இளமையாக தோற்றமளிக்க 10 பழக்கங்கள்
முதுமை தோற்றத்தை எதிர்கொள்வது தவிர்க்கமுடியாதது. ஆனால் இளமையை தக்கவைத்து, முதுமையை சற்று தள்ளிப் போடலாம். அதற்கு அன்றாட பழக்கவழக்கங்களில் சில மாறுதல்களை செய்ய வேண்டியிருக்கும்.;
8 மணி நேர தூக்கம், உடற்பயிற்சி, ஊட்டச்சத்துமிக்க உணவு ஆகியவை வாழ்க்கை முறையில் அவசியம் பின்பற்ற வேண்டிய அடிப்படை பழக்கங்கள். இவை தவிர்த்து இளமைப் பொலிவுடன் தோற்றமளிப்பதற்கு தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு...
1. பதப்படுத்தப்பட்ட பானங்களில் பெரும்பாலும் செயற்கை இனிப்புகள் அதிகம் கலந்திருக்க வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து பருகி வந்தால் வளர்சிதை மாற்றத்தை சீர்குலைத்துவிடும். உடல் எடை அதிகரிப்புக்கும் வழிவகுத்துவிடும்.
2. அனைத்து வகையான செயற்கை இனிப்புகளும் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதிக இனிப்பை உட்கொள்ள தூண்டும். அதற்கேற்ப உடலை பழக்கப்படுத்திவிடும். இளம் வயதில் இனிப்பை அதிகமாக உட்கொள்வது இதய நோய், நீரிழிவு போன்ற உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும்.
3.பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்களில் உணவு பொருட்களை சேமித்துவைத்து உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். அதில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உணவு மற்றும் பானங்களில் கசிந்து உடல்நல கோளாறுகளுக்கு வழிவகுத்துவிடும்.
4.இன்றைய காலகட்டத்தில் கணினி, செல்போன் திரைகளை பார்வையிடும் நேரம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்களுக்கு ஓய்வு கொடுக்காவிட்டால் கண் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவித்துவிடும். குறிப்பாக செல்போன் மூலம் வெளிப்படும் நீல ஒளி தூங்கவிடாமல் தடுத்து உடலின் சர்க்காடியன் சுழற்சியை பாதிக்கும். இரவு நேர தூக்கத்தின்போதுதான் உடலில் செல்கள் உள்பட பழுதான பாகங்களை சீரமைத்து புத்துணர்ச்சியை உண்டாக்கும் செயல்பாடுகள் நடைபெறும். அதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தூக்கம் முக்கியமானது.
5. நடைப்பயிற்சி மட்டுமின்றி பளுதூக்குதல் போன்ற கடுமையான உடற்பயிற்சிகளையும் சில நிமிடங்களாவது செய்ய வேண்டும். அத்தகைய பயிற்சிகள் உடலை வலிமையாக்கும். அவற்றை தவிர்ப்பது உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு, இதய நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க செய்யும். மேலும் இந்த பயிற்சிகள் எலும்பு அடர்த்தியையும் பராமரிக்க உதவும். வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
6. புரதம் உள்ளடங்கிய உணவுகளை குறைவாக சாப்பிடுவதும் கூடாது. அது உடலில் புரத பற்றாக்குறையை ஏற்படுத்திவிடும். அதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும். தசைகளும் வலிமையை இழக்கக்கூடும். வளர்சிதை மாற்றமும் தடைபடும்.
7. பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவை கெட்டுப்போகாமல் இருக்க உப்பு அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும். அந்த உணவுகளில் அதிகப்படியான சோடியம், ஆரோக்கியமற்ற கெட்ட கொழுப்புகள் உள்ளடங்கி இருக்கும். அவை ஹார்மோன்களின் செயல்பாடுகளையும், குடல் ஆரோக்கியத்தையும் சீர்குலைக்கும்.
8. சில சமயங்களில் உண்ணும் உணவில் அனைத்து ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் இல்லாத நிலை ஏற்படும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவது நல்லது. அவரின் பரிந்துரையின் பேரில் ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடு வதும் பலன் கொடுக்கும்.
9. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதும் உடல் நலத்திற்கு உகந்ததல்ல. இளமை தோற்றத்திற்கும் ஏற்றதல்ல. அப்படி அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது தசை விறைப்பு, ரத்த ஓட்டத்தில் பாதிப்பு மற்றும் நாள்பட்ட நோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கச் செய்யும்.
10. தினமும் 3 கப்புக்கு அதிகமாக காபின் கலந்த காபி போன்ற பானங்களை பருகுவது தூக்கத்தை சீர்குலைக்கும். குடல் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். நீரிழப்புக்கும் வழிவகுக்கும்.