிக்காக பணி புரிகிறார்.

ஆசிரியர்கள், சக மாணவ-மாணவிகள் உங்களை எப்படி பார்க்கிறார்கள்?

எனக்கு ஆசிரியர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறாா்கள். தேர்வு நேரத்தில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள். ஆன்லைன் மூலம் படிக்க ஆதரவு அளித்து வருகிறார்கள். சக மாணவ-மாணவிகள் நன்றாக ஊக்கப்படுத்துகிறார்கள். போட்டிக்கு செல்லும் முன்பு வெற்றியுடன் வா... என்று அன்போடு கூறி வழியனுப்பிவைப்பார்கள்.

சக மாணவிகளுக்கு கூறும் அறிவுரைகள் என்ன?

படிப்பாக இருந்தாலும் சரி, விளையாட்டாக இருந்தாலும் சரி மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் முழு முயற்சியோடு பயிற்சி மேற்கொண்டால் வெற்றி பெறலாம். தூக்கி விட யாரும் இல்லையே என்ற எண்ணம் தோன்ற கூடாது. முயற்சி தான் நம்மை தூக்கிவிடும் ஆற்றல் கொண்ட ஆக்கப்பூர்வமான சக்தி என்பதை மறந்துவிடக்கூடாது.

Tags:    

மேலும் செய்திகள்