தமிழ் மீது பற்று கொண்ட பாவேந்தர் பாரதிதாசன்

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என முழங்கும் காலம் இக்காலம். இந்த முழக்கத்திற்கு காரணமாக இருந்த பெருமக்களுள் பாவேந்தர் பாரதிதாசனார் குறிப்பிடத்தக்கவர். கடல்போலச் செந்தமிழை பெருக்க வேண்டும் என்று தமிழின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். மேலும் சாதி வேறுபாடற்ற சமத்துவ சமுதாயம் காண விரும்பியவர்.;

Update: 2023-09-22 14:28 GMT

தமிழ் ஆசிரியர்

சுப்புரத்தினம் என்னும் இயற்பெயர் கொண்ட பாரதிதாசன், புதுச்சேரியில் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 29-ந்தேதி கனகசபை, இலக்குமி அம்மையாருக்கும் மகனாய் பிறந்தார். இளமையிலேயே பிரஞ்சு, தமிழ் மொழிகளை பயின்றார். 16-வது வயதில் கல்லூரியில் சேர்ந்து பயின்று தமிழ்புலமை தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். தனது 18-ம் வயதில் அரசு பள்ளியில் தமிழாசிரியராக பணியில் சேர்ந்தார். மகாகவி பாரதியாரிடம் கொண்ட அன்பால் தன் பெயரை பாரதிதாசன் என வைத்துக்கொண்டார். 1920-ம் ஆண்டில் பழனி அம்மையார் என்பவரை மணந்து கொண்டார்.

பாவேந்தர் பாரதிதாசன்

தமிழுக்கு அமுதென்று பேர்- அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர், உயிரை, உணர்வை வளர்ப்பது தமிழே. தமிழை என்னுயிர் என்பேன், போன்ற கவிதை வரிகள் பாரதிதாசனின் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்துவன. எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என பாடி மக்களிடையே தமிழ் உணர்வை வளர்த்தவர் பாரதிதாசன். தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன் என முழங்கினார். தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை என வருந்தினார். அவரை பாவேந்தர் பாரதிதாசன் என்று அழைத்தனர். இயற்கையில் ஈடுபாடு மிக்க பாவேந்தரின் கவிதைகள் கருத்தாழமும், கற்பனை சுவையும் கொண்டு இருந்தது. அதில் அவர் எழுதிய அழகான கற்பனை கவிதையில், நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை என்று எழுதியுள்ளார். வெள்ளம்போல் தமிழர் கூட்டம், வீரங்கொள் கூட்டம், அன்னார் உள்ளத்தால் ஒருவரே என்று பாடி தமிழரிடையே ஒற்றுமையை வலியுறுத்தினார்.

சாதி மறுப்பு

தனது கவியாற்றல் மூலம் சாதி வெறி பிடித்தவர்களுக்கு எதிராக போர்க்குரல் விடுத்தார். வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள் மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ என்று கவிதை வடிவில் இளமையில் கணவரை இழந்த பெண்ணின் மறுமணத்தை ஆதரித்தார். மாதர் உரிமை மறுப்பது மாண்பா, மாதர் முன்னேற்றத்தில் மகிழ்வது மாண்பா ஆய்ந்துபார் என்று பெண் இன விடுதலைக்கு வித்திட்டார். "தன் நண்பர்கள் முன்னால் பாடு" என்று பாரதி கூறப் பாரதிதாசன் "எங்கெங்கு காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து, இரண்டு பாடல்களைப் பாடினார். இவரின் முதற் பாடல், பாரதியாராலேயே 'சுப்பிரமணிய கவிதா மண்டலத்தை சேர்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது' என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது. புதுச்சேரியில் இருந்து வெளியான தமிழ் நாளிதழ்களில், "கண்டழுதுவோன்", "கிறுக்கன்", "கிண்டல்காரன்", "பாரதிதாசன்" எனப் பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார். தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாகக் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.

சாகித்ய அகாடமி விருது

பிரபல எழுத்தாளரும், திரைப்படக் கதாசிரியரும், பெரும் கவிஞருமான பாரதிதாசன், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946-ம் ஆண்டு ஜூலை 29-ந் தேதி அறிஞர் அண்ணாவால், கவிஞர் "புரட்சிக்கவி'' என்று பாராட்டப்பட்டு, ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். பாரதிதாசன், நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். 1964-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந்தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்'' என்ற நாடக நூலுக்கு, 1969-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசால் 1990-ல் பொது உடைமையாக்கப்பட்டன. அவர் மறைந்தாலும், அவருடைய கவிதைகள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்