பயணிப்புறா
புறாக்கள், கூட்டமாக வானில் பறக்கத்தொடங்கினால் அந்த கண்கவர் ஊர்வலம் முடிய பல மணி நேரம் ஆகுமாம்.
புறாக்களில் பலவகையான புறாக்கள் இருக்கிறது. ஹோமர் புறா, உருளி புறா, கன்னியாஸ்திரி புறா, நாட்டிய புறா, படாங்கு புறா, மோர்னிங் புறா (தவுட்டு புறா ), கிங் புறா , ஊது புறா , நுசக்கி புறா, ரோலர் புறா, சிராஸ் புறா, விக்டோரியா புறா , கிரௌண்ட் புறா , கிரீன் புறா , சார்டின் புறா (கட்டை சொண்டு )பிரில் புறா , ஜிப்ரா புறா , ஆஸ்திரில புறா , நமக்குவா புறா உள்ளிட்டவை உள்ளன.
முதல் உலக போரிலும், இரண்டாம் உலகபோரிலும் புறாக்கள் முக்கிய பங்கு வகித்தது. புறாக்களை ெஜா்மன் நாடு தூது அனுப்ப பயன்படுத்தியது.
வட அமெரிக்காவின் மலைப்பகுதிகளில் ஒரு காலத்தில் கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டிருந்தவை தான் பயணிப்புறா (Passenger Pigeon) எனப்படும் காட்டுப் புறாக்கள். நம்ம ஊர் காக்கையைப்போல இவை காணும் இடங்களில் எல்லாம் நிறைந்திருந்தன.
வட அமெரிக்காவில் கோடிக்கணக்கில் வாழ்ந்து கொண்டிருந்த இந்த புறாக்கள், கூட்டமாக வானில் பறக்கத்தொடங்கினால் அந்த கண்கவர் ஊர்வலம் முடிய பல மணி நேரம் ஆகுமாம். அண்ணாந்து பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பயணிப்புறாக்கள் சாரை சாரையாக வந்துகொண்டே இருக்கும் காட்சிகள் அந்த நாட்களில் சர்வ சகஜமான ஒன்றாக இருந்திருக்கிறது.
வான்வெளியை அடைத்துவிடும் இந்த மெகா ஊர்வலங்களால் அந்த பகுதியே கடும் மேக மூட்டத்திற்கு உள்ளானதை போல் மாறிவிடுமாம். வட அமெரிக்காவில் அக்காலத்தில் இருந்த மொத்த பறவைகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு இந்த பயணிப்புறாக்கள் இருந்திருக்கின்றன. தோராயமாக 5 பில்லியன் பறவைகள் இருந்திருக்கலாம்என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
பல பறவைகள் ஒரே மரத்தை ஆக்கிரமித்ததால், அவற்றின் பாரம் தாங்காமல் மரங்களின் கிளைகளும், சமயங்களில் மரங்களுமே முறிந்துவிழுந்த சம்பவங்களும் அரங்கேறியிருக்கின்றன. இப்படி நிறைந்து கிடந்த பயணிப்புறாக்கள், ரெயில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மிக வேகமாக அழிவை நோக்கிச்சென்றன.