நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை தமிழகத்தின் அரசவை கவிஞர் என்று அடையாளம் காட்டப்படும் நிலைக்கு உயர்ந்த வரலாற்றை நாம் அறிவோம்.;
நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் எனும் ஊரில் வெங்கட்ராமன் மற்றும் அம்மணியம்மாள் என்ற தம்பதிக்கு 8-வது குழந்தையாக பிறந்தவர் தான் "நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை". கடந்த 1888-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந் தேதி அன்று இந்த பூமியில் உதித்த இந்த பிள்ளை பின்னாளில் தமிழகத்தின் அரசவை கவிஞர் என்று அடையாளம் காட்டப்படும் நிலைக்கு உயர்ந்த வரலாற்றை நாம் அறிவோம்.
இவருடைய தந்தை மோகனூரில் காவல் துறையில் பணிபுரிந்து வந்தவர். இவரது தாயார் மிகுந்த பக்தியுடன் விளங்கி வந்தார். நாமக்கல் மற்றும் கோவையில் பள்ளிக்கல்வி பயின்ற இவர் 1909-ம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் பி.ஏ. படித்தார்.
இவர் தொடக்க காலத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தாளராகவும், பின்பு தொடக்கப்பள்ளி ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தார். 3 மாதம் மட்டுமே அந்த பணியில் இருந்த அவர், சுதந்திர போராட்டம் கனலாய் தகித்த அந்த காலக்கட்டத்தில் அவரும் இந்த போராட்டத்தில் குதித்தார்.
முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப்போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்து காங்கிரசில் இணைந்து சுதந்திர போரில் பங்கேற்றார்.
தேசபக்தி மிக்க தனது பேச்சினால் பல இளைஞர்களை தேசத்தொண்டர்களாக மாற்றினார். மேலும் இவர் அரசின் தடை உத்தரவுகளை மீறி மேடையில் சொற்பொழிவு ஆற்றும் வல்லமை கொண்டவர்.
"கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும் யாரும் சேருவீர்"
என்னும் பாடலை 1930-ம் ஆண்டில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தின் போது தொண்டர்களின் வழிநடைப் பாடலாக பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.இதை பொறுக்காத ஆங்கிலேய அரசு இவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.
இவ்வாறு உணர்ச்சி மிகு தேச பக்தி பாடலை பாடியதுடன், தேசியத்தையும் காந்தியையும் போற்றியவர். இவருடைய கவிதைகள் சுதந்திர போராட்டத்தைப் பற்றி அமைந்துள்ளதால் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை காந்திய கவிஞர் என அழைக்கப்படுகிறார்.
'தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமை செயலக பத்து மாடிக்கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தமிழக சட்ட மேலவை உறுப்பினராக நியமனம் செய்ய பெற்றார். மாநில அரசின் அரசவை கவிஞர் பட்டம் பெற்ற அவர், இந்திய அரசின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான "பத்மபூஷன்" விருதும் பெற்றுள்ளார்.
'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.' 'என்று இந்திய மாணவ செல்வங்களான இளந்தலைமுறைக்கு அறிவுரை கூறிய இந்த கவிஞர் பெருமகனார் கடந்த 1972-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி தனது 83 வயதில் விண்ணுலகம் சேர்ந்தார். அவர் மறைந்தாலும், அவரது மங்கா புகழும், அவருடைய கவிதை, பாடல் வரிகளும் காலத்திற்கும் நிலைத்து நின்று அவரது புகழ்பாடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.