சிறுநீரக செயல்பாடுகள்

உடலின் கழிவுத் தொழிற்சாலை என்று அழைக்கப்படுகிற சிறுநீரகங்கள் ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே, உடலின் பொது ஆரோக்கியம் காக்கப்படும்.;

Update:2023-07-23 19:36 IST

பொதுவாகக் கட்டுப்படாத நீரிழிவு நோய், கட்டுப்பாட்டில் இல்லாத ரத்தஅழுத்தம், புகைபிடித்தல், மது அருந்துதல், சிறுநீரகத் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், உடற்பருமன், காசநோய், வலி நிவாரணி மாத்திரைகளின் பக்கவிளைவு, உணவு நச்சுகள், புராஸ்டேட் வீக்கம், புற்றுநோய் போன்றவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துச் சிகிச்சை பெற்றுவிட்டால் பிரச்சினைகள் குறையும். தவறினால், நாளடைவில் எந்த வேலையும் செய்ய முடியாத அளவுக்குச் சிறுநீரகம் செயலிழந்துவிடும்.

சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால், உடலில் கீழ்க்காணும் அறிகுறிகள் தோன்றும். அதாவது, சிறுநீர் பிரிவது குறையும். பசி குறையும். வாந்தி வரும். தூக்கம் குறையும். கடுமையான சோர்வு ஏற்படும். உடலில் அரிப்பு உண்டாகும். முகம் மற்றும் கைகால்களில் வீக்கம் தோன்றும். மூச்சிளைப்பு ஏற்படும். சிறுநீரகப் பாதிப்பு இரண்டு வகைப்படும்: 1. உடனடி பாதிப்பு 2. நாட்பட்ட பாதிப்பு. என்ன பரிசோதனைகள்?

ரத்த யூரியா அளவு. ரத்த யூரியா நைட்ரஜன் அளவு. ரத்த கிரியேட்டினின் அளவு. சோடியம், பொட்டாசியம், கால்சியம் அளவுகள். வயிற்று அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ஐ.வி.பி. பரிசோதனை, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனைகள். சிறுநீரில் மைக்ரோ அல்புமின் அல்லது அல்புமின் பரிசோதனைகள். சிறுநீரில் 24 மணி நேரப் புரத அளவுப் பரிசோதனை. சிறுநீரில் புரதம் அல்லது அல்புமினுக்கும் கிரியேட்டினின் அளவுக்குமுள்ள விகிதாசாரம்.

பரிசோதனை முடிவுகள்: ரத்த யூரியா அளவு, 20 - 40 மில்லி கிராம்/டெ.சி. லிட்டர் என்று இருக்க வேண்டும். இதற்கு மேல் யூரியா அளவு அதிகமானால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக அர்த்தம். ரத்த யூரியா நைட்ரஜன் சரியான அளவு 7 - 20 மி.கி/.டெ.சி. லிட்டர்.

ரத்தக் கிரியேட்டினின் அளவு ஆண்களுக்கு 0.7 - 1.4 மி.கி/.டெ.சி. லிட்டர், பெண்களுக்கு 0.6 - 1.3 மி.கி./டெ.லி., குழந்தைகளுக்கு 0.5 - 1.2 மி.கி./டெ.லி., என்று இருக்க வேண்டும். இதற்கு மேல் அளவுகள் அதிகமானால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கொள்ள வேண்டும். ரத்த யூரியா அளவும் ரத்த யூரியா கிரியேட்டினின் அளவும் பல மடங்கு அதிகம் என்றால், அது உடனடி சிறுநீரகப் பாதிப்பைக் குறிக்கும். சோடியத்தின் அளவு 135 142 மில்லிமோல்/லிட்டர், பொட்டாசியத்தின் அளவு 3.5 5 மில்லிமோல்/லிட்டர், கால்சியத்தின் அளவு 9 11 மி.கி./டெ.லி. என்று இருக்க வேண்டும். ஜி.எப்.ஆர். அளவு ஆண்களுக்கு நிமிடத்துக்கு 95 - 115 மி.லி; பெண்களுக்கு 85 110 மி.லி. இருந்தால் சரியான அளவுதான். 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இது நிமிடத்துக்கு 60 மி.லி. என்ற அளவில்தான் இருக்கும். இது அவர்களுக்கு இயல்பான அளவு. ஜி.எப்.ஆர். அளவு நிமிடத்துக்கு 60 மி.லி.க்குக் குறைவாக 3 மாதங்களுக்கு மேல் நீடித்தால், அது நாட்பட்ட சிறுநீரகப் பாதிப்பைக் குறிக்கும் என டாக்டர்கள் கூறுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்