25 ஆண்டுகளில் 2,800 ஜோடிகளுக்கு திருமணம்..!

ஒரு திருமணத்தை நடத்தி முடிக்கவே, பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழலில், ஒன்றல்ல... இரண்டல்ல... மொத்தம் 2,823 இலவச திருமணங்களை, சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார்கள், அசேபா தொண்டு நிறுவனத்தினர்.

Update: 2023-09-21 11:54 GMT

இவர்கள் சமீபத்தில் கூட, விருதுநகருக்கு அருகே 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி முடித்ததோடு, அடுத்தடுத்த திருமண திட்டமிடல் பணிகளிலும் மும்முரம் காட்டுகிறார்கள். இலவச திருமணங்கள் மட்டுமின்றி, பல நல்ல காரியங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். இதுபற்றி மேலும் தெரிந்து கொள்ள, இதன் நிர்வாக இயக்குனரான லோகநாதனை சந்தித்து பேசினோம். அவர் பகிர்ந்து கொண்டவை இதோ...

''விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தோணுகால் பகுதியை மையமாக கொண்டிருந்தாலும், எங்கள் அமைப்பு தமிழகம் முழுக்க, பரவி இருக்கிறது. வளர்ச்சியில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய கிராமப்புற பகுதிகளை தேர்ந்தெடுத்து, அந்த கிராமத்திற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது எங்களது பிரதான பணி. அப்படி தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் பல கிராமங்களுக்கு, தண்ணீர் வசதி செய்து கொடுத்திருக்கிறோம். அதேபோல விவசாயிகளுக்கு தேவையானவற்றை பெற்று கொடுத்து அவர்கள் தடையின்றி விவசாயம் செய்ய உதவினோம்.

அப்போது தான் நிறைய பேர் திருமணம் செய்ய முடியாமலும், திருமணம் செய்து கடனில் மூழ்கி சிரமப்படுவதையும் அறிந்தோம். அவர்களுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இலவச திருமணங்களை நடத்தி வைக்க ஆரம்பித்தோம்'' என்று அமைப்பு பற்றி சிறு அறிமுகம் கொடுத்தவர், இலவச திருமணங்களை நடத்தி வைத்தது தொடர்பாக பேசினார்.

''முதலில் 10 ஜோடிகள், 20 ஜோடிகள் என ஆரம்பித்து, இப்போது 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளோம். கடந்த 25 ஆண்டுகளில் 56 இடங்களில் 2,823 பேருக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளோம். இந்த ஆண்டும் கடந்த ஆகஸ்டு 20-ந் தேதி தோணுகாலில் உள்ள அன்னபூரணி கோவில் வளாகத்தில் 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்தோம். இதில் இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் என, எல்லா மதத்தினருக்கும் அவர்களது மத வழக்கப்படியே திருமணத்தை நடத்தி வைத்தோம்'' என்று பொறுப்பாக பேசியவரிடம், இலவச திருமணத்திற்கு தம்பதிகளை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள் என்ற கேள்வியை முன்வைக்க, அவர் பதிலளித்தார்.

''நாங்கள் திருமணத்தை எங்கு வைத்து நடத்த இருக்கிறோம், எந்த தேதியில் நடத்த இருக்கிறோம் என முதலில் அறிவிப்போம். அதனை பார்த்து தமிழகம் முழுவதும் உள்ள எங்கள் கிளைகளில் ஆங்காங்கே இருப்பவர்கள் தொடர்பு கொள்வர். நாங்கள் எந்தவித சாதி-மத பேதமின்றி, திருமணத்தை நடத்துவதால் மும்மதங்களை சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கும்படிதான் மணமக்களை தேர்வு செய்வோம்.

தாய், தந்தை இல்லாதவர்கள், மாற்றுத்திறனாளிகள், குடும்ப சூழ்நிலையால் திருமணம் செய்ய முடியாமல் தவிப்பவர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கிறோம். மணமக்கள் விண்ணப்பம் அளித்த பிறகு அவர்களின் பகுதிக்கு சென்று எங்களது அமைப்பினர் அவர்களை பற்றி விசாரிப்பார்கள்.

