அழிந்து வரும் உழவு மற்றும் கதிர் ஆமைகள்

தற்போது அவற்றில் 129 ஆமை இனங்கள் அழிந்துள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன.

Update: 2023-07-30 12:08 GMT

ஆமைகள் உலகின் பழமையான ஊர்வன வகைகளில் ஒன்றாகும். பாம்பு, முதலை போன்றவற்றிக்கு முன்பிருந்தே ஆமைகள் வாழ்ந்து வருகின்றன. இவ்வளவு ஏன்.. டைனோசர்களின் காலத்திற்கு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவையாக ஆமைகள் கருதப்படுகின்றன. ஆமைகளில் 300 வகைகள் உள்ளன. தற்போது அவற்றில் 129 ஆமை இனங்கள் அழிந்துள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆமைகள் அவற்றின் வாழ்விடங்களில் பாதுகாப்பாக வாழவும், அழிவில் இருந்து அவற்றை தடுப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 'உலக ஆமைகள் தினம்', அனுசரிக்கப்படுகிறது. மே 23-ந் தேதியில் அனுசரிக்கப்பட்டு வரும் இந்த தினம், 2001-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கிறது.

1990-ம் ஆண்டு கணவன்-மனைவியான சூசன் டெல்லெம் மற்றும் மார்ஷல் தாம்சன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட அமெரிக்க ஆமை மீட்பு என்ற அமைப்பு, உலக ஆமை தினத்தை முதன்முதலில் கொண்டுவந்தது. இது அனைத்து வகையான ஆமைகளையும் மீட்டு மறுவாழ்வு அளிக்கும் ஒரு அமைப்பாகும். ஆமைகள் அனைத்து கண்டத்திலும் காணப்படுகின்றன. குறிப்பாக தென்கிழக்கு மற்றும் வட அமெரிக்கா, தெற்காசியாவில் அதிகமாக வாழ்கின்றன. அரிய வகையான பாம்பு கழுத்து ஆமைகள், இந்தோனேசியாவின் ரோட்டி தீவில் மட்டுமே உள்ளன. பல ஆமை வகைகள் அழிந்து வரும் சூழ்நிலை இருந்தாலும், அவற்றில் உழவு ஆமைகள் மற்றும் கதிர் ஆமைகள் மிக வேகமாக அழிந்து வரும் இனங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

ஆமைகள் அவற்றின் இறைச்சி, ஓடு மற்றும் தோலுக்காக சட்டவிரோதமாக வேட்டையாடி வர்த்தகம் செய்யப்படுகின்றன. சுற்றுப்புற மாசுபாடு காரணமாகவும், ஆமைகளின் வாழ்விடத்தை அழிப்பதாலும் ஆமைகளின் அழிவு அதிகரிக்கின்றன. ஆமைகள் நீர் மற்றும் நிலப்பரப்பில் வாழ்வதால், சுற்றுப்புற சூழலை பராமரிப்பதிலும், சூழலை சமநிலைப்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அழிந்து வரும் ஆமைகளை பாதுகாப்பதிலும், சுற்று சூழலை பாதுகாக்கும் ஆமைகளின் வாழ்விடத்தை காப்பாற்றவும் பல்வேறு அமைப்புகள் மற்றும் குழுக்கள் மூலம் இணைந்து நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கவேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்