தரையில் துளை அமைத்து வாழும் பறவை
கருப்பு, வெள்ளை நிறம் கொண்ட இந்த க்ரெஸ்டெட் கிங்பிஷர் பறவை, ஆற்றின் கரையோரத்தின் செங்குத்தாக தோண்டப்பட்ட ஒரு துளையாக இவற்றின் கூடு அமைந்திருக்கிறது.;
ஆங்கிலத்தில் 'கிங்பிஷர்' என்று அழைக்கப்படும், மீன்கொத்திப் பறவைகள், சிறியது முதல் நடுத்தரமான அளவில் காணப்படுகின்றன. இவற்றில் சுமார் 120-க்கும் மேற்பட்ட இனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் கொஞ்சம் பெரியதாக இருக்கும் இனம் 'க்ரெஸ்டெட் கிங்பிஷர்' என்பதாகும்.
தெற்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்த பறவை, இந்திய துணைக் கண்டத்தில் இருந்து கிழக்கு நோக்கி ஜப்பான் வரை பரவி காணப்படுகிறது. வட இந்தியா, இமயமலை மற்றும் மலை அடிவாரங்கள், வங்காளதேசம், வடக்கு இந்தோனேசியா, தென் கிழக்கு ஆசியா மற்றும் ஜப்பான் பகுதிகளில் வசிக்கின்றன. இவை பெரும்பாலும் மலை ஆறுகள் மற்றும் மலைகளின் அடிவாரத்தில் உள்ள பெரிய ஆறுகளில் காணப்படுகிறது. ஆண் பறவையின் கழுத்தின் கீழ் சிறிது மஞ்சள் திட்டுகள் காணப்படும்.
கருப்பு, வெள்ளை நிறம் கொண்ட இந்த க்ரெஸ்டெட் கிங்பிஷர் பறவை, 41 செ.மீ. முதல் 43 செ.மீ. நீளம் கொண்டது. இது சமன் செய்யப்பட்டது போன்ற இறக்கைகள் மற்றும் வால் பகுதியைக் கொண்டவை. இந்தப் பறவையின் தலைப்பகுதி, முடிகள் சிலிர்த்துக் கொண்டு நிற்பது போல் காணப்படும்.
இவற்றின் கூடு என்பது, ஆற்றின் கரையோரத்தின் செங்குத்தாக தோண்டப்பட்ட ஒரு துளையாக அமைந்திருக்கிறது. இந்த துளையானது, நீரோடை, பள்ளத்தாக்கு வழிகளில் இருக்கும். தண்ணீரில் இருந்து 1½ கிலோமீட்டர் தொலைவிலும் இந்த துளைகள் அமையலாம். ஆண், பெண் இரு பறவைகளும் இணைந்து, தங்களின் கால்கள் மற்றும் அலகு கொண்டு, இந்த துளைகளை ஏற்படுத்துகின்றன. இந்த துளை 5-10 செ.மீ. அகலமும், 2-3 மீட்டர் ஆழமும் கொண்டது.
இனப்பெருக்க காலத்தில் பெண் பறவை 4 முதல் 7 முட்டைகள் வரை இடும். பெண் பறவைகளால் அடைகாக்கப்படும் இந்த முட்டைகளில் இருந்து 40 நாட்களில் குஞ்சுகள் வெளிப்படும்.