சார்லஸ் பாபேஜ்: கணினியின் தந்தை..!
பிறவியிலேயே அறிவாளியாகப் பிறந்து, வாழும் காலத்தில் சக மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு சிந்திக்கும் அபூர்வ மனிதர்களை ‘பாலிமேத்’ என்பார்கள். அப்படியொரு ‘பாலிமேத்’ நபர்தான், கணினி தந்தையான சார்லஸ் பாபேஜ்.
1791-ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த பாபேஜுக்கு மூளை எப்போதும் எல்லோரையும் விட ஒருபடி மேலேதான். பள்ளிக் காலத்திலேயே கணிதத்தில் பெரும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட அவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கணித ஆசிரியரானார்.
எதையும் இயந்திரவியல் கண்ணோட்டத்தில் பார்த்த பாபேஜ், கணிதத்துக்கென ஒரு கருவி உருவாக்க நினைத்தார். அந்தப் பயணத்துக்கு இடையே பல கண்டுபிடிப்புகளை அவர் நிகழ்த்தினார். உதாரணத்துக்கு, ரெயில் பாதையில் கிடக்கும் தடைகளை அகற்றும் 'பைலட்' என்ற கருவியை வடிவமைத்து ரெயிலின் முகப்பில் பொருத்தியது பாபேஜ்தான். அன்றைய பிரிட்டிஷ் ரெயில்வேயில் பல விபத்துக்களை இது தடுத்தது. மேலும், ரெயில் தண்டவாளங்களின் தன்மையை அளக்கும் டைனமோ மீட்டரை உருவாக்கியவரும் அவர்தான்.
இதிலெல்லாம் பாபேஜுக்கு திருப்தி இல்லை. அவர் கனவெல்லாம் இயந்திரவியல் அடிப்படையில் அமைந்த ஒரு கணக்கீட்டுக் கருவி. ஆனால், அந்தக் காலத்தில் இயந்திரவியல் அதிகம் முன்னேற்றம் இல்லாததால் பாபேஜியின் கனவை நனவாக்க எக்கச்சக்க நேரமும் செலவும் பிடித்தது.
இங்கிலாந்து அரசு சுமார் பத்து ஆண்டுகள் வரை அந்த ஆராய்ச்சிக்கு பண உதவி செய்தது. பின்பு, தாமதம் தாங்காமல் பின்வாங்கிக் கொண்டது. இறுதியாக நீராவி என்ஜினால் இயங்கும் ஒரு கணக்கீட்டுக்கருவியை பாபேஜ் உருவாக்கினாலும், அது எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக இயங்கவில்லை. தன் கனவு நிறைவேறாமலேயே சார்லஸ் பாபேஜ், 1871-ம் ஆண்டு அக்டோபர் 18-ந் தேதி தனது 79-வது வயதில் காலமானார்.
அந்த மரணம் நிகழ்ந்து அரை நூற்றாண்டுகளுக்கும் மேலான நிலையில், நவீன பொறியாளர்களை பாபேஜியின் குறிப்புகள் ஈர்த்தன. குறிப்பாக ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவரான எச்.அய்க்கன் (Howerd H. Aiken) என்பவர், பாபேஜின் குறிப்புகளைத் தோண்டியெடுத்தார். அதை அடிப்படையாக வைத்தே 'மார்க்-1' என்ற முதல் கணினி உருவாக்கப்பட்டது. இன்றிருக்கும் நவீன கணினிகளைப் போலவே பாபேஜியின் கணக்கீட்டுக் கருவி, மனிதக் கட்டளைகளை ஏற்று பணி செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும் சேமிப்பு நினைவகமும் செயல்பாட்டு