பருத்தி பஞ்சு போல தோற்றமளிக்கும் பறவை
ஜப்பானின் இரண்டாவது பெரிய தீவான ஹோக்கைடோவில், வெள்ளை பருத்தி பஞ்சு போன்று காணப்படும் `ஷிமா எனகா' என்ற பறவை இனம் காணப்படுகிறது.
இவை 13 முதல் 15 செ.மீ நீளம் ெகாண்டது. மொத்த நீளத்தில் பாதிக்கு மேல் வால் அமைப்பு உள்ளது. இப்பறவையின் உடல் அடர்த்தியான, பஞ்சு போன்ற வெள்ளை நிற இறகுகளால் மூடப்பட்டிருக்கின்றது. இதனால் சிறிய பருத்தி பந்துகள் போல இவை தோற்றமளிக்கின்றன. இந்த பறவைகள் பெரும்பாலும் கூட்டமாகவே வாழ்கின்றன. ஒரு கூட்டத்தில் 20 முதல் 30 பறவைகள் வரை காணப்படுகின்றன. சாம்பல் அல்லது பழுப்பு நிற புருவங்களையும், நீண்ட வால், முதுகு, இறக்கை ஆகியவற்றில் கருப்பு நிறத்தையும் கொண்டுள்ளது. இவற்றின் கண்களுக்கு மேலே கருப்பு புருவங்கள் அமைந்து, ஒரு தனித்துவமான அழகை கொடுக்கிறது. ஷிமா எனகா பறவைகள் முதிர் வயதை அடையும் போது புருவங்களை இழந்து, முற்றிலும் வெண்மையான முகத்துடன் பனி போல தோற்றமளிக்கின்றன. எனவே ஜப்பானியர்கள் இந்த பறவையை `பனி தேவதை' என்றும் அழைக்கிறார்கள்.
இந்த சிறிய பறவை, அதன் வெள்ளை இறகுகளை விரிக்கும்போது, அது பனியால் செய்யப்பட்ட பொம்மை போல தோற்றமளிக்கிறது. சிறிய அளவாக இருந்தபோதும் இப்பறவை மிகவும் ஆற்றல் வாய்ந்தவை. தங்கள் ஆற்றலை அதிகரிக்க, அடிக்கடி சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருக்கின்றன. இனப்பெருக்க காலத்தில் 7 முதல் 10 வரையிலான முட்டைகளை இட்டு, இரண்டு வாரங்கள் வரை அடைகாக்கின்றன. ஆண் மற்றும் பெண் பறவைகள் மாறி மாறி முட்டைகளை அடைகாக்கிறது. இனப்பெருக்கம் செய்யத் தவறிய மற்ற பறவைகள் அனைத்து குஞ்சுகளுக்கும் உணவளிக்க உதவுகின்றன. பறவைகள் தங்கள் கூடுகளை கட்ட மூன்று வாரங்கள் ஆகின்றன. ஆண் மற்றும் பெண் பறவைகள் ஒருங்கிணைந்து பாசி மற்றும் இறகுகள், விலங்குகளின் முடி மற்றும் செடி போன்ற மென்மையான பொருட்களை வைத்து தங்கள் கூட்டை வடிவமைக்கின்றன. சிலந்திகள், பூச்சிகள், லார்வாக்கள், கம்பளிப்பூச்சிகள், பெர்ரி மற்றும் வேர்க்கடலை ஆகியவை இவற்றின் விருப்ப உணவு. இதன் வெள்ளை நிற இறகு பஞ்சு போல இருப்பதால், வெள்ளை பனியில் எளிதில் கலந்து அவற்றை வேட்டையாடுபவர்களிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கின்றன. பல பறவை இனங்களைப் போலவே, ஷிமா எனகா பறவையும் வாழ்விட இழப்பு மற்றும் வேட்டையாடுதல் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. இதன் ஆயுள்காலம் 2 முதல் 3 ஆண்டுகள் ஆகும்.