உலக அமைதி தினம்
“யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தரவாரா” என்று கணியன் பூங்குன்றனார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலக அமைதியை பற்றி கூறியுள்ளார்.;
வருகிற 21-ந் தேதி
ஒரு நாட்டில் எல்லைகள் மற்றும் உள்நாட்டு பிரச்சினைகள் போன்றவற்றால், மோதல்கள், பயங்கரவாதம் மற்றும் அமைதியின்மை எப்போதும் நிறைந்திருக்குமானால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் அச்சத்துடனே இருப்பர். அவற்றை நீக்கி மனித சமூகம் அமைதியான முறையில் வாழ்க்கையை மேற்கொள்ளவும், மக்கள் மனநிறைவுடன் வாழவும் ஐ.நா. பொதுசபையால் முதன் முதலில் 1981-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் 3 வது செவ்வாய்க்கிழமையில் உலக அமைதி தினத்தை கொண்டாட தொடங்கியது. பின் இதுவே ஐ.நா. உறுப்பு நாடுகளின் சம்மதத்துடன் 2002-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 21-ந் தேதியை உலக அமைதி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
2023-க்கு கருப்பொருள்
அதன்படி இந்த ஆண்டுக்கான கருப்பொருள் "அமைதிக்கான நடவடிக்கைகள் உலகளாவிய இலக்குகளுக்கான எங்கள் லட்சியம்" என்பதை மையமாக கொண்டு உலக நாடுகள் அமைதி தினத்தை கொண்டாட உள்ளது. இந்த கருப்பொருளின் படி பயம் மற்றும் வன்முறை இல்லாத, மிகவும் அமைதியான, நீதியான மற்றும் உள்ளடக்கிய சமூகங்களுக்கு நம்மை நெருக்கமாகக் கொண்டுவருவதாகும். மேலும் சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடுங்கள், காலநிலை மாற்றம் குறித்த முன்னேற்பாடு நடவடிக்கை மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் போன்றவற்றை கடைபிடித்தல் ஆகும்.
அமைதிக்கான தூதுவர்கள்
எல்லா காலக்கட்டத்திலும் போரும் மோதலும் பேரழிவையும், வறுமையையும், பசியையும், எண்ணற்ற உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது. மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களை அவர்களது வீடுகளில் இருந்து துரத்தி, பொருளாதார நிலையில் தாழ்த்திவிடுகிறது. எனவே உலக நாடுகளுக்கிடையில் அமைதியை கொண்டுவர கலை, இலக்கியம், சினிமா, இசை, விளையாட்டு ஆகியவற்றில் உலகப் புகழ்பெற்ற பிரமுகர்களை ஐக்கிய நாடுகள் சபை அமைதித் தூதுவர்களாக நியமித்து அமைதிச்செய்திகளை நாடுகளின் அனைத்து பகுதியிலும் கொண்டுசேர்க்கிறது. உலக நாடுகளின் அமைதியை அரசியல் ஆளுமைகளின் கொள்கைகளால் கடைபிடிக்க முடியும்.
தீங்கு செய்யாமல்
"உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண்
செய்யாமை அற்றே தவத்திற்கு உரு"
இந்த குறளில் மனிதன் தான் பெரும் துன்பங்களை பொறுத்துக்கொண்டும், மற்ற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் இருப்பதுமே தவத்தின் வடிவம் என வள்ளுவர் கூறியுள்ளார்.
இதன்படி நாம் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருந்தாலே நம் மனதிலும், உலகத்திலும் அமைதி நிலவிடும்.
நோக்கம்
உலக நாடுகள் அனைத்திலும் அமைதியை நிலைநாட்டுவதே ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய நோக்கமாகும். அமைதியை நிலைநாட்டவும், இந்தியாவின் தலைவர்களும், மாவீரர்களும் எப்போதும் முயற்சி செய்து வருகின்றனர். சர்வதேச அமைதியை ஊக்குவிக்கும் அமைப்புகளுடன் இந்தியா எப்போதும் ஒத்துழைத்து வருகிறது மற்றும் ஐ.நாவில் தொடர்ந்து பங்களித்து வருகிறது.