கியூ.ஆர்.குறியீடுகள் பற்றிய தகவல்கள்

கியூ.ஆர் என்பது விரைவாக பதில் அளித்தல் (Quick Response) என்பதன் ஆங்கிலச் சுருக்கமாகும்.;

Update:2023-09-11 17:23 IST

கியூ.ஆர். குறியீடுகள் நம் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளன. நவீன காலத்தில் பணத்தை கையில் கொண்டு செல்வது என்பது மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. முன்பு பணம் கொண்டு செல்வதை பதிலாக, டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தினர். ஆனால் தற்போது பெட்டிக்கடை தொடங்கி, வணிக வளாகங்கள் வரை கியூ.ஆர். குறியீடுகள் மூலம் எளிதாக பணம் செலுத்தி விடுகிறோம்.

கியூ.ஆர் என்பது விரைவாக பதில் அளித்தல் (Quick Response) என்பதன் ஆங்கிலச் சுருக்கமாகும். அதற்கு முன்பாக, கியூ.ஆர். குறியீட்டின் முன்னோடியான பார்கோடு முறையை பற்றி சற்று அறிந்து கொள்வோம். மளிகைக் கடை மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இருந்து வாங்கும் பொருட்கள் அடைக்கப்பட்ட கவரில் பார்கோடு இடம் பெற்றிருக்கும். இதை ஸ்கேன் செய்வதன் மூலம் விலையை அறிந்து கொள்ளலாம். பார்கோடு முறையை 1952-ம் ஆண்டு, நார்மன் ஜோசப் உட்லேண்ட் மற்றும் பெர்னார்ட் சில்வர் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. பார்கோடில் குறைந்த அளவிலான தகவலை மட்டுமே உள்ளீடு செய்ய முடியும். இதில் உள்ள குறைபாடுகளை களைவதற்காக கொண்டு வரப்பட்ட மேம்பட்ட அமைப்புதான் கியூ.ஆர்.குறியீடு.

1994-ம் ஆண்டு ஜப்பானிய நிறுவனமான டென்சோ வேவின் `மசாஹிரோ ஹரா' தலைமையிலான குழுவின் கீழ் கியூ.ஆர் குறியீடு அமைப்பு முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் வாகன உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட இந்தக் குறியீடானது தற்போது அனைத்து துறைகளிலும் பரவியுள்ளது. பார்கோடு செயல்படுவதைப் போலவே கியூ.ஆர் குறியீடு செயல்பட்டாலும், தோற்றத்தில் வித்தியாசமானது. கியூ.ஆர். குறியீடு என்பது வெள்ளைப் பின்னணியில் கருப்பு சதுர வடிவம் மற்றும் புள்ளிகளின் கலவையைக் கொண்டிருக்கும். தகவல்களை பரிமாறவும் இவை அதிகளவில் பயன்படுகிறது. பார்கோடுகளுடன் ஒப்பிடுகையில் இவை வேகமாக வாசிப்புதிறன் மற்றும் அதிக சேமிப்பு திறனைக் கொண்டுள்ளது. பைட் மற்றும் பைனரி எண்களை அடிப்படையாக கொண்டு கியூ.ஆர். உருவாக்கப்பட்டு தகவல்கள் பதியப்படுகின்றன. ஒவ்வொரு கியூ.ஆர். குறியீடும் வேறுபட்டது. இந்த கியூ.ஆர் கோடில் இருக்கும் மூன்று புள்ளிகளை ஸ்கேன் செய்யும் போது, உயர் வேகத்தில் குறிநீக்கம் (decode) செய்து, மனிதர்களால் படிக்கக்கூடிய தரவு வடிவமாக மாற்றப்படும். எனவே குறியீட்டை தலைகீழாக ஸ்கேன் செய்தாலும், அது சரியாக வேலை செய்யும். மேலும் பார்கோடுகளை விட 10 மடங்கு குறைவான இடத்தையே பயன்படுத்துகிறது. இந்த தரவு மாற்றம் ஒரு சில வினாடிகளில் நடந்தேறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்