இலந்தை பழம்: புளிக்கும், இனிக்கும்..!

Update:2023-06-23 12:57 IST

ஆப்பிள், திராட்சையை விட இலந்தை பழம் அதிக சத்துக்களை உடையது. அதிக ஊட்டச்சத்து கொண்ட இந்த பழத்தின் விலை மிக குறைவு என்பதால் ஏழைகளின் பழம் எனவும் அழைக்கப்படுகிறது. இது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருப்பதால் நினைத்தாலே நாவில் உமிழ்நீர் சுரக்கும். இதன் காய் பச்சை நிறத்திலும், பழம் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலும் இருக்கும். இப்பழத்தில் கொட்டைப்பகுதியை சுற்றி சதைப்பகுதி இருக்கும். இது மிகவும் சுவை மிகுந்தது.

இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டிற்கு முன்பே இருந்துள்ளது. இதன் வேர், இலை, பட்டை அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றது. ஏ, சி, பி3, பி6 வைட்டமின்களும், இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும், கார்போஹைட்ரேட் மற்றும் புரதமும் உள்ளது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும். இதை சாப்பிட்டால் மன அமைதி ஏற்படுவதுடன் ஆழ்ந்த உறக்கமும் வரும்.


இதை சாப்பிடுவதால் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரித்து ரத்த ஓட்டம் சீராகும். எலும்பு தேய்மானம் தடுக்கப்படுவதுடன் குடல் பகுதியில் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது. நோய் தடுப்பாற்றல் அதிகரிக்கிறது. உடல் சூட்டை போக்கி குளிர்ச்சியை தருகின்றது. பஸ்சில் செல்லும்போது சிலருக்கு வாந்தி, தலைசுற்றல் வரும். இதை தவிர்க்க இலந்தை பழம் சாப்பிடலாம். உடல் வலியும் நீங்கும். பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அவஸ்தைகளை தடுக்கும் மருந்தாகவும் இலந்தை பழம் பயன்படுகிறது.

நமக்கு பல வழிகளிலும் நன்மை தரும் இந்த பழத்தினை அளவுக்கு மீறியும் உண்ணக் கூடாது. இதனால் உடலில் சர்க்கரை அளவு மாறுபடும். பழம் விலை குறைவு என்று அலட்சியம் காட்டாமல் வாங்கி சாப்பிடுங்கள். ஆப்பிள், திராட்சையை விட அதிக சத்துக்களை உடைய இலந்தை பழத்தை கிடைக்கும் காலத்தில் அளவோடு சாப்பிடுங்கள். சந்தோஷமாக இருங்கள்...!

Tags:    

மேலும் செய்திகள்