வாகன நெரிசலால் வீணாகும் பணம்
வாகன நெரிசலைக் குறைக்க, மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். அல்லது வாகன பெருக்கத்துக்கு ஏற்ப புதிய மேம்பாலங்கள், சுரங்கங்கள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.
வாகன நெரிசலில் சிக்கி அலுவலகத்துக்குச் செல்வது என்பது அன்றாட சாகச பயணமாக மாறிவிட்டது. காலையில்தான் என்றில்லை, மாலை நேரத்தில் வீடு திரும்பும்போதும் இதே பிரச்சினைதான்.
வாகன நெரிசலால் ஆண்டு தோறும் 120 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக வாகன நெரிசலில் அதிகம் சிக்குவது மும்பை நகரம்தான். ஆனால் சில ஆண்டுகளாக தலைநகர் டெல்லி அதையும் மிஞ்சிவிட்டது.
வாகன நெரிசலால் எப்படி இழப்பு ஏற்படுகிறது என்பதை வெகு எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105 என வைத்துக் கொள்வோம். உங்கள் கார் லிட்டருக்கு 15 கி.மீ. தூரம் ஓடும் என்றால் நீங்கள் தினசரி 20 கி.மீ. பயணிப்பதாக இருந்தால் பெட்ரோலுக்கு செலவிடும் தொகை ரூ.140 ஆக இருக்கும். வாகன நெரிசலின்போது கார் கூடுதலாக 20 சதவீத பெட்ரோலை உறிஞ்சும். இதனால் 20 கி.மீ. தூரத்தைக் கடக்க நீங்கள் செலவிட வேண்டிய தொகை ரூ.168 ஆக உயரும்.
வாரத்துக்கு 6 நாள் நீங்கள் காரைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் நீங்கள் மாதத்துக்கு ரூ.784 கூடுதலாகச் செலவிடுகிறீர்கள். ஆண்டுக்கு பெட்ரோலுக்கு நீங்கள் கூடுதலாக செலவிடும் தொகை ரூ.9 ஆயிரமாக இருக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சீன தலைநகர் பீஜிங்கில் ஏற்பட்ட வாகன நெரிசல்தான் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. 2010-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட வாகன நெரிசல் காரணமாக 100 கி.மீ. நீளத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது சரியாக 10 நாள் ஆனதாம்.. வாகன நெரிசலுக்கு முக்கியக் காரணம், பெருகிவரும் வாகன உற்பத்திக்கேற்ப நமது சாலைகள் விரிவுபடுத்தப்படவில்லை என்பதுதான்.
பெருநகரங்களில் வாழ்வோரின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவருவதால் அனைவருமே தங்களுக்கென்று ஒரு காரை வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. ஒரு பஸ் பயனாளி ஆக்கிரமிக்கும் இடத்தைப் போல 30 மடங்கு அதிக இடத்தை சாலைகளில் ஒரு கார் உபயோகிப்பாளர் ஆக்கிரமிக்கிறார். இதுவும் வாகன நெரிசலுக்கு முக்கியக் காரணமாகும்.
வாகன நெரிசலைக் குறைக்க, மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். அல்லது வாகன பெருக்கத்துக்கு ஏற்ப புதிய மேம்பாலங்கள், சுரங்கங்கள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.120 ஆயிரம் கோடி வீணாவதைத் தடுக்க நம்மால் சாத்தியமான நடவடிக்கையை எடுக்கலாமே?