விலை உயர்ந்த 7 மாம்பழங்கள்

‘பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் மாம்பழம் உலகளவில் விதவிதமான ரகங்களில் விளைவிக்கப்படுகிறது. அதற்கேற்ப அதன் சுவையும், அளவும், தரமும் மாறுபடுகிறது. அதுவே அதன் விலையையும் நிர்ணயிக்கிறது. உலக அளவில் அதிக விலை கொண்ட மாம்பழங்களில் 7 ரகங்கள் உங்கள் பார்வைக்கு..

Update: 2023-06-16 12:45 GMT

இந்த மாம்பழத்தின் பூர்வீகம் ஜப்பான். அங்குள்ள கியூஷு மாகாணத்தில் மியாசாகி நகரில் விளைவிக்கப்படுவதால் அதன் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. பொதுவாக மாம்பழங்கள் பச்சை, மஞ்சள் நிறத்தில் காட்சி அளிக்கும். ஆனால் இந்த மாம்பழம் காயாக இருக்கும்போது ஊதா நிறத்தில் காட்சி அளிக்கும்.

நுனிப்பகுதியில் பச்சை நிறத்தில் காணப்படும். பழுக்க தொடங்கியதும் ஊதா நிறத்தில் இருந்து அடர் சிவப்பு நிறமாக மாறும். டைனோசரின் முட்டை போன்ற தோற்றத்திலும் காட்சி அளிக்கும். அதனால் இதனை டிராகன் முட்டை என்றும் அழைக்கிறார்கள்.

இந்த மாம்பழம்தான் உலகிலேயே விலை உயர்ந்த ரகமாக கருதப்படுகிறது. ஒரு கிராம் மாம்பழம் சுமார் 1,500 ரூபாய் வரை விற்பனையாகிறது.

சிந்திரி

பாகிஸ்தான் நாட்டில் சிந்து மாகாணம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் இந்த மாம்பழம் பயிரிடப்படுகிறது. அதனால் சிந்திரி மாம்பழம் என்று அழைக்கப்படுகிறது. இது முட்டை வடிவத்தில் காட்சி அளிக்கும்.

இந்த பழம் சுவையானது மட்டுமல்ல நறுமணமும் மிக்கது. இதனை பழங்களின் ராணி என்றே அழைக்கிறார்கள். ஒரு கிலோ சிந்திரி மாம்பழத்தின் விலை இந்திய மதிப்பில் 3 ஆயிரம் ரூபாய்.

மணிலா

இதன் பூர்வீகம் பிலிப்பைன்ஸ். இது கராபோ மாம்பழம் என்றும் அழைக்கப்படுகிறது. 14 வகை மணிலா மாம்பழங்கள் உள்ளன. இந்த மாம்பழங்கள் கசப்பும், இனிப்பும் கலந்த சுவை கொண்டவை.

இதன் வித்தியாசமான சுவை இந்த பழத்திற்கு தனித்துவ அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு மணிலா மாம்பழம் 1500 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை விலை போகும்.

அல்போன்சா

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரபலமான மாம்பழ வகைகளுள் இதுவும் ஒன்று. மகாராஷ்டிரா, குஜராத் மாநிலத்தில் வல்சாத் மற்றும் நவ்சாரி பகுதிகளில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. இந்த பழம் 150 கிராம் முதல் 300 கிராம் வரை எடை கொண்டிருக்கும்.

நன்கு பழுத்த அல்போன்சா பழத்தின் தோல் தங்கம், மஞ்சள், சிவப்பு நிறம் கலந்த கவலையாக காட்சி அளிக்கும். இதன் அபார சுவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மாம்பழங்களின் பட்டியலில் இடம்பெற வைத்துவிட்டது. ஒரு டஜன் அல்போன்சா மாம்பழம் 2 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது.

கோஹிதூர்

மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியில் பிரத்யேகமாக விளைவிக்கப்படும் மாம்பழம் இது. 18-ம் நூற்றாண்டில் வங்காள நவாப் சிராஜ்-உத்-தவுலாவின் ஆட்சி காலத்தின் போது இந்த மாம்பழ ரகம் அறிமுகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த காலத்தில் பணக்காரர்கள் சாப்பிடுவதற்காகவே உருவாக்கப்பட்ட மாம்பழம் என்ற சிறப்பு பெயர் இதற்கு உண்டு. இப்போதும் அந்த அந்தஸ்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. ஒரு கோஹிதூர் மாம்பழத்தின் விலை சுமார் ரூ.1,500

ஹகுகின் நோ தையோ

மாமரங்கள் பொதுவாக வெப்பமண்டல சூழலில் வளரும் தன்மை கொண்டது. ஆனால் இந்த மா மரம் அதற்கு விதி விலக்கு. குளிர் சூழல்தான் இந்த மா மர வளர்ச்சிக்கு இதமாக இருக்கும். மைனஸ் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில்தான் இதனை வளர்க்க முடியும்.

இதற்காக கிரீன் ஹவுஸ் போன்ற பிரத்யேக கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். ஹகுகின் நோ தையோ என்றால் பனியில் சூரியன் என்று பொருள். ஒரு கிலோ மாம்பழத்தின் விலை சுமார் 19 ஆயிரம் ரூபாய்.

நூர்ஜஹான்

முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் மனைவி நூர்ஜஹான் பெயரில் அழைக்கப்படும் இந்த மாம்பழம் அரிய ரகமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கத்திவாடா என்ற இடத்தில் மட்டுமே இது விளைவிக்கப்படுகிறது.

அங்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே இந்த மாமரங்கள் இருக்கின்றன. அதனால் அறுகி வரும் மாம்பழ ரகங்களில் ஒன்றாக மாறி வருகிறது. இந்த மாம்பழம் மற்ற மாம்பழங்களை விட அதிக எடை கொண்டது. ஒரு பழம் அதிகபட்சமாக 5 கிலோ வரை எடை கொண்டிருக்கும். அதனால் இதன் விலையும் அதிகம். ஒரு பழம் 2 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்