அழிந்து வரும் முள்ளெலிகள்
முள்ளெலியின் அழிவு பரிணாமச் சங்கிலியைச் சிதைக்கக்கூடும் என விலங்கியல் ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்.;
உலகில் உள்ள 16 முள்ளெலி வகைகளில், 13 வகை ஆபத்தில் உள்ளன. இந்தியாவில் மூன்று வகை முள்ளெலிகள் உள்ளன. நீள்காது முள்ளெலி, வெளிர் முள்ளெலி, தென்னிந்திய முள்ளெலி.
இதில் தென்னிந்திய முள்ளெலி தமிழகம், கேரளத்தில் காணப்படுகின்றன. ஆந்திராவில் சில இடங்களில் அரிதாக உள்ளன. இந்த வகை உயிரினம் 150 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் முதலில் கண்டறியப்பட்டதால், சென்னை வகை முள்ளெலி என்றும் அழைக்கப்படுகிறது.
பழைய ஆராய்ச்சிக் குறிப்புகளின்படி வருசநாடு, ஸ்ரீவில்லிப்புத்தூர், தென்காசி, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, அவிநாசி, பெருந்துறை, நீலகிரி, சென்னை, மன்னார் வளைகுடா, திருச்சி, கோைவ, புதுச்சேரி, திருப்பூர் ஆகிய இடங்களில் முள்ளெலிகள் மிகுந்து காணப்பட்டதாகத் தெரியவருகிறது. அவற்றின் தற்போதைய நிலை பரிதாபமாக உள்ளது. மேற்கண்ட பல இடங்களில் முள்ளெலிகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளன. இப்போது தென்தமிழக தேரிக்காடுகளிலும், காட்டை ஒட்டிய பகுதிகளிலும் காணப்படுகின்றன.
முள்ளெலி இனம் வேகமாக அழிந்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முள்ளெலியின் முள்ளைச் சுட்டு, தேன் சேர்த்துக் குழந்தைகளின் இருமல், கக்குவான் இருமல், ஆஸ்துமா, சளி தொல்லைகளுக்கு மருந்தகாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால் அதிக அளவில் இந்த உயிரினம் வேட்டையாடப்பட்டன.
முள்ளெலிகள் அழிந்ததற்கு மற்றொரு முக்கியக் காரணம், அவற்றின் வாழிடம் பெருமளவு அழிக்கப்பட்டதுதான். காற்றலைகளின் அதிகரிப்பு, காடுகள் அழிப்பு, புதுச்சாலைகள் அமைத்தல், மரம் வெட்டுதல் போன்றவற்றாலும் இந்த இனம் பாதிக்கப்பட்டுள்ளன. பெருமளவு முள்ளெலிகள் சாலையில் அடிபட்டும் இறக்கின்றன.
பூச்சிகளை அதிகம் உண்ணும் முள்ளெலிகள், உணவுச்சங்கிலியின் முக்கியப் பங்கை வகிக்கின்றன. இவை கரையான், எறும்பு புற்றுக்கு அருகில் காணப்படும்.
நாம் சாதாரணமாகக் கருதும் பொட்டல் காடு, புதர் மண்டியிருக்கும் பகுதிகளில்தான் முள்ளெலிகளை பார்க்க முடிகிறது. இவற்றின் அழிவு பரிணாமச் சங்கிலியைச் சிதைக்கக்கூடும் என விலங்கியல் ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்.