நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்
நீர்வளத்தின் அருமைகளையும், அதனை திறம்பட சேமித்து பயன்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றியும் இந்த கட்டுரையில் காண்போம்.;
'நீர்இன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு'
திருவள்ளுவரின் திருவாக்கு இது. நீர் இல்லாமல் இந்த உலகில் வாழ முடியாது. தற்போது மழை குறைவதும், வறட்சி நீடிப்பதுமான நிலை அரங்கேறி கொண்டிருக்கிறது. எனவே நீர்வளத்தின் அருமைகளையும், அதனை திறம்பட சேமித்து பயன்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றியும் இந்த கட்டுரையில் காண்போம்.
உயிர்களின் வாழ்வாதாரமே தண்ணீர் தான். அதனால் தண்ணீரை திரவத் தங்கம் என்று சிறப்பிக்கிறார்கள். திண்ம, திரவ, வாயு ஆகிய மூன்று நிலைகளில் தண்ணீர் காணப்படுகிறது. பனிக்கட்டியாக திண்ம நிலையிலும், நீராக திரவ நிலையிலும், நீராவி மற்றும் நீர்கோவையாக வாயு நிலையிலும் தண்ணீர் உள்ளது. நீர் சுவையற்ற, மணமற்ற, உருவமற்ற பொருளாகும். அது சார்ந்திருக்கும் பொருட்களின் வடிவத்தை தண்ணீர் பெறுகிறது.
புவிப் பரப்பில் 71 சதவீதம் பகுதி நீரால் சூழப்பட்டு உள்ளது. உலகில் உள்ள நீரில் 3 சதவீதம் மட்டுமே நன்னீர். இதிலும் 2 சதவீதம் பனிக்கட்டியாக உள்ளது. மீதமுள்ள 1 சதவீதம் தண்ணீர் மட்டுமே பூமி முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.
உயிரினங்கள் வாழ தண்ணீர் மிக அவசியம். மனித உடலில் 70 சதவீதம் தண்ணீர் உள்ளது. தண்ணீர் இல்லையெனில் நம் உடலில் உள்ள செல்கள் அழிந்து மனிதன் இறக்க நேரிடும். தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நீர் பலவிதமான பொருட்களை கரைத்து அவற்றிற்கு வெவ்வேறு சுவைகளையும், வாசனைகளையும் கொடுக்கிறது. பல்வேறு வேதிப் பொருட்களின் கரைப்பானாகவும், தொழிற்சாலைகளில் குளிர்விப்பனாகவும் தண்ணீர் பயன்படுகிறது. எனவே வர்த்தக ரீதியாகவும் நீர் முக்கியத்துவம் பெறுகிறது.
மழை பொழிவதன் மூலம் நாம் அதிக அளவு தண்ணீரைப் பெறுகிறோம். மழை பொழிவதற்கு மூல காரணமாக இருப்பது அடர்ந்த காடுகள் தான். மலைப்பகுதிகளில் பொழியும் மழையே அருவியாக பெருக்கெடுத்து நதிகளாக ஓடி நமது நீர்த் தேவையை பூர்த்தி செய்கிறது. காடுகளையும், மலைவளங்களையும் அழியாமல் பேணி காப்பதன் மூலம் நீர்வளத்தை பெருக்கலாம்.
வீணாக ஓடி கடலில் கலக்கும் நீரை புதிய நீர்நிலைகளை உருவாக்கி தேக்கி வைப்பதன் மூலம் வளம் பெருக்கலாம். மழைநீர் சேகரிப்பு முறைகளை எல்லா இடங்களிலும் உருவாக்கி நிலத்தடி நீர் வளத்தை உயர்த்தலாம்.
தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்கக்கூடாது என்பது தண்ணீரின் அருமையை விளக்கும் பழமொழி. நாகரிகத்தில் தலைசிறந்த பழந்தமிழர்கள் தண்ணீரை மிகவும் மேன்மை உடையதாக போற்றி மதித்தனர். சிறந்த நீர் மேலாண்மை கோட்பாடுகளை கடைபிடித்தனர். மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் 10-ம் நூற்றாண்டில் மன்னர் ராஜராஜன் காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டன. ஆனால் சமீப காலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து வருகின்றன. நீர் வற்றும்போது ஏரிகளிலும், குளங்களிலும் குப்பைகள், கற்கள், இயற்கை கழிவுகள் எல்லாம் சேர்ந்து மேடுகளாகவும், கரைகளாகவும் மாறி விடுகின்றன. பின்பு அந்த இடத்தில் வீடுகட்டி குடியேறுகின்றனர். இப்படி குடியிருப்புகளாக மாறும்நீர் நிலைகளாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே நீர்நிலைகளை பராமரித்தும், குடியேற்றங்களை தடுத்தும் நீர்வளம் பெருக்கலாம்.
நீர்வளத்தின் அத்தியாவசியத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். நீரை சிக்கனமாக பயன்படுத்துவதில் ஒவ்வொருவரும் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும்.