காற்றில் இருந்து குடிநீர்
காற்றிலுள்ள ஈரப்பதத்தை இந்தக் கருவி உள்வாங்கிக் கொண்டு மாசுப்பொருட்களை முதலில் அகற்றி சுத்தப்படுத்துகிறது.;
தண்ணீர் தட்டுப்பாடு நிறைந்த இந்த கால கட்டத்தில், தண்ணீரை சேமிப்பது மிக அத்தியாவசியமானது. தண்ணீர் பற்றாக்குறை இன்று பல நாடுகள் சந்தித்து வரும் மிகப் பெரிய பிரச்சினைகளில் முக்கியமானதாகும். தற்போது நீரின் முக்கியத்துவத்தை அறிந்து பல நாடுகள் கடல்நீர் சுத்திகரிப்பு, மழைநீர் சேகரிப்பு போன்ற பல வழிமுறைகளை கடைப்பிடித்து வருகின்றன. இந்நிலையில் காற்றில் உள்ள ஈரப்பதத்தைக் கொண்டு தண்ணீரை உற்பத்தி செய்ய முடியும் என்றால், இங்கு பலருக்கும் ஆச்சரியமாகவே தோன்றும். காற்றிலிருந்து தரமான குடிநீரை பிரித்தெடுக்கும் ஹைட்ரோபோபசிட்டி முறையை பல நாடுகள் கடந்த சில வருடங்களாக செய்து வருகின்றன. இதை சாத்தியமாக்க, வளிமண்டல நீர் உருவாக்கி (AWG) என்ற கருவி பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலம் மக்களுக்கு தேவையான நீரை உற்பத்தி செய்யலாம். காற்றில் உள்ள ஈரப்பதத்திலிருந்து குடிநீர் உற்பத்தி முறை முக்கியமான மற்றும் புதுமையான நீர் பிரித்தெடுத்தல் முறைகளில் ஒன்றாகும். வளிமண்டலத்தில் உள்ள காற்றில் ஈரப்பதத்தின் அளவானது, பூமியில் உள்ள நன்னீர் ஏரியில் உள்ள தண்ணீரின் பத்து சதவீதத்திற்கு சமம். எனவே இது மிகப் பெரிய வளமாகவே கருதப்படுகிறது.
காற்றிலுள்ள ஈரப்பதத்தை இந்தக் கருவி உள்வாங்கிக் கொண்டு மாசுப்பொருட்களை முதலில் அகற்றி சுத்தப்படுத்துகிறது. பிறகு காற்றிலுள்ள ஈரப்பதத்தை தனியாக பிரித்தெடுக்கிறது. இந்த செய்முறை முடிந்ததும் தேவையான கனிம சத்துக்கள் சேர்த்ததும் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாகிறது. இந்த கருவி மூலம் ஒரு நாளைக்கு ஆயிரம் லிட்டர் வரை தண்ணீரை உற்பத்தி செய்ய முடியும். ஈரப்பதம் அதிகம் உள்ள கடற்கரை பகுதிகள், மலைப்பகுதிகள் போன்ற பகுதிகளில் வைப்பதன் மூலம் அதிகளவு தண்ணீரை பெற முடியும். இந்த முறையின் மூலம் தண்ணீரை உற்பத்தி செய்வதால் செலவு மிக குறைவு. தண்ணீரை உற்பத்தி செய்ய 12 முதல் 15 செல்சியஸுக்கு அதிகமான வெப்பநிலையும், 25 முதல் 30 சதவீதத்திற்கு அதிகமான ஈரப்பதமும் தேவைப்படுகிறது. காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவை பொறுத்தே நீரை பெற முடியும். ஈரப்பதத்தில் இருந்து தண்ணீர் மூலக்கூறுகளை பிரிப்பதன் மூலம் காற்று வறண்டு போவதும், வளிமண்டலத்தின் வெப்பத்தை அதிகப் படுத்துவதும் இதன் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கிறது. காற்றிலிருந்து தண்ணீரை அதிகளவு பெறும்போது பூமியின் வெப்ப சமநிலையானது பாதிக்கப்படுகிறது. இருப் பினும் உலகில் நிலத்தடி நீரும், மழையளவும், ஏரியில், குளங்களில் நீரின் அளவும் குறைந்து வரும் இந்தநாட்களில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க இம்முறை பேருதவியாக இருக்கும் என்பதே நிதர்சனம்.