தீ உருவாகும் விதம்

நாம் அன்றாட வாழ்க்கையில் பல வகைகளில் நெருப்பை பயன்படுத்துகிறோம். நெருப்பை தீ என்றும் அழைப்பர். வீட்டில் சமையல் செய்வது முதல் தொழிற்சாலைகள் வரை பல்வேறு வகைகளில் நெருப்பு பயன்படுகிறது.

Update: 2023-06-16 14:01 GMT

வழிபாடு

குகைகளில் வாழ்ந்து வந்த ஆதி மனிதன், காடுகளில் தானாகவே ஏற்படும் தீயை பார்த்து முதலில் பயந்தான். பின்னர் நெருப்பின் தன்மையை ஆராய்ந்து அதனை பயன்படுத்த தொடங்கினான். நெருப்பை பல்வேறு செயல்களுக்கு பயன்படுத்திய மனிதன் அதனுடைய மதிப்பை அறிந்து அதை வழிபட தொடங்கினான்.

தீயினால் நமக்கு வெப்பம் கிடைப்பதுடன், உணவை பதப்படுத்தி சமைத்து உட்கொள்ளவும் நம்மால் முடிகிறது. எரிபொருட்கள் எல்லாம் தீயில் எரிவதால் ஆற்றல் உண்டாகி, அதன் மூலம் எந்திரங்களை இயக்க முடிகிறது.

எரிபொருட்கள்

பிரெஞ்சு நாட்டை சேர்ந்த விஞ்ஞானி அந்தோயின் லெவாய்ஸெர் என்பவர் தீயின் இயல்பை ஆராய்ந்தார். ஆக்சிஜனுக்கும், எரிபொருளுக்கும் இடையே நிகழும் ஒரு வேதியியல் வினையின் பயனாக தீ உருவாகிறது என அவர் கூறினார்.

வேதியியல் வினையின் பயனாக உருவாகும் தீ சுடராகவும், ஜீவாலையாகவும் நம் கண்ணுக்கு தெரிகிறது. இந்த நிகழ்ச்சியின் பலனாக ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் உருவாகின்றன. விறகு, கரி, பெட்ரோல், டீசல், போன்றவை எரிபொருட்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த எரிபொருட்கள் கார்பன், ஹைட்ரஜன் ஆகியவற்றின் சேர்க்கையால் உருவானவை.

ஆக்சிஜனின் மூலக்கூறுகள்

எரிபொருட்கள் எரியும் போது ஆக்சிஜன், கார்பனுடன் சேர்ந்து கார்பன்&டை&ஆக்சைடாகவும், ஹைட்ரஜனுடன் சேர்ந்து நீராகவும் மாறுகிறது. தீ கொழுந்து விட்டு பிரகாசமாக எரியும் போது எரிபொருட்களில் இருந்து கார்பன் துகள்களும், புழுதி துகள்களும் உண்டாகின்றன. இவை காற்றுடன் சேர்ந்து செந்நிறமாக ஒளி விடுகின்றன. பொதுவாக நெருப்பு சிகப்பு நிறமாக தோன்றுவதற்கு இதுவே காரணம் ஆகும்.

எரிபொருட்கள் எரிய வேண்டுமானால் அதனுடைய வெப்பநிலை அதிகரித்து எரிநிலைக்கு வரவேண்டும். இந்த வெப்ப நிலையில் அந்த பொருள் எரியத்தொடங்குகிறது. இவ்வாறு எரிவதால் தேவையான அளவு வெப்பம் உண்டாகி அதன் பயனாக எரிபொருட்கள் முழுவதும் எரிந்து எரிதல் நிகழ்ச்சி தொடர்ந்து நிகழ்கிறது. ஒரு பொருள் எரியும் போது ஆக்சிஜனின் மூலக்கூறுகள் எரிபொருட்களின் அணுக்களை உடைக்கின்றன. இவ்வாறு உடைந்த மூலக்கூறுகளுடன் ஆக்சிஜன் இணைந்து சேருகிறது. இந்த சேர்க்கையின் போது பெறப்படும் ஆற்றலே வெப்பம் ஆகிறது.

Tags:    

மேலும் செய்திகள்