தீரன் சின்னமலையின் தீரம் போற்றுவோம்
தீரன் சின்னமலை மரணம் அடைந்த நினைவு தினம் இன்று. அந்த மாவீரரின் வீரம் என்றும் வரலாற்றில் இடம்பெறும். அவரது தீரத்தை போற்றுவோம்.;
சுதந்திர போராட்ட வீரர்களில் பல தீரச்செயல்களால் அறியப்பட்டவர் தீரன் சின்னமலை. ஈரோடு மாவட்டம் காங்கயம் அருகே உள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ரத்னசாமி கவுண்டர் மற்றும் பெரியாத்தா தம்பதிக்கு மகனாக கடந்த 1756-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ந் தேதி பிறந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.
இவர் தனது இளம் வயதிலேயே போர்க்கலைகளான வாள்பயிற்சி, வில்பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை, போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்து, இளம் வீரராக உருவெடுத்தார். பல தற்காப்புகலைகள் அறிந்திருந்தாலும், அவர் அக்கலைகளைத் தன் நண்பர்களுக்கும் கற்றுக் கொடுத்து, சிறந்த போர்ப்பயிற்சி அளித்து, அவரது தலைமையில் இளம்வயதிலேயே ஓர் படையைத் திரட்டினார்.
தீர்த்தகிரி கவுண்டர் அவர்களின் பிறப்பிடமான கொங்கு நாடு மைசூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால், அந்நாட்டின் வரிப்பணம், அவரது அண்டைய நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்து செல்லப்படும். ஒருநாள் தனது நண்பர்களுடன் வேட்டைக்கு சென்ற தீர்த்தகிரி, அந்த வரிப்பணத்தை பிடுங்கி, ஏழை, எளிய மக்களுக்கு வினியோகம் செய்தார். இதை தடுத்த தண்டல்காரர்கள் கேட்ட போது, "சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஐதர் அலியிடம் சொல்" என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல், அவர் 'தீரன் சின்னமலை' என்று அழைக்கப் பட்டார். பின்னர் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்க்க மன்னர் திப்பு சுல்தானுடன் இணைந்து 3 போர்களில் வெற்றி கண்டார். இதையடுத்து திப்புசுல்தான் மறைவுக்கு பிறகும் ஆங்கிலேயர்களை எதிர்த்து படை திரட்டி தொடர்ந்து போராடினார். இதன் தொடர்ச்சியாக 1801-ம் ஆண்டில், பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானிகாவிரிக்கரையில் எதிர்த்த அவர் வெற்றிக் கண்டார். அந்த வெற்றியைத் தொடர்ந்து, 1802-ம் ஆண்டில் சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கி, 1803-ம் ஆண்டில் அறச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிசின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி வெற்றிக் கண்டார்.
ஆங்கிலேயர்கள் பலரையும் தோல்விக்குள்ளாக்கி, அவர்களை தலைகுனியச் செய்த தீரன் சின்னமலையை சூழ்ச்சியால் வீழ்த்த எண்ணிய ஆங்கிலேயர்கள், அவரது சமையல்காரருக்கு ஆசை வார்த்தைகள் காட்டி, அந்த மாவீரனையும் மற்றும் அவரது சகோதரர்களையும் கைது செய்தனர். கைது செய்து அவர்களை, சங்ககிரிகோட்டைக்கு கொண்டு சென்ற ஆங்கிலேயர்கள் கடந்த 1805-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ந் தேதி தூக்கிலிட்டனர். தம்பிகளுடன், தீரன் சின்னமலையும் வீரமரணமடைந்தார். தீரன் சின்னமலை மரணம் அடைந்த நினைவு தினம் இன்று. அந்த மாவீரரின் வீரம் என்றும் வரலாற்றில் இடம்பெறும். அவரது தீரத்தை போற்றுவோம்.