உலக சுற்றுலா தினம்
ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பினால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27-ந் தேதி `உலக சுற்றுலா தினம்' அனுசரிக்கப்படுகிறது.;
1980-ம் ஆண்டு இந்த தினம் முதன் முதலில் தொடங்கப்பட்டது. உலகளாவிய சுற்றுலாத் துறையின் முக்கியத்துவம் மற்றும் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுலா தினத்தை ஒரு சிறப்பு கருப்பொருளுடன் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டின் கருப்பொருள் `சுற்றுலா மற்றும் பசுமை முதலீடு' என்பதாகும். அக்டோபர் 1997-ம் ஆண்டு துருக்கியில் நடந்த உலக சுற்றுலா அமைப்பின் கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு நாடு இந்நிகழ்வை நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு கூட்டம் சவுதி அரேபியாவில் நடைபெறுகிறது.
உலகின் மிக முக்கியமான பொருளாதார துறைகளில் ஒன்று சுற்றுலாத்துறை. உலகெங்கிலும் உள்ள பல நாடுகள், பொருளாதாரத்திற்காக சுற்றுலாவை முழுவதுமாக நம்பியுள்ளன. 2022-ம் ஆண்டு உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பயணம் மற்றும் சுற்றுலாவின் பங்களிப்பு 7.7 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும். கல்விச் சுற்றுலா, கலாசார சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா என சுற்றுலாவில் பல வகைகள் உண்டு. போக்குவரத்துத்துறை, உணவுத்துறை, இடவசதி, ஓய்வு மற்றும் கேளிக்கை என பல துறை சார்ந்தவர்கள் சுற்றுலா மூலம் பயன்பெறுகின்றனர். பூமியில் உள்ள பத்து பேரில் ஒருவர் சுற்றுலாத் துறையில் பணிபுரிகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கிறது. உலகெங்கும் உள்ள நாடுகள் பல வகையான கலாசாரம், பண்பாடு, மொழிகளை கொண்டுள்ளதால், சுற்றுலா அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கிறது. இந்த தினத்தில் பல நாடுகளும், அமைப்புகளும் சுற்றுலா தொடர்பான சிறப்பு நிகழ்வுகள், கருத்தரங்குகள் நடத்துகின்றன.