உலக ஹோமியோபதி தினம்
ஹோமியோபதியின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பொதுமக்களிடம் இந்த மருத்துவ முறையை அதிகளவில் கொண்டு சேர்ப்பதுமே ‘உலக ஹோமியோபதி தின’த்தின் நோக்கம் ஆகும்.
ஜெர்மனியைச் சேர்ந்த அலோபதி மருத்துவர், பிரெட்ரிக் சாமுவேல் ஹானிமன். இவர் 1796-ம் ஆண்டில் கண்டுபிடித்த மருத்துவமுறை தான் ஹோமியோபதி. 1755-ல் பிறந்த டாக்டர் ஹானிமன் ஜெர்மனியில் உள்ள மீசென் நகரில் வளர்ந்தார். மேலும் 1779-ல் எர்லாங்கனில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். ஹோமியோபதி என்ற வார்த்தை கிரேக்க வார்த்தைகளான 'ஹோமியோ' மற்றும் 'பாத்தோஸ்' என்பதில் இருந்து உருவானது. அலோபதி மருத்துவத்தை குறித்துப் பெரும் கவலை கொண்டிருந்த டாக்டர் ஹானிமனுக்கு, ஹோமியோபதி மருத்துவம் பெரும் மனநிம்மதியைத் தந்தது. காரணம் இந்த மருத்துவ முறையில் பக்கவிளைவுகள் இல்லை.
இவரது பிறந்த தினமான ஏப்ரல் 10-ந் தேதியை, 'உலக ஹோமியோபதி தின'மாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கிறோம். இந்த தினம் கடந்த 2005-ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஹோமியோபதியின் முக்கியத்துவத்தையும், ஆரோக்கியத்தில் அதன் பங்களிப்பையும் வலியுறுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும். உலக ஹோமியோபதி தினத்திற்கான கருப்பொருள்கள், ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும். இந்த ஆண்டிற்கான கருப்பொருள் 'ஒரு ஆரோக்கியம் ஒரு குடும்பம்' என்பதாகும்.
ஐரோப்பா, அமெரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் என உலக அளவில் பரந்து விரிந்துள்ள ஹோமியோபதி மருத்துவமுறை உலகின் இரண்டாவது மிகப்பெரிய மருத்துவமாக அறியப்படுகிறது. உடல் உறுப்புகள் பாதித்தால் அவற்றை நீக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு, ஹோமியோ மருந்துகள் செயல்படும். இந்தியாவில் மிகவும் பிரபலமான மருத்துவ முறைகளில் இதுவும் ஒன்று. ஹோமியோபதியின் கீழ் உள்ள மருந்துகள் பல தாதுக்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்றவற்றில் இருந்து இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
ஹோமியோபதி வைத்தியத்தைப் பயன்படுத்துபவர்களில் பாதி பேர் இந்தியாவிலேயே உள்ளனர். இந்தியாவில் 2 லட்சம் பதிவு செய்யப்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் உள்ளனர். ஆண்டுக்கு 12,000 பேர் ஹோமியோபதி மருத்துவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள். ஹோமியோபதியின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், இந்த மருத்துவத்தின் பயன்பாட்டை விரிவுப்படுத்துவதும், பொதுமக்களிடம் இந்த மருத்துவ முறையை அதிகளவில் கொண்டு சேர்ப்பதுமே 'உலக ஹோமியோபதி தின'த்தின் நோக்கம் ஆகும்.