நல்லது சொல்லும் 'நல்வழி'
மனிதனின் வாழ்க்கைக்கு நன்மை பயக்கும் விஷயங்களை பேசிய ‘நல்வழி’ என்ற நூல், அவ்வையாரின் நூல்களில் முதன்மையானதாக போற்றப்படுகிறது.;
சங்க காலப் புலவர்களில் பெயர் பெற்ற பெண் புலவராக இருந்தவர், அவ்வையார். இவர் மூதுரை, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நல்வழி போன்ற நூல்களை இயற்றி இருக்கிறார். இதில் மனிதனின் வாழ்க்கைக்கு நன்மை பயக்கும் விஷயங்களை பேசிய 'நல்வழி' என்ற நூல், அவ்வையாரின் நூல்களில் முதன்மையானதாக போற்றப்படுகிறது. கடவுள் வாழ்த்து பாடலோடு, 41 பாடல்களைக் கொண்ட இந்த நூலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் இங்கு காண்போம்.
பாடல்:
வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை
விளக்கம்: வழக்காடு மன்றத்தில் (கோர்ட்) பொய் சாட்சி சொல்பவர் வீடு ஒருவருக்கும் பயன்படாமல் போகும். அந்த வீட்டில் வேதாளம் குடிபுகும். வெள்ளை எருக்கம் பூ பூக்கும். பாதாள மூலி என்னும் கொடிய விஷம் உள்ள கொடி வளரும். மூதேவி போய் வாழ்வாள், பாம்பு குடியேறும். ஆதலால் நியாய அநியாயங்களை அலசி ஒருவரின் பிரச்சினையை தீர்க்க உதவும் வழக்காடு மன்றத்தில் நாம் பொய் சாட்சி சொல்லக் கூடாது.