கூட்டு குடும்பமாய் வாழ பழகுவோம்

குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி, மே 15-ந் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது.;

Update:2023-06-13 20:20 IST

சிட்டுக்குருவிக்கும் சிறு கூடு உண்டு. குடும்பத்திற்காக கூடு அமைத்து, அதில் தன் குஞ்சுகளை குடியேற்றும். இரையை தேடிச் சென்று வாயில் கவ்வி, குஞ்சுகளுக்கு ஊட்டி மகிழ்ந்து, சுகமான குடும்ப பந்தத்தை அனுபவிக்கும். சந்தோஷங்கள், சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புத அமைப்பு குடும்பம். அது அனைத்து உறவுகளும் சங்கமித்திருக்கும் சமுத்திரம். இன்று கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து… தனிக் குடும்பங்களாய் பிரிந்து வாழ்கிறோம்.

இன்றைய நவீன உலகில், வாழ்வாதாரத்திற்காக, சொந்த இடங்களை விட்டு, வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. ஒவ்வொருவரும், குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி, மே 15-ந் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது.

முன்பெல்லாம் கிராமத்திலும், நகரத்திலும்கூட கட்டுப்பாடான வாழ்க்கை முறை, பெற்றோருக்கு அடங்கிய பிள்ளைகள், கூட்டுக் குடும்ப வாழ்க்கை என நன்றாகவே இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக இவை அனைத்துமே புறந்தள்ளப்பட்டு நேர்மாறாகி விட்டன. மாறிவரும் நகர வாழ்க்கை, மேற்கத்திய நாகரிகம், அறிவியல் வளர்ச்சி இவற்றின் தாக்கம் மெல்ல மெல்ல நம்மையும் மாற்றிவிட்டது. கூட்டுக்குடும்ப வாழ்க்கையைப் பொருத்தவரை வீட்டில் மூத்தவர்கள் இருப்பதால் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதுடன், கட்டுப்பாடும் நிறைந்திருக்கும். ஆனால், இன்றோ பலரும் தன்னிச்சையாக வாழவும், முடிவுகளை மேற்கொள்ளவும் கற்றுக்கொண்டுவிட்டனர். தாய், தந்தை கண்டிப்புடன் இருப்பதால் குழந்தைகளைச் சிறப்பாக வளர்க்க முடிகிறது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் வேலைக்குச் செல்ல நேரிடும்போது குழந்தைகளைப் பொறுப்பாக யாரும் கவனிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

அத்துடன் அவர்கள் என்ன படிக்கிறார்கள், எங்கு செல்கிறார்கள் போன்றவற்றைக் கவனிக்கக்கூட நேரமிருப்பதில்லை. எனவே பலர் கணினி, அலைபேசி, திரைப்படம், நண்பர்களுடன் கேளிக்கை, விருந்து என்று திரியநேரிடுகிறது. கூட்டுக் குடும்ப வாழ்க்கையாக இருந்தால் அரவணைப்பும், கண்டிப்பும் கிட்டும். இன்றுள்ள இளம் தலைமுறையினரில் 90 சதவீதம் பேருக்கு தங்களது பெற்றோரைத் தவிர, வேறு உறவு முறைகளை தெரியவாய்ப்பே இல்லை. உறவினர்கள் வீட்டு விசேஷங்களிலும், நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதற்கு இவர்களுக்கு நேரமோ, வாய்ப்போ கிடைப்பதில்லை.

பெரும்பாலான நேரங்களை தனிமையிலும், பொழுதுபோக்கு அம்சங்களிலுமே கழிக்க நேரிடுகிறது. இதனால் மன அழுத்தம், வெறுப்பு, நிம்மதியின்மை போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன. தங்களுடைய குறைகளையோ, நிறைகளையோ மனம் விட்டு யாரிடமும் பேச முடிவதில்லை. குறைந்தபட்சம் தான் செய்வது சரியா, தவறா என்று முடிவெடுக்கக்கூடத் தெரிவதில்லை.

இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. தவறான வழிகளை நாட நேரிடுகிறது. தனிக்குடித்தனம் என்றால் யாரும் நம்மைத் தட்டிக் கேட்க மாட்டார்கள், சுதந்திரமாக இருக்கலாம் என்ற பரவலான கருத்து நிலவுகிறது. இது முழுக்க முழுக்க தவறு. எல்லாமே நமது செயல்களில்தான் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் கூட்டு வாழ்க்கை ஏன் தேவை என சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் அதில் உள்ள நிறைகளை உணர முடியும். தற்போது வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் மட்டும் தான் உறவுகள் கூட்டாக இருக்கின்றனரே தவிர, கூட்டு குடும்பமாக வாழ்வது என்பது அதிசயமாக இருக்கின்றது. தாத்தா, பாட்டி, பெரியப்பா, மாமா, அத்தை, பேரக்குழந்தைகள், என்ற வாழ்வியல் முறை மிகவும் இன்பமானது என்பதை மறந்தே போய்விட்டோம். முன்பு கோடைகால விடுமுறையில் தங்கள் குழந்தைகளை தாத்தா, பாட்டி, மாமா என தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைப்பார்கள். ஆனால் இன்று சினிமா, சுற்றுலா என்று பொழுதை கழிக்க நினைக்கின்றனர். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்ந்து கூட்டு குடும்பமாய் வாழ பழகுவோம்.

Tags:    

மேலும் செய்திகள்