தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள்

தினமும் ஒரு வாழைப்பழமாவது சாப்பிட வேண்டும் என்று சுகாதார நிபுணர்களும் அறிவுறுத்துகிறார்கள்.

Update: 2023-09-17 15:43 GMT

திடீர் பசியைத் தணிக்க விரும்பினாலோ, பயணத்தின்போது சாப்பிட ஆசைப்பட்டாலோ சட்டென்று பலரும் ருசிப்பது வாழைப்பழமாகத்தான் இருக்கும். இதனை எந்த நேரத்திலும் சாப்பிட முடியும். வாழைப்பழம் ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான 10 காரணங்களையும், அதனால் கிடைக்கும் நன்மைகளையும் தெரிந்து கொள்வோம்.

1. சத்துக்கள்

எல்லா வகையான வாழைப்பழங்களிலும் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வைட்டமின் சி, செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அத்துடன் இயற்கை சர்க்கரையும், கார்போஹைட்ரேட்டும் உள்ளன. அவை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் சிற்றுண்டி உணவாகவும் அமைந்திருக்கின்றன. மேலும், வாழைப்பழத்தில் உள்ளடங்கி இருக்கும் மெக்னீசியம் எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். குறைந்த கலோரிகளே கொண்டிருப்பதும் வாழைப்பழத்தை பலரும் விரும்ப காரணமாக அமைந்திருக்கிறது.

2. பொட்டாசியம்

வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் உடலுக்கு தேவையான சிறந்த இயற்கை ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதயம் மற்றும் தசைகளின் செயல்பாட்டை பராமரிக்க பொட்டாசியம் முக்கியமானது. அதனால் தினமும் ஒரு வாழைப்பழமாவது தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

3. ஆற்றல்

வாழைப்பழத்தில் நிறைந்திருக்கும் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரை விரைவான மற்றும் நீடித்த ஆற்றலை உடலுக்கு அளிக்கின்றன. உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு அதிக எனர்ஜியை கொடுக்கும். உடற்பயிற்சியையும் உற்சாகமாக செய்யத் தூண்டும். மதிய உணவுக்குப் பின்பு வாழைப்பழம் சாப்பிடுவதும் நல்லது.

4. செரிமானம்

வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை பேண உதவும். குறிப்பாக 'பெக்டின்' குடல் இயக்கத்தை ஊக்குவித்து செரிமானம் சுமூகமாக நடைபெறுவதற்கு உதவிபுரியும். மலச்சிக்கலையும் தடுத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

5. வயிற்றுக் கோளாறு

வயிற்று கோளாறு அல்லது செரிமானம் சார்ந்த அசவுகரியங்களை எதிர்கொள்பவர்களுக்கு வாழைப்பழம் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் வாழைப்பழங்கள் எளிதாக ஜீரணமாகும். வயிற்றில் ஏற்படும் வலியை போக்கவும் உதவும்.

6. இதய ஆரோக்கியம்

பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் போன்ற உணவுப்பொருட்களை தவறாமல் உட்கொள்வது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். இதய நோய் மட்டுமின்றி பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும்.

7. உடல் எடை

வாழைப்பழங்களில் கலோரிகள் மட்டுமின்றி கொழுப்பின் அளவும் குறைவு. அவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம் அதிக பசியை கட்டுப்படுத்திவிடலாம். அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். உடல் எடையை சீராக பராமரிக்க முயற்சிப்பவர்களுக்கு வாழைப்பழம் சிறந்த தேர்வாக அமையும்.

8. மனநிலை மேம்பாடு

வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 உள்ளது. இது மூளையின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. மேலும் வைட்டமின் பி6 செரோடோனின்,டோபமைன் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்களின் உற்பத்திக்கு துணைபுரியக்கூடியது. இது மனநிலையை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.

9. சருமம்

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமம் விரைவில் வயதான தோற்றத்திற்கு மாறுவதை தடுக்கும். தோல் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிப்பதன் மூலம் ஆரோக்கியமான சருமத்திற்கு வித்திடும்.

10. இயற்கை இனிப்பு

வாழைப்பழங்கள் ஆரோக்கியமான முறையில் உடலின் இனிப்பு தேவையை பூர்த்தி செய்யக்கூடியவை. ஸ்மூத்தி, பேக்கரி பொருட்கள் போன்றவற்றில் வாழைப்பழங்களை சேர்ப்பதன் மூலம் செயற்கை சர்க்கரையின் தேவையை குறைக்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்