உலகின் விலை உயர்ந்த ஐந்து மீன்கள்

உலகில் வைரம், தங்கம், பிளாட்டினம் மட்டும்தான் அதிக விலைக்கு விற்கப்படுமா என்ன...? உயிருள்ள அரிய பொருட்களும் அந்தத் தகுதியை எட்டிப் பிடிக்க முடியும் என்பதை இந்த மீன்கள் நிரூபித்துள்ளன என்பதற்கு இந்த கட்டுரையே சாட்சி.

Update: 2023-06-23 14:22 GMT

அதிர்ஷ்ட மீன் அரோவனா

61 செ.மீ. நீளம் வரை வளரும் மீன் ரோஸ் பிளாட்டினம் அரோவனா (Rose Platinum Arowana). இந்த இன மீன் ஒன்று, அதிகபட்சமாக 4 லட்சம் டாலர்கள் வரை விலை போயிருக்கிறது. இது, ஆஸ்டியோகிளாஸிடே எனும் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த இன மீன்கள் வாயில் முட்டைகளை வைத்துப் பாதுகாக்கும். பூச்சிகள், இறால் மற்றும் மீன்களை உணவாகக் கொள்ளும். மேற்பரப்பில் தாவி செல்லும் பூச்சிகளை உண்பதால் இதற்கு நீர்க் குரங்கு என்ற பெயரும் உண்டு.

சந்தைகளில், இந்த மீன் இனப்பெருக்கம் செய்யும்முன் இதை அடையாளம் காண இதன் மீது ஒரு அடையாள வில்லையைப் பொருத்தி விடுவார்கள்.

நன்னீர் போல்கா

தைவானில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள (Freshwater Polka Dot Stingray) போல்கா என்ற மீனின் விலை 1 லட்சம் டாலர்கள் என்றால் நமக்கு மூச்சு வாங்கும். 12.7 செ.மீ. வளரும் வட்ட வடிவமான மீனான இது இனப்பெருக்கத்தின்போது 'யு' வடிவத்தில் இருக்கும். இதன் மீது அழகான சிறுசிறு புள்ளிகள் காணப்படும்.

பெப்பர்மின்ட் ஏஞ்சல்

30 ஆயிரம் டாலர் விலையுள்ள 7 மீட்டர் நீளம் வரை வளரும் பெப்பர்மின்ட் ஏஞ்சல் (Peppermint Angel) மீன் ஆழ்கடலில் 120 மீட்டர் ஆழத்தில் காணப்படுவதால் நீச்சல் அடிப்பவர்கள் இதை எளிதாகப் பார்த்துவிட முடியாது.

ஆராய்ச்சிக்காக பிடிக்கப்பட்ட இது வக்கிக்கி அருங்காட்சியகத்தில் உள்ளது. அரிய மீன்களை சேகரிப்போர் இம்மீன்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்குகின்றனர். குக், ஏரொடோர்கா தீவுகளில் இவை காணப்படுகின்றன.

மாஸ்க்டு ஏஞ்சல்பிஷ்

போமாகண்டிடே குடும்பத்தைச் சேர்ந்த மாஸ்க்டு ஏஞ்சல்பிஷ் (Masked Angel fish) 20 ஆயிரம் டாலர் விலையுள்ளது.

21 செ.மீ நீளம் வளரும் இந்த மீனை, பெரும்பாலும் ஹவாய் தீவுகளின் பவளப்பாறையில் ஏறத்தாழ 300 அடி ஆழத்தில் காணலாம். 2009-ம் ஆண்டில் இந்த வகை மீன்களில் ஒரு ஜோடி, ஜப்பானில் உள்ள மீன்காட்சி சாலை ஒன்றிற்கு கொண்டுவரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

பிளேடுபின் பேஸ்லெட்

கரீபியக் கடல் பகுதியில் காணப்படும் பிளேடுபின் பேஸ்லெட் (Bladefin Basslet) என்ற 3 செ.மீ வளரும் மீனின் விலை 10 ஆயிரம் டாலர்கள் ஆகும். இது ஆழ்கடலில் 150 மீட்டர் ஆழத்தில் உள்ளதால் இதைப் பிடிப்பது கடினம்.

Tags:    

மேலும் செய்திகள்