எங்களது நோக்கம் சரியான மணமக்களுக்கு திருமணத்தை செய்து வைக்க வேண்டும் என்பது தான். சர்வ மத திருமணம் என்பதால் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்கள் என அனைவரும் அவர்களது முறைப்படியே திருமணம் செய்து கொள்ள வழிவகை செய்கிறோம். இருப்பினும் மத வேறுபாடு இல்லாமல் அனைவரின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதமும் மணமக்களுக்கு ஒரே இடத்தில் கிைடக்கும். அத்துடன் பல்வேறு குடும்பத்தினர் ஒரே இடத்தில் சந்திப்பதால் புதிய உறவுகள் ேமம்படுவதுடன், அனைத்து மதத்தினரின் ஆசீர்வாதமும் கிடைக்கும்.

திருமண ஜோடிகளை தேர்வு செய்த பின்னர் மணநாள் குறித்தும், மணமக்களின் விவரங்கள் குறித்தும் இணையதளத்தில் வெளியிடுவோம். அதனை பார்த்து பல நல்ல உள்ளங்கள் அவர்களால் முடிந்த பண உதவி, பொருள் உதவி என பல்வேறு வகைகளில் உதவி செய்கின்றனர். அனைவரின் ஒத்துழைப்புடன் தான் இந்த நல்ல காரியம் நிறைவேறுகிறது. பலருக்கு மண வாழ்க்கை கிடைக்கிறது'' என்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டவரிடம், இலவச திருமண வைபோகத்தில் வழங்கப்படும் சீர்வரிசைகள் பற்றி கேட்டோம். அதற்கு அவர்...

''மணமக்களுக்கு தேவையான மாங்கல்யம், புத்தாடை, மாலை... இவற்றுடன் கல்யாண சீர்வரிசை பொருட்கள் என அனைத்தும் வழங்கப்படுகிறது. மணமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் அனைவருக்கும் கல்யாண விருந்தும் வழங்கப்படுகிறது. திருமணம் செய்து கொள்ளும் மணமகள் யாருடைய தயவும் இல்லாமல் சுயமாக வாழ பசு கன்றுக்குட்டி வழங்கப்படுகிறது. அதேபோல தையல் தெரிந்த பெண்களுக்கு தையல் எந்திரம் வழங்கப்படுகிறது.

ஒரு சிலர் நீங்கள் தான் எங்களுக்கு திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். அதன்படி நிறைய பேருக்கு திருமணம் செய்து வைத்துள்ளேன். இன்று அவர்கள் வீட்டில் ஒருவனாக நினைத்து பழகி வருகின்றனர். இதன் மூலம் புதிய உறவுகள் வளர்கிறது'' என்றவர், திருமணம் முடிந்த பிறகும் அவர்களுடனான பந்தத்தை தொடர்கிறார்.

''மணமக்கள் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறோம். இதையும் மீறி சிலர் திருமணத்திற்கு பிறகு ஏதேனும் மன கசப்புகள் ஏற்பட்டால் அவர்களை அழைத்து பேசி மீண்டும் மகிழ்ச்சியாக வாழ நடவடிக்கை எடுக்கிறோம். உணவு, பந்தல், மண மேடை, புகைப்படம், ஒலி, ஒளி அமைப்பு, மேடை அலங்காரம், மங்கள இசை என அனைத்து செலவுகளுக்கும் பலரின் உதவிக்கரம் எங்களுக்கு கிடைக்கும். அனைவரின் ஒத்துழைப்புடனும், மக்களின் நல் ஆதரவுடனும் தொடர்ந்து திருமணத்தை நடத்தி வருகிறோம். குறைந்தது 20 மணமக்கள் சேர்ந்தால் கூட திருமணத்தை நடத்தி வைத்துள்ளோம்'' என்ற தகவலுடன் விடைபெற்றார்.

எங்களது நோக்கம் சரியான மணமக்களுக்கு திருமணத்தை செய்து வைக்க வேண்டும் என்பது தான். சர்வ மத திருமணம் என்பதால் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்கள் என அனைவரும் அவர்களது முறைப்படியே திருமணம் செய்து கொள்ள வழிவகை செய்கிறோம். இருப்பினும் மத வேறுபாடு இல்லாமல் அனைவரின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதமும் மணமக்களுக்கு ஒரே இடத்தில் கிடைக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்