பறக்க முடியாத கிளி

காகபோ (ஸ்ட்ரிகோப்ஸ் ஹப்ரோப்டிலஸ்) என்பது நியூசிலாந்தில் மட்டுமே காணப்படும் பெரிய, பறக்க முடியாத கிளி இனமாகும்.

Update: 2023-08-28 12:34 GMT

உலகின் அதிக எடையுள்ள கிளி இனமும் இதுதான். இதன் எடை 4 கிலோகிராம் வரை இருக்கும். 100 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் கொண்ட உலகின் மிக நீண்ட காலம் வாழும் பறவைகளில் இதுவும் ஒன்றாகும். காகபோ பகலில் மரம் மற்றும் தரையில் மறைவாகத் தங்கி, இரவில் தங்கள் உணவுகளைத் தேடுகின்றன. காகபோ என்ற பெயருக்கு மவுரி மொழியில் `இரவு கிளி' என்று பொருள். காகபோக்களால் பறக்க முடியாவிட்டாலும், தங்கள் வலிமையான கால்களைப் பயன்படுத்தி மரங்களில் ஏறவும், இறக்கைகளை விரித்து பாராசூட் போன்று குதித்து இறங்கவும் முடியும். ஆந்தையின் முகத்தைப் போல இருப்பதால் ஐரோப்பியர்கள் இதை `ஆந்தை கிளி' என்று அழைத்தனர். மஞ்சள், பச்சை கலந்த நிறத்துடன், பெரிய சாம்பல் நிற அலகு, குறுகிய கால்கள் கொண்டவையாக இவை காணப்படுகின்றன.

ஆந்தையும், காகபோவும் சில பழக்கங்களில் ஒரே மாதிரியாக இருக்கின்றன. உதாரணமாக, அவை இரண்டும் இரவு நேரங்களில் உணவைத் தேடும். ஆனால் காகபோ, ஆந்தையை போல இல்லாமல் தாவர வகைகளையே உட்கொள்கின்றன. தாவரங்கள், பழங்கள், விதைகள், மகரந்தம், பூக்கள் மற்றும் வேர்த்தண்டு கிழங்குகள் ஆகியவையே இவற்றின் பிரதான உணவு. பெண் பறவை 4 முட்டைகள் வரை இடும். மரத்தின் தண்டுகளில் துவாரங்கள் இட்டு கூடு கட்டுகிறது. பெண் பறவை முட்டைகளை அடைகாத்து, 30 நாட்களுக்குள் குஞ்சு பொரிக்கும்.

காகபோவால் பறக்க இயலாத காரணத்தால், ஐரோப்பியர்கள் இறைச்சிக்காக அவற்றை வேட்டையாடினர். 2012-ம் ஆண்டு நிலவரப்படி, 125 காகபோக்கள் மட்டுமே காடுகளில் எஞ்சியிருந்தன. நியூசிலாந்து அரசு, பழங்குடியினரின் உதவியோடு கிளிகளை பாதுகாக்கும் திட்டத்தை 1995- ம் ஆண்டு கொண்டு வந்தது. அதன் பலனாக 2023-ம் ஆண்டு நிலவரப்படி, தற்போது அதன் எண்ணிக்கை 248 ஆக உயர்ந்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்