ஒரே மாதம்-தேதியில் பிறந்த 9 பேர்
குடும்பத்தின் மூத்த குழந்தை பிறந்த அதே தேதியில் அடுத்த குழந்தை பிறப்பது அசாதாரணமானது. அதுவும் ஒன்றல்ல... இரண்டல்ல... ஒரே குடும்பத்தில் 7 குழந்தைகள் ஒரே தேதியில் பிறந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.;
அவர்களின் பெற்றோரும் கூட ஒரே தேதியில் பிறந்தவர்கள் என்பது இன்னும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.ஒரே தேதியில் பிறந்த அந்த 9 பேர் கொண்ட குடும்பம் பாகிஸ்தானில் வசிக்கிறது. அங்குள்ள லர்கானாவை சேர்ந்தவர்கள் அமீர் அலி-குதேஜா. இவர்கள் இருவரும் 1991-ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறார்கள். ஆகஸ்டு 1-ந்தேதி பிறந்த இவர்கள் அதே தேதியில்தான் திருமணமும் செய்திருக்கிறார்கள்.
முதல் குழந்தை சிந்து 1992-ம் ஆண்டு ஆகஸ்டு 1-ந் தேதி பிறந்திருக்கிறது. தங்கள் திருமண நாள் மற்றும் பிறந்த நாளில் குழந்தையும் பிறந்தது அவர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்திருக்கிறது. இது இயல்பாக நடந்த ஒரு விஷயம் என்றே கருதி இருக்கிறார்கள். ஆனால் இரண்டாவது குழந்தை இரட்டையர்களாக பிறந்திருக்கிறார்கள். அதுவும் ஆகஸ்டு 1-ந் தேதியில் பிறக்க இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
அதன் பின்பு ஒவ்வொரு குழந்தை பிறப்பும் ஆகஸ்டு 1-ந் தேதியில் தொடரவே குழந்தை பிறப்பை கொண்டாட தொடங்கிவிட்டார்கள். சிந்து, இரட்டையர்கள் சசுய் மற்றும் சப்னா, அமீர், அம்பர் மற்றும் இரட்டையர்கள் அம்மார் - அஹ்மர் என 7 குழந்தைகள் மற்றும் அமீர் அலி, குதேஜா என 9 பேரும் ஆகஸ்டு 1- ந்தேதியில் பிறந்தவர்கள் என்பதால் இந்த அசாதாரண சாதனையை கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்திருக்கிறது.
இதற்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த கம்மின்ஸ் குடும்பம் கின்னஸ் சாதனையை தன்வசம் வைத்திருந்தது. அந்த தம்பதிக்கு பிப்ரவரி 20-ந் தேதி ஐந்து குழந்தைகள் பிறந்திருந்தனர். தற்போது அந்த சாதனையை அமீர்அலி - குதேஜா குடும்பம் முறியடித்துள்ளது. ஒவ்வொரு குழந்தையும் இயற்கையான முறையிலேயே கருத்தரிக்கப்பட்டு சுகப்பிரசவத்தில் பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
சிசேரியன் மூலம் எந்த குழந்தையும் முன்கூட்டியே பிரசவிக்கப்படவில்லை. அதனால் ஆகஸ்டு 1-ந்தேதி இந்த குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாக மாறிவிட்டது. அதை தெய்வீகப் பரிசாக இந்த தம்பதியர் கருதுகிறார்கள். கடவுளின் சிறப்பு ஆசீர்வாதம் தங்களுக்கு கிடைத்திருப்பதாக கூறுகிறார்கள்.