ரோபோக்களின் வளர்ச்சி

ரோபோ பயன்பாடும் அதிகரிக்கும்பட்சத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 70 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் என்று புள்ளிவிவர ஆதாரம் சொல்கிறது.

Update: 2023-10-06 15:38 GMT

நான்காவது தொழில் புரட்சி அதாவது ஆறறிவு படைத்த மனிதனால் உருவாக்கப்பட்ட ரோபோக்களின் புழக்கம் இத்துறையின் வளர்ச்சியை பல மடங்கு உயர்த்தும் என்றாலும் அது மனிதர்களை ஓரங்கட்டிவிடும் என்று பெரும்பாலான தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இப்போது நடந்து வரும் மாற்றங்களால் அனைத்து துறைகளிலும் உள்ள மனித உழைப்பு பணிகள்கூட ரோபோக்கள் வசமாகிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப புரட்சி என்ற போர்வையில் மனிதர்களுக்கு வேலையிழப்பை, வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தும் ஒரு உலகை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

இப்போதைய நிலையில் ஆராய்ச்சிகளும், ரோபோ பயன்பாடும் அதிகரிக்கும்பட்சத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 70 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் என்று புள்ளிவிவர ஆதாரம் சொல்கிறது.

ரோபோக்கள் வருகையால் தொழில்துறையில் உற்பத்தி அதிகரிக்கும் என்பது 100 சதவீத உண்மை. ஆனால் பலருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது இதன் கசப்பான பக்கம். வளரும் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளில் அடுத்த 4 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் என்ற தகவல் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.

உலக அளவில் ரோபோக்களின் பயன்பாடு 5 நாடுகளில் அதிகமாக உள்ளது. மொத்த உற்பத்தியில் 70 சதவீத ரோபோக்களை சீனா, ஜப்பான், அமெரிக்கா, கொரியா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்துகின்றன. ஆசிய பிராந்தியத்தில் தாய்லாந்தில் அதிக எண்ணிக்கையில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு அடுத்தபடியாக இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலும் அதிக எண்ணிக்கையில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பேக்கேஜிங், பொருள்களை எடுப்பது, சில்லரை விற்பனை கடைகளில் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளிலும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆபத்தான தொழிற்சாலைக் கழிவுகளை அகற்றுவது, அணுக்கழிவை அகற்றுவது உள்ளிட்ட பணிகளில் பெரும்பாலான நாடுகளில் ரோபோக்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. ஆட்டோ மொபைல் துறையில் குறிப்பாக பெயின்ட் அடிப்பது, வெல்டிங் செய்வது உள்ளிட்ட பணிகளில் ரோபோக்களின் உபயோகம் அதிக அளவில் உள்ளது.

எந்திரன் படத்தில் ரோபோக்களுக்கும் உணர்வு உண்டு என்பதாக கதை செல்லும். இது கதைக்காக ஜோடிக்கப்பட்டதல்ல. மனிதர்களைப் போல சிந்திக்கும் ஆற்றலை ரோபோக்களுக்கு அளிக்கும் ஆராய்ச்சிகளும் தொடர்கின்றன. இதில் ஓரளவு முன்னேற்றமும் தென்படுகிறது. வீட்டிலேயே எந்த வேலையும் செய்யாமல் மனிதர்கள் முடங்கிப் போக, மனிதர்களின் தேவைகளை ரோபோக்கள் நிறைவேற்றுவதைப் போன்ற எதிர்காலம் உருவானால் எப்படியிருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்