செரிமான பிரச்சினைகளை சீர் செய்யும் 5 பழங்கள்

சாப்பாடு ருசியாக இருந்தால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுவிட்டு வயிறு வீக்கம், அஜீரணம், குமட்டல் உள்ளிட்ட செரிமான பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

Update: 2023-08-20 06:20 GMT

செரிமான அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு சில வகை பழங்கள் உதவி புரியும். குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

1. ஆப்பிள்

உலகம் முழுவதும் அதிகம் உண்ணப்படும் பழங்களில் ஒன்றாக ஆப்பிள் விளங்குகிறது. இதில் உள்ளடங்கி இருக்கும் பெக்டின் என்ற பொருள் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகிய இரண்டில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். அத்துடன் செரிமானத்தை மேம்படுத்தும். உடலில் உள்ள நச்சுகளை எளிதில் வெளியேற்றவும் துணை புரியும்.

2. கிவி

சிறந்த செரிமானத்திற்கு உதவும் மற்றொரு பழம் கிவி. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலமிளக்கியாகவும் செயல்படக்கூடியது. மேலும் இதில் உள்ள ஆக்டினிதின் என்ற நொதி, எளிதில் ஜீரணமாகாத புரதத்தை நொதிக்க செய்து, செரிமானத்தை துரிதப்படுத்தும்.

3. மாம்பழம்

மாம்பழங்களில் என்சைம்கள் உள்ளன. அவை செரிமான பாதையில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் உதவும். மேலும் மாம்பழத்தில் மிகுந்திருக்கும் நார்ச்சத்து பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கக்கூடியது. சாலட், ஜூஸ், ஸ்மூத்தி என மாம்பழத்தை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். அவற்றின் சத்துக்கள் வீணாகாது.

4. வாழைப்பழம்

வயிற்றுப்புண்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றல் வாழைப்பழத்துக்கு உண்டு. செரிமான அமைப்பின் செயல்பாடுகளை ஒழுங்கமைக்கும் தன்மையும் கொண்டது. வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் வாழைப்பழம் சாப்பிடுவது நிவாரணம் அளிக்கும். செரிமான கோளாறுகளை போக்கி இயல்பு நிலைக்கு திரும்ப வைக்கும்.

5. ஆப்ரிகாட்

இந்த பழத்தில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தக்கூடியது. அத்துடன் அதிக நார்ச்சத்தும் கொண்டிருப்பதால், செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவும். குடல் இயக்கம் சீராக நடைபெற தூண்டுவதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை நெருங்க விடாது.

வயிறு நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். அதை ஆரோக்கியமாக செயல்பட வைப்பது நமது கடமையாகும். செரிமான பிரச்சினைகளை எதிர்கொண்டால், இந்த பழங்களை சாப்பிடுவது நல்லது. அடிக்கடி இந்த பிரச்சினைகளை எதிர்கொண்டால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது.

Tags:    

மேலும் செய்திகள்