இந்திய வேதியியலின் தந்தை...!

Update:2023-08-04 13:23 IST

இந்தியாவின் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி பிரிவை நிறுவியவர் இவர்தான். இந்தத் துறையில் இவருக்கு கீழே 150 பேர் வேலை செய்தார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ள இவரது முயற்சியால்தான் ஆந்திர பல்கலைக்கழகத்தில் வேதியியல் பிரிவு உருவானது.

பூக்கள், செடிகள், தாவரங்கள் பற்றிய பல அரிய விஷயங்களை ஆய்வு செய்து வெளிக்கொண்டு வந்தவர் தமிழக விஞ்ஞானி டி.ஆர். சேஷாத்ரி. இவரது முழுப் பெயர் திருவேங்கட ராஜேந்திர சேஷாத்ரி.

1900-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந் தேதி குளித்தலையில் பிறந்தவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவரது இளமைப் பருவம் ஸ்ரீரங்கம், திருச்சி ஆகிய இடங்களில் கழிந்தது. கஷ்டப்பட்டு தனது பள்ளிப் படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்தார்.

சென்னை மாநிலக் கல்லூரியின் திறமை வாய்ந்த பேராசிரியர்கள் அளித்த ஊக்கத்தால், ரசாயனத் துறையில் ஆர்வம் கொண்டார், சேஷாத்ரி. அதன்பின் 1927-ம் ஆண்டு மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை ஆரம்பித்த இவர், நோபல் பரிசு பெற்ற ராபர்ட் ராபின்சனின் தலைமையில் பயிற்சி பெற்றார். ரோஜா மற்றும் மணம் வீசும் மற்றொரு பூவிலும் அடங்கியுள்ள கூட்டுப் பொருட்களைக் கண்டறிய வேண்டியதுதான் சேஷாத்ரிக்கு அளிக்கப்பட்ட முதல் அசைன்மென்ட்.

அனைவரும் வியக்கும் வண்ணம் அதிவிரைவில் அதைக் கண்டறிந்தார் சேஷாத்ரி. தனது கல்லூரிப் படிப்பை முடித்து இந்தியா திரும்பிய சேஷாத்ரி, மிகவும் குறைவான சம்பளத்தில் ஆய்வாளராகவும், ஆசிரியராகவும் வேலை செய்தார்.

இந்தியாவின் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி பிரிவை நிறுவியவர் இவர்தான். இந்தத் துறையில் இவருக்கு கீழே 150 பேர் வேலை செய்தார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ள இவரது முயற்சியால்தான் ஆந்திர பல்கலைக்கழகத்தில் வேதியியல் பிரிவு உருவானது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் வேதியியல் பிரிவை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்ற பெருமையும் சேஷாத்ரியையே சேரும். சேஷாத்ரி, செடிகளில் மேற்கொண்ட ஏராளமான ஆராய்ச்சிகளின் பலனாகப் புதிய ரசாயனக் கலவைகளைக் கண்டுபிடித்தார். அவற்றின் ரசாயனக் கட்டமைப்பையும் கண்டறிந்தார். அவற்றை தமது ஆய்வகத்தில் தயாரிக்கும் முயற்சியையும் மேற்கொண்டார். இத்தகைய ரசாயனக் கட்டமைப்பை தாவரவியல் பிரிவுகளுடன் தொடர்புபடுத்தினார். பூஞ்சைக் காளானைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதில் புதிய புதிய கலவைகளை கண்டறிந்தார்.

இதுமட்டுமல்லாமல் புராதனப் பொருட்கள் எப்படி அழிகின்றன? அவற்றை காப்பாற்றுவது எப்படி என்பதையும் கண்டுபிடித்து கூறினார். உலக விஞ்ஞானிகளை தமிழகம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இவர், 1975-ல் மறைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்