நட்பின் முக்கியத்துவம்

நட்பு ஒருவருக்கு சிறந்த பாதுகாப்பு அரண் ஆகும் என்று நட்பு பற்றி அழகுற கூறுகிறார்.;

Update:2023-08-06 21:00 IST

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு என்ற குறளில் திருவள்ளுவர், நட்புக்கொள்வது போன்ற அரிய செயல் வேறு இல்லை. நட்பு ஒருவருக்கு சிறந்த பாதுகாப்பு அரண் ஆகும் என்று நட்பு பற்றி அழகுற கூறுகிறார். உலகில் வாழும் மனிதர்களுக்கு நட்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். கஷ்டத்தில் இருக்கும் போது உறவினர்களிடம் கேட்க முடியாத உதவிகளை கூட நண்பர்களிடம் கேட்டு பெற முடியும். இந்த கட்டுரையில் நட்பின் சிறப்பு பற்றி காணலாம்.

நட்பின் முக்கியத்துவம்:

நட்பு என்னும் சொல் சினேகம் அல்லது தோழமை எனப்பொருள்படும். நட்பு என்பது ஒருவரது வாழ்வில் மிகவும் முக்கியமானதாகும். வாழ்வில் நம்பிக்கை, பாதுகாப்பிற்கு நட்பு அவசியமாகின்றது. ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய வாழ்க்கையில் நம்பகமான ஆலோசகர் தேவைப்படுகிறார். அதற்கும் நட்பு முக்கியமாகும். ஒருவனை நல்வழிப்படுத்துவதற்கும் தவறிழைக்கும் போது திருத்துவதற்கும் நட்பு அவசியமாகின்றது.

உண்மை நட்பு:

அக்கறையும் அன்பும் எப்போதும் என்ெறன்றும் மாறாமல் இருக்கும் நண்பர்களிடம், சுயநலமில்லாமல் நடந்து கொள்ளக்கூடியதே உண்மை நட்பாகும். உண்மையான நட்பானது எதையும் எதிர்பார்க்காது. துன்பம் வரும் போது முதலில் உதவக்கூடியது. ஜாதி, மத பேதமின்றி பழகக்கூடியதே உண்மை நட்பின் அடையாளம் ஆகும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதோ எதிர்பார்ப்புடன் உதவி செய்வதோ உண்ைம நட்பில் என்றும் கிடையாது.

நட்பின் சிறப்பு:

உலகத்திலேயே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். நட்பு என்பது நிலம் போல் எல்லாவற்றையும் பொறுமையாய் தாங்கிக்கொள்ளும் நட்பின் சிறப்பை சங்க காலத்திலிருந்தே நாம் காணமுடிகிறது. பாரிக்கும்-கபிலருக்கும் இடையே இருந்த நட்பும், அதியமானுக்கும், அவ்வையாருக்கும் இடையே இருந்த நட்பும், கோப்பெருஞ்சோழனுக்கும், பிசிராந்தையாருக்கும் இடையே இருந்த நட்பும் நட்பின் பெருமைக்கு சிறந்த உதாரணம் ஆகும்.

அவ்வையின் பார்வையில் நட்பு:

அற்ற குளத்தின் அறு நீர்ப்பறவை போல் என்ற பாடலில் அவ்வையார் உண்மை நட்புக்கும் சுயநலம் மிகுந்த போலி நட்புக்குமான வித்தியாசத்தை அழகுற விளக்குகிறார். உண்மையான நண்பர்கள் எந்த சமயத்திலும் நம்மை விட்டு பிரிந்து செல்லமாட்டார்கள். சொந்த தேவைகளுக்காக சுயநலமாக நம்மைவிட்டு பிரிந்து செல்பவர்கள் உண்மை நண்பர்களாகவும் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களை நண்பர்களாக வைத்து கொள்ளாமல் இருப்பதே நன்று என்று கூறுகிறார்.

நட்பும் திருக்குறளும்:

திருக்குறளில் நட்பின் மேன்மையை திருவள்ளுவரும் நட்பு, நட்பு ஆராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு என ஐந்து அதிகாரங்களை அருமையாக விளக்குகிறார்.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு என்ற குறளில் வள்ளுவர் நட்பு என்பது முகம் பார்த்து பழகுவதல்ல. அது இருதயம் கலந்து பழகுவது. உதட்டில் இருந்து பேசும் பேச்சுக்களால் நீடிப்பதல்ல, உள்ளத்தில் இருந்து வரும் ஆழமான வார்த்தைகளால் நீடிப்பது என்று கூறுகிறார்.

முடிவுரை:

ஒருவனுடைய குணத்தையும், குடி பிறப்பையும், குற்றத்தையும் ஆராய்ந்து அவனோடு நட்புக்கொள்ள வேண்டும். உண்மை நட்பு நம் வாழ்நாள் முழுவதும் தொடரும். எனவே சிறந்த நட்பை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுத்தால் வாழ்வு வளம் பெறும். அன்பின் இலக்கணமான நட்புக்கொண்டு வாழ்வில் வளம் பெறுவோம். நல்ல நட்பு வளர்பிறை போன்றது. அது நாளுக்கு நாள் வளரும். எனவே நட்பை நேசிப்போம். நட்பை வாசிப்போம். நட்பையே சுவாசிப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்