உலக ஹீமோபிலியா தினம்

உலக ஹீமோபிலியா கூட்டமைப்பை ஏற்படுத்தியவர், பிராங்க் சன்னேபல். இவரது பிறந்த நாளான ஏப்ரல் 17-ந் தேதி ஆண்டுதோறும் ‘உலக ஹீமோபிலியா தின’மாக கடைப்பிடிக்கப்படுகிறது.

Update: 2023-04-17 12:15 GMT

அதென்ன ஹீமோபிலியா?

இது ஒரு அரிதான பரம்பரை நோய் ஆகும். நமது உடலில் ஏதாவது ஒரு வகையில் காயம் ஏற்பட்டு குறிப்பாக பென்சில் சீவும்போது பிளேடால் விரலில் காயம் ஏற்பட்டாலோ, கீழே விழுந்து அடிபட்டு ரத்தம் கசிதல் ஏற்படுமானால், அந்த ரத்தம் வெளியேறும் நிகழ்வு ஒரு சில நிமிடங்களில் நின்று விட வேண்டும்.

நமது உடம்பில் உள்ள எக்ஸ் குரோமோசோமின் மரபணு மாற்றத்தால் இந்நோய் ஏற்படுகிறது. இந்த நோய் உள்ள நபரின் ரத்தத்தில் திராம்போ பிளாஸ்டின் என்ற ரத்தத்தை உறைய வைக்கும் பொருள் காணப்படுவதில்லை. இந்த நோயானது குறுக்கு மறுக்கு என்ற மரபுக்கடத்தல் பண்பைக் கொண்டுள்ளது. அதாவது, இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர், தன்னுடைய உடம்பில் உள்ள நோயை உருவாக்கும் மரபணுவைத் தனது மகள் மூலமாக அடுத்த தலைமுறையில் தனது பேரனுக்கு கடத்துகிறார். மகளுக்கு நோய் வெளிப்படாது. ஆனால் பேரனுக்கு நோய் வெளிப்படும்.

இத்தகைய வினோதமான நிகழ்வு மிகவும் அரிதாகவே மனிதர்களில் காணப்படும். எனவேதான் அறிவியல் மற்றும் மருத்துவ உலகம் இதனை அரிதான பரம்பரை நோயாக பார்க்கிறது. பல் ஈறுகளில் தொடர்ந்து ரத்தம் வெளியேறுதல், முழங்கால், கணுக்கால் மற்றும் முழங்கை போன்ற மூட்டு பகுதிகளில் மூட்டு வலி அல்லது வீக்கம், உடலுக்குள் ஏற்படும் ரத்தக்கசிவு, மூக்கிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படுவது, சிறுநீருடன் சேர்ந்து ரத்தம் வெளியேறுதல், மூளையின் உட்பகுதியில் ஏற்படும் ரத்தக்கசிவு போன்றவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும்.

இந்த நோய் நமது உடலில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு ஆரம்ப நிலையில் உள்ளதா அல்லது தீவிரமாக உள்ளதா என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ற முறையில் நாம் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். ஊசி, மருந்து மற்றும் மாத்திரைகள் மூலம் இந்த நோயைக் குணப்படுத்தலாம். இந்நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி மூலம் தசை மூட்டுக்களை வலுவாக வைத்திருக்கவேண்டும். இந்த உலக ஹீமோபிலியா நாளில், ஹீமோபிலியா மற்றும் அதன் நோய்த்தன்மை குறித்த விவரங்களையும், அந்நோய்க்கான சிகிச்சை முறையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் குறித்த விழிப்புணர்வையும் பொது மக்கள் நினைவுகூரும் வகையில், இந்த தினம் 1989 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நாமும் நம்மால் முடிந்தவரை இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

Tags:    

மேலும் செய்திகள்