பூமியில் உயிரினங்கள் தோன்றிய விதம்

கோடான கோடி நட்சத்திரங்கள் சுழன்றுகொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்தில் பூமியை தவிர வேறெங்கும் உயிர்கள் வாழ்வதாக தெரியவில்லை. இப்பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும் உயிர்கள் தோன்றியது எப்படி என்பது ஆச்சர்யமான கேள்வி.;

Update:2023-08-06 21:46 IST

விண்வெளி மோதல்கள்

இயற்கை மிகவும் அற்புதமானது. அந்த வகையில் நாம் அறிந்ததிலேயே பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. வேறெங்கும் உயிரினங்கள் இல்லை. இதனாலேயே பூமி மற்ற கோள்களில் இருந்து தனித்துவம் பெறுகிறது. பூமிக்கு மட்டும் இப்படியொரு வாய்ப்பு எப்படி கிடைத்தது? பூமியில் இருக்கும் நீர் மற்றும் ஆக்சிஜன் தான் இங்கே உயிரினங்கள் தோன்றுவதற்கான காரணமாக அமைந்தன. நீரிலும், நிலத்திலும் எண்ணமுடியாத எண்ணிக்கையில் இங்கே ஜீவராசிகள் இருக்கின்றன. பூமி மூன்றில் இரண்டு மடங்கு தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. எனவேதான் விண்வெளியில் இருந்து பார்க்கும் போது நீல நிறத்தில் பூமி காட்சியளிக்கிறது.

சூரியன் உட்பட அனைத்து கோள்களுமே 4.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளி தூசுகளால் உருவானவையே. அந்த சூழலில் நாம் இப்போது காணுவது போல விண்வெளி அமைதியாக இருக்கவில்லை. எண்ணற்ற மோதல்கள் அடிக்கடி நடந்து வந்தன. பூமியும் கூட இதுபோன்ற பல மோதல்களை சந்தித்துள்ளது. அந்த சூழ்நிலையில் பூமியின் உட்கரு பல்வேறு உலோகங்கள் உருக ஆரம்பித்தன. அடிக்கடி எரிமலை வெடிப்புகளும் நடந்தன. அதே சமயம் பூமியின் வெப்பநிலை படிப்படியாக குறையவும் ஆரம்பித்தது.

பூமியில் உயிரினங்கள்

சுமார் 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக 100 டிகிரி அளவுக்கு வெப்பநிலை குறைந்தது. இதனால் பூமி திட நிலையை அடைய ஆரம்பித்தது. அப்போது பூமியை சுற்றிலும் நீராவியால் சூழப்பட்டு இருந்தது. ஏதோ சில ஆண்டுகளில் பூமியில் உயிரினங்கள் தோன்றிவிடவில்லை. படிப்படியாக பல்வேறு மில்லியன் கணக்கான ஆண்டுகள் அதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. பூமியில் இருந்த பொருள்களும், சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கின்ற மிகச்சரியான இடைவெளியும்தான் பூமியில் உயிரினங்கள் தோன்றிட வழி ஏற்படுத்திக்கொடுத்தன. சூரியனில் இருந்து கிடைக்கப்பெறும் சரியான வெப்பத்தினால் நீர் ஆவியாகி விடாமலும் அதிகமாக குளிர்ந்து ஐஸ்கட்டியாக மாறிவிடாமலும் இருக்கச்செய்கிறது. சூரியனில் இருந்து வெளிப்படும் UV கதிர்கள், இடியால் தோன்றும் மின்னல்கள், எண்ணற்ற எரிமலை வெடிப்புகள் இவை அனைத்தும் பல்வேறு விதமான வேதிப்பொருள்கள் உருவாக காரணமாக அமைந்தன. 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக முதல், முதல் மூலக்கூறு உருவானதாகவும் அதிலிருந்து ஒற்றை உயிரணுக்கள் உருவானதாகவும் சொல்லப்படுகிறது.

ஏலியன்ஸ்கள் உள்ளதா?

பூமியை போல பிற கோள்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா? என்பதே பல மில்லியன் கேள்வியாக உள்ளது. ஏலியன்ஸ் இருக்கிறார்கள் என அவ்வப்போது வதந்திகள் பரவினாலும் கூட ஆதாரபூர்வமாக பூமி தவிர வேறெங்கும் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. உயிரினம் தோன்றுவதற்கும், வாழ்வதற்கும் சுற்றுசூழல் முக்கிய பங்காக இருக்கிறது. நீர், சரியான வெப்பநிலை, இயற்கையின் ஒத்துழைப்பு என அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே உயிரினங்கள் தோன்றும். பூமியைத்தவிர வேறெங்கும் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்ற தேடுதல் இன்றுவரை நடந்து கொண்டேதான் இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்