அமெரிக்காவில் படிப்பதற்கு சிறந்த 4 நகரங்கள்

இந்திய மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவான சூழல் கொண்ட சில அமெரிக்க நகரங்கள் உங்கள் பார்வைக்கு....

Update: 2023-06-09 13:30 GMT

உயர் கல்வி படிப்பை வெளிநாடுகளில் சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதிலும் அமெரிக்கா சென்று படிப்பது இந்திய மாணவர்கள் பலரது கனவாக இருக்கும். உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் பல அங்கு இருப்பதும், அங்கு பின்பற்றப்படும் கல்வி திட்டங்களும், அதன் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்புகளும் உலகம் முழுவதும் இருந்து மாணவர்களை அமெரிக்காவுக்கு படையெடுக்க வைக்கின்றன. ஆனால் கல்வி கட்டணம், இதர செலவுகளை சமாளிப்பதற்கு அதிக தொகை தேவைப்படும். தரமான கல்வியுடன், ஓரளவு செலவுகளை சமாளிக்க வைக்கும் சூழல் கொண்ட நகரங்களும் அங்கு உள்ளன.

1. டக்சன், அரிசோனா

தெற்கு அரிசோனாவில் அமைந்துள்ள டக்சன் நகரம், இந்திய மாணவர்களுக்கு ஏற்ற கட்டமைப்பை கொண்டது. இங்குள்ள அரிசோனா பல்கலைக்கழகம் 300-க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகளை வழங்குகிறது. பொறியியல், வணிகம் மற்றும் மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு புகழ் பெற்றது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்திய மாணவர்களுக்கு ஏற்ற கலை, கலாசார பின்னணியை கொண்டது.

இங்கு மாணவர்களின் படிப்புக்கு உதவும் வகையில் ஏராளமான அருங்காட்சியகங்கள் உள்ளன. இந்திய உணவகங்கள் மற்றும் மளிகைக் கடைகளும் இந்த பகுதியில் பரவலாக உள்ளன. அமெரிக்காவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு இந்த நகரம் சிறந்த தேர்வாக அமையும். இங்கு ஒரு படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் சராசரி மாத வாடகை 937 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 77 ஆயிரத்து 500). மளிகை பொருட்களுக்கான மாத சராசரி செலவு 278 டாலர் (ரூ.23 ஆயிரம்).

2. ஆஸ்டின், டெக்சாஸ்

ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இது உலகின் முதல் 50 பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் மற்ற முக்கிய நகரங்களுடன் ஒப்பிடும்போது ஆஸ்டினில் குறைவாகவே செலவாகும். அங்கு ஒரு படுக்கையறை கொண்ட குடியிருப்பின் சராசரி மாத வாடகை 1,200 அமெரிக்க டாலர்கள் (ரூ.99 ஆயிரம்).

இங்கு இந்திய உணவகங்கள் ஏராளம் உள்ளன. இந்திய கலாசார நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெறும். அதற்கேற்ப, இந்த நகரம் இந்திய சமூகத்தையும் கொண்டுள்ளது. இந்திய மாணவர்கள் வசிப்பதற்கு ஏற்ற வானிலையும் இங்கு நிலவுகிறது.

3. ராலே, வடக்கு கரோலினா

ராலே வளர்ந்து வரும் நகரமாகும். இதுவும் குறைவான செலவுகளுடன் உயர்தர வாழ்க்கை சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும். இங்கு ஸ்டேட் யுனிவர்சிட்டி, டியூக் யுனிவர்சிட்டி போன்ற சிறந்த பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவை கல்வியில் சிறந்து விளங்குகின்றன.

ராலேயில் சராசரி மாத வாடகை ஆயிரம் அமெரிக்க டாலர் (ரூ.82,600), இந்த நகரம் அனைத்து தரப்பினரையும் வரவேற்று உபசரிக்கும் சமூக கட்டமைப்பை கொண்டுள்ளது. கலாசார நிகழ்வுகளும் அரங்கேறும்.

4. பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா

இந்த நகரம் பிரபலம் அடையாமல் இருக்கலாம். ஆனால் இங்கு தங்கி படிப்பதற்கு மற்ற நகரங்களை விட குறைவாகவே செலவாகும். கார்னகி மெலன் பல்கலைக்கழகம் மற்றும் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம் போன்ற சிறந்த பல்கலைக்கழகங்கள் இங்கு உள்ளன. அவை சிறந்த ஆராய்ச்சி திட்டங்களுக்கு புகழ் பெற்றவை.

பிட்ஸ்பர்க்கில் சராசரி மாத வாடகை 900 அமெரிக்க டாலர்கள் (ரூ.74 ஆயிரத்து 500 ரூபாய்). இங்கு ஆராய்ச்சி படிப்புகளுக்கு உதவும் வகையில் ஏராளமான அருங்காட்சியகங்கள் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்