நவீன அறிவியல் உலகம்
சுவீடன் அரசானது, கார்கள் மற்றும் லாரிகள் போன்ற அனைத்து மின்சார வாகனங்களை ஓட்டும்போது, சார்ஜ் செய்வதற்கு வசதியாக உலகின் முதல் மின்மயமாக்கப்பட்ட பாதையை உருவாக்க உள்ளது.;
2035-ம் ஆண்டு முதல் அனைத்து புதிய கார்களும் பூஜ்ஜிய கார்பன் டை ஆக்சைடு (CO2) உமிழ்வைக் கொண்டிருக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் ஒரு சட்டத்தை இயற்றியது. இதனால் சுவீடன் அரசானது, கார்கள் மற்றும் லாரிகள் போன்ற அனைத்து மின்சார வாகனங்களை ஓட்டும்போது, சார்ஜ் செய்வதற்கு வசதியாக உலகின் முதல் மின்மயமாக்கப்பட்ட பாதையை உருவாக்க உள்ளது. இந்த மின்சார பாதையில் மின் வாகனங்கள் செல்லும்போது, தானாகவே வாகனத்தின் பேட்டரியானது சார்ஜ் செய்து கொள்ளும். மின்சார வாகனங்கள் இயக்கத்தில் இருக்கும்போது, சார்ஜ் செய்யப்படுவதால் சார்ஜிங் செய்வதற்கு சார்ஜிங் ஸ்டேஷன்களில் அதிக நேரம் செலவழிக்க வேண்டியதில்லை. 2025-ம் ஆண்டிற்கு முன்னதாக இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் சார்ஜிங் செய்ய மூன்று முக்கிய வழிகள் உள்ளன. மேல்நிலை கடத்தும் முறை, தரை அடிப்படையிலான கடத்தும் முறை மற்றும் தரை அடிப்படையிலான தூண்டல் சார்ஜிங் முறை. முதலாவது முறையில், நெடுங்சாலையில் மேல்நிலை கம்பிகளின் உதவியோடு மின்சாரம் வழங்குவது. இதன் மூலமாக கனரக வாகனங்களை சார்ஜ் செய்ய அனுமதிக்கும். இது ரெயில்கள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை போன்றது. சாலையில் உள்ள தரைமட்ட மின்சார தண்டவாளங்கள் மூலம் வாகனத்தின் பேட்டரிக்கு ஆற்றல் கடத்தப்படுகிறது.
இரண்டாவது முறையில், நிலத்திற்கு கீழே அமைக்கப்பட்ட சார்ஜ் சுருள்களை பயன்படுத்தி, மின்சக்தியை வாகனத்தில் உள்ள பேட்டரிக்கு அனுப்பி சார்ஜ் செய்வது.
மூன்றாவது முறையில், இ.ஆர்.எஸ் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களில் உள்ளது போல, வயர்லெஸ் முறையில் வாகனங்களை சார்ஜ் செய்ய சாலையில் ஒரு பேட் அல்லது பிளேட் கொடுக்கப்படலாம். இந்த சாலையில் செல்லும் வாகனங்களில் ரிசீவிங் காயில் பொருத்தப்பட்டு ரீசார்ஜ் செய்யப்படும்.
இதில் எந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருவதாக அந்நாடு தெரிவித்துள்ளது. மின்-மோட்டார் பாதைகளைத் திட்டமிடும் நாடுகள் சுவீடன் மட்டுமல்ல, பிரான்ஸ் போன்ற நாடுகளும் மின்மயமாக்கப்பட்ட சாலைகளை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகின்றன.