உடல் பருமனை கட்டுப்படுத்தும் காலை நேர பழக்கங்கள்

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு பலரும் விரும்புகிறார்கள். அதற்காக உணவு விஷயத்தில் கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்கள்.;

Update:2023-08-10 21:07 IST

உண்ணும் உணவை தவிர சில பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலமே உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியும். அதற்கு காலை வேளையில் செய்ய வேண்டிய சில விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

வெதுவெதுப்பான தண்ணீர்:

உடல் பருமனுக்கும், வளர்சிதை மாற்றத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. வளர்சிதை மாற்றம் மெதுவாக நடைபெறுவது உடல் பருமனுக்கு வித்திடும். காலையில் எழுந்தவுடன் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் சூடான நீர் பருகுவது வளர்சிதை மாற்றத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். ஆயுர்வேதத்தின்படி, எலுமிச்சை மற்றும் தேன் கலந்த வெதுவெதுப்பான நீரை காலை வேளையில் பருகுவது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும். உடல் எடையைக் குறைக்க உதவும்.

உடற்பயிற்சி:

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமானது. இலகுவான உடற்பயிற்சிகளை செய்தால் கூட போதும். அவை உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்கும். ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதும் உடலை வலுப்படுத்த உதவும். வீட்டிலும் எளிமையான உடற்பயிற்சிகளை செய்து வரலாம். தினமும் உடற்பயிற்சி செய்து வருவது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும்.

சூரிய ஒளி:

உடலுக்கு நன்மை சேர்க்கும் வைட்டமின் டி, காலை நேர சூரிய கதிர்களில் நிறைந்துள்ளது. அது உடலுக்கும், மனதுக்கும் நேர்மறை ஆற்றலை அளிக்கும். காலைவேளையில் திறந்த வெளி பகுதியில் உடற்பயிற்சி செய்யலாம். வீட்டு தோட்டத்தில் வளரும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, அந்த பகுதியிலேயே நடைப்பயிற்சி செய்வது போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். அப்போது சூரிய கதிர்களும் உடலில் படும் என்பதால் ஒரே சமயத்தில் இரட்டி பலன்களை பெறலாம். வைட்டமின் டி உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.

காலை உணவு:

காலை உணவை குறைவாக உண்பதோ, அறவே தவிர்ப்பதோ உடல் பருமனை குறைக்க உதவாது. இத்தகைய முறையற்ற உணவுப்பழக்கம் உடலை பலவீனப்படுத்திவிடும். பசியை தூண்டி உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுத்துவிடும். எனெனில் நீண்ட நேரம் பட்டினியாக இருப்பது அதிகம் சாப்பிட வைத்துவிடும். அத்துடன் பட்டினி கிடப்பது ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு வழிவகுக்கும்.

கலோரிகள்:

காலையில் என்ன சாப்பிடப்போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிடுங்கள். அப்போதுதான் அந்த உணவில் எவ்வளவு கலோரிகள் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஏனெனில் கலோரிகளின் அளவு அதிகரித்தால் உடல் பருமன் பிரச்சினை எட்டிப்பார்க்கும்.

Tags:    

மேலும் செய்திகள்