பகைவனிடம் அன்பு காட்டுவோம்

பகைவனை நேசிப்பதில்தான் துன்பமில்லாத அன்பு உலகத்தை ஏற்படுத்த முடியும்.

Update: 2023-07-18 13:46 GMT

பகைவரை நேசி, பகைவரிடம் அன்பு காட்டு என்றெல்லாம் கூறுவதை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். நண்பனைத்தானே நேசிக்க முடியும். பகைவரை எப்படி நேசிப்பது? என்று கேட்கலாம். நண்பனை நேசிப்பதில் பெருமை என்ன இருக்கிறது? அது எளிதானது. பகைவனை நேசிப்பதில் தான் பெருமை இருக்கிறது. ஏனெனில் அது கடினமானது.

கடினமானதை நாம் மேற்கொள்ளும் போதுதான் நாம் வெற்றி காண்கிறோம். பகை என்பது நெருப்பு. நெருப்பை நெருப்பால் அழிக்க முடியாது. தண்ணீரால்தான் அணைக்க முடியும். சிந்தித்து பார்த்தால் ஒரு வகையில் நண்பன் நம் பகைவனாகவே இருக்கிறான். பகைவன் நம் நண்பனாக இருக்கிறான்.

நண்பன் நம் குறைகளை நம்மிடம் சொல்வதற்கு சங்கடப்பட்டு அதை மறைத்து விடுவான். அதனால் அவனை அறியாமலே அவன் நமது வீழ்ச்சிக்கு காரணமாகிறான். மேலும் கெட்ட பழக்கங்களும் சில சமயத்தில் நம்மிடம் தொற்றிக் கொள்கின்றன. நமது குறைகளை காட்டுபவன் நம் பகைவனே, அதனால் நாம் நமது தவறை திருத்திக் கொள்ள வாய்ப்பு உண்டாகிறது.

நண்பன் நம் படுக்கையாக இருக்கிறான். அதனால் தான் நாம் சுகமாக உறங்கி விடுகிறோம். உறங்குவதால் என்ன பயன்? அதனால் நாம் முழு சோம்பேறியாகத்தான் இருக்கிறோம். ஆனால் பகைவனோ அலாரமாக இருக்கிறான். அவனாலேயே நாம் விழிப்படைகிறோம். சுறுசுறுப்பாக இயங்குகிறோம். எனவே சோம்பலை எதிர்கொள்ள நாம் அதிகமான சக்திகளை பெற முயற்சிக்கிறோம். நமக்கு தெரியாமல் நமக்குள் புதைந்து கிடக்கும் ஆற்றல்களும், திறமைகளும் அவனாலேயே வெளிப்படுகிறது. பகைவன் சாணைக்கல்லாக இருக்கிறான். அவனாலேயே நம் அறிவு கூர்மையாகிறது. வாழ்க்கை என்பது போராட்டத்தால் முன்னேறுகிறது. பகைவனே இதற்கு உதவுகிறான். வாழ்க்கை என்பது முரண்பாடுகளால் இயங்குகிறது. நேர் மின்னாற்றலும், எதிர் மின்னாற்றலும் சேர்ந்தால்தான் மின்விளக்கு எரியும். பகைவன் எதிர் மின்னாற்றலாக இருக்கிறான். அவனாலேயே நாம் ஒளிபெறுகிறோம்.

பகைவன் போதி மரமாக இருக்கிறான். அதன் நிழலில் நமக்கு ஞானம் கிடைக்கிறது. நம்மிடம் இருப்பதுதான் உண்மை என்று நினைப்பதனால் தான் பிரச்சினைகள் உண்டாகிறது. பகைவனிடம் உண்மை இருக்கலாம். நேசம் என்ற விளக்கினால்தான் அதை நாம் காணமுடிகிறது. கடுமையான தவத்தினால் மட்டுமே அழியக்கூடிய அகம்பாவத்தை பகைவன் சுலபமாக அழித்து விடுகிறான். அகம்பாவத்தை அழித்தவன் ஞானம் அடைகிறான்.

இருள் இல்லையென்றால் விளக்கு தேவைப்படுவதில்லை. பகைவன் இல்லையென்றால் நேசத்திற்கு அவசியம் இல்லை. பகைதான் நேசத்திற்கு அர்த்தத்தை தருகிறது. நம்மை நேசிப்பவர்களை மட்டுமே நாம் நேசித்து கொண்டு இருப்பதால் உலகில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. பகைவனை நேசிப்பதில்தான் துன்பமில்லாத அன்பு உலகத்தை ஏற்படுத்த முடியும்.

Tags:    

மேலும் செய்திகள்