எண்ணெய் குளியல்
நவீன வாழ்க்கை முறை உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் உடல்நலனில் ஏற்படும் பிரச்சினைகளை களையவும் எண்ணெய் குளியல் அவசியம்.;
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்களும், புதன், சனிக்கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்கிறது, சித்த மருத்துவம்.
சீரகம் சேர்த்துக் காய்ச்சிய நல்லெண்ணெயை தேய்த்துக் குளிப்பதன் மூலம் ரத்தக் கொதிப்பு, அதிக உடல் சூடு, தூக்கமின்மை, மன அமைதியின்மை போன்ற பித்த நோய்களைத் தடுக்கலாம், குறைக்கலாம்.
செம்பருத்தி, நெல்லிக்காய், கரிசாலை சேர்த்துக் காய்ச்சிய நல்லெண்ணெய், முடி வளர்ச்சியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இளநரையைத் தடுக்க உதவும். மனதை அமைதிப்படுத்தும்.
சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள அரக்கு தைலத்தை பயன்படுத்துவதன் மூலம் உடல் நாற்றம், தொண்டை பிரச்சினை, ரத்தக் குறைவு போன்ற நோய்கள் விலகும். சளி, இருமல், சைனஸ் போன்ற கப நோய்களை போக்கச் சுக்கு தைலத்தால் தலைக்கு குளிக்கலாம்.
அத்துடன் வாரம் இரு முறை தலை முதல் கால்வரை எண்ணெய் தேய்த்துக் குளித்துவருவதால், சரும ஆரோக்கியம் மேம்படும். உடலின் வெப்பம் குறையும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தோல் நோய்கள் தொலைந்து போகும், பசி அதிகரிக்கும். உடல் முழுவதும் எண்ணெய் தடவுவதால், ரத்த ஓட்டம் சீரடையும். உடலின் வர்மப் புள்ளிகள் தூண்டப்பட்டு, வாத நோய்கள் குணமடையும். மன அழுத்தம் குறையும்.
எண்ணெய் குளியல் நாளன்று அசைவ உணவுகள், காரம் அதிகமுள்ள பொருட்கள், மசாலாப் பொருட்கள், எளிதில் செரிக்காத பண்டங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய் தேய்த்து குளித்த நாளன்று, உடல் சற்று பலமிழந்து காணப்படுவது இயற்கையே.
எனவே, கடினமான வேலைகளைச் செய்யாமல் ஓய்வெடுப்பது நல்லது. அன்றைக்குப் பகலில் உறங்குவதையும் உடலுறவையும் தவிர்க்க வேண்டும் என சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.