அன்பின் மறுஉருவம் அன்னைதெரசா

1979-ல் அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற இவர் அன்னை தெரசா என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.;

Update:2023-08-25 21:38 IST

உலகில் அன்புக்கு ஏங்காத உயிரினங்களே கிடையாது. அதுவும் இந்த காலகட்டத்தில் மனிதர்களிடையே அன்பு, அரவணைப்பு என்ற வார்த்தைகள் எல்லாம் மறைந்து விட்டன.

அன்னை தெரசா

கொல்கத்தாவில் அன்பின் மறுஉருவமாய் திகழ்ந்தார் ஆக்னஸ் என்ற அன்னை தெரசா. இவர் 1910-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி அல்போனியாவில் பிறந்தார். இவர் சிறுவயதில் இருந்தே தனது தந்தையின் உறுதுணையோடு சமூக சேவைகளில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். தந்தையின் மறைவுக்கு பிறகு தனது 12-வது வயதில் கிறிஸ்தவ அருட்சகோதரிகளின் சேவைகளால் ஈர்க்கப்பட்டு துறவறம் மேற்கொள்ள முடிவு செய்தார்.

18 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய ஆக்னஸ் "சாடலிட்டி ஆப் சில்ட்ரன்ஸ் ஆப் மேரி" என்ற அமைப்பில் உள்ள லொரேட்டோ சகோதரிகளின் சபையில் தன்னை பணியாளராக இணைத்துக்கொண்டார். 1929-ம் ஆண்டு ஆக்னஸ் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதற்காக இந்தியா வந்தார். 1942-43-ம் ஆண்டுகளில் மத கலவரங்களும், விடுதலை போரும், 2-ம் உலகப்போரும் உச்சக்கட்டத்தில் இருந்தது. அதிலும் ஆக்னஸ் இருந்த கொல்கத்தாவில் கலவரங்கள் இல்லாத நாட்களே இல்லை என்ற நிலை உருவானது. இது அவரை பெரிதும் பாதித்தது.

பத்மஸ்ரீ விருது

கலவரத்தால் ஆதரவற்றோர்களை கண்ட ஆக்னஸ் அவர்களுக்கு உதவுவதற்காக கல்வி பணியில் இருந்து தன்னை விடுவித்து கொண்டார். இவர் தனது ஆக்னஸ் என்ற இயற்பெயரை தெரசா என மாற்றிக்கொண்டார். அன்று முதல் தெரசா ஆதரவற்றோர்கள், பசியினால் வாடுபவர்கள், நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய துவங்கினார். 1950-ம் ஆண்டு "பிறர் அன்பின் பணியாளர்" என்ற சபையினை தொடங்கி சேவை செய்ய துவங்கினார். 1962-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் "நாட்டுக்கு பாரம் என மற்றவர்களால் புறக்கணிக்கப்படுபவர்களை பாதுகாப்பதே எனது பணி. இதுவே இறைவனின் கட்டளையும் கூட" என்று கூறினார்.

குழந்தைகள் காப்பகம்

பல இந்து அமைப்புகளாலும், மற்ற அமைப்புகளாலும் பல விமர்சனங்களை சந்தித்தார். இருந்தபோதும் தனது இலக்கில் இருந்து ஒருபோதும் மாறவில்லை. மேலும் இவர் காளிகாட் எனும் இல்லத்தை தொடங்கி சமூகத்தால் ஒதுக்கப்பட்ட நோயாளிகளின் மருத்துவம், மற்றும் இறுதிச்சடங்குகளை செய்து வந்தார். "அழகியதொரு மரணம் என்பது விலங்குகளைப் போல் வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் அன்புக்காட்டப்பட்ட, பிறரால் வேண்டப்பட்ட தேவதூதர்களைப் போன்ற உணர்வை பெற்றபின் மரிப்பது." என்பதே தெரசாவின் கூற்றாகும். பின்னர் தொலைந்து போன குழந்தைகளுக்காக குழந்தைகள் காப்பகத்தையும் நிறுவினார். இவை அனைத்தையும் அரசின் உதவியுடன் தெரசா செய்து வந்தார்.

அமைதிக்கான நோபல் பரிசு

மேலும் "பிறர் அன்பின் பணியாளர்" சபையை இந்தியாவில் மட்டுமல்லாது பல நாடுகளில் நிறுவி தனது சேவையை தொடர்ந்தார். 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற இவர் அன்னை தெரசா என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். தொடர்ந்து பல விருதுகளை பெற்ற இவர் 1997-ம் ஆண்டு இந்த மண்ணுலகை விட்டு விலகினார். அவர் இறந்த அன்று இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் கலங்காத கண்களே கிடையாது. இந்திய அரசு 2010-ல் அவரது நூற்றாண்டிற்காக அவரின் உருவம் பதித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட்டு கவுரவித்துள்ளது. அன்று வெறும் 13 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட "பிறர் அன்பின் பணியாளர்" சபை இன்று 600-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் இயங்கி கொண்டிருக்கிறது. அன்னை தெரசா மறைந்தாலும் அனைத்து இந்தியரின் இதயத்திலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தன் வாழ்க்கையையே ஆதரவற்றோர்களுக்காக அர்ப்பணித்த அன்னை தெரசாவை அன்பின் மறுஉருவம் என்றால் மிகையாகாது.

Tags:    

மேலும் செய்திகள்