அதிக விஷத்தன்மையுள்ள பறவை
ஜூட் பிட்டோஹூய் (பிட்டோஹுய் டைக்ரஸ்) என்ற பறவை, பப்புவா நியூ கினியாவில் காணப்படுகிறது. இது அழகோடு ஆபத்தும் நிறைந்த பறவையாகும்.;
ஏனெனில் இது ஒரு விஷத்தன்மை கொண்ட பறவை. பிடோஹூய் இனத்தைச் சேர்ந்த இப்பறவையின் இறக்கை, தலை, கன்னம், தொண்டை மற்றும் வால் ஆகியவை கருப்பு நிறத்திலும், மற்ற பகுதிகள் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. கருவிழியானது சிவப்பு அல்லது அடர் பழுப்புடையதாக உள்ளது.
பொதுவாக இந்த பறவைகள் 22 முதல் 23 செ.மீ நீளமும், 65 முதல் 76 கிராம் எடையுடையதாகும். டைக்ரஸ் என்ற வார்த்தை கிரேக்கத்தில் இருந்து பெறப்பட்டதாகும். இந்த பறவைகளின் தோல் மற்றும் இறக்கைகளில் `பேட்ராசோடாக்சின்' என்ற நச்சுக் கலவை காணப்படுகிறது. இந்த நச்சு, வேட்டையாடுபவர்களிடம் இருந்தும், ஒட்டுண்ணிகளிடம் இருந்தும் இப்பறவைகளை பாதுகாத்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. இந்த நச்சுக்கள் ஒருவரின் உடலில் செல்லும்போது தசை முடக்கம், இதயத்துடிப்பு பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. சில நேரங்களில் மரணத்திற்கும் வழிவகுக்குமாம். உள்ளுர் மக்களுக்கு ஜூட் பிட்டோஹூயின் விஷத்தன்மை தெரிந்திருப்பதால், இப்பறவையை வேட்டையாடுவதை முற்றிலுமாக தவிர்க்கிறார்கள்.
இதே விஷத் தன்மையுடைய நச்சானது மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழும் `விஷ டார்ட்' தவளை இனங்களில் மட்டுமே முதன்முதலில் கண்டறியப்பட்டது. இப்பறவையின் தோல்கள், இறகுகள் தவிர எலும்பு, தசைகள் பகுதிகளில் குறைந்த அளவு நச்சு இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இப்பறவை, விசில் அடிப்பது போன்ற சத்தத்தை எழுப்புகிறது. இது சமூகமாக வாழும் பறவையாகும். குழுவாக வாழ்வதால் கூட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதற்கும், குஞ்சுகளுக்கு உணவளிப்பதற்கும் உதவியாக அமைகின்றன. பொதுவாக 350 முதல் 1,700 மீட்டர் உயரம் உள்ள மலைகள், மழைக்காடுகள் மற்றும் சதுப்புநிலக் காடுகளே இவற்றின் வாழ்விடம் ஆகும். அத்தி பழங்கள், பூச்சிகள், சிலந்திகள், வண்டுகள், புற்கள் ஆகியவற்றை விரும்பி உண்கின்றன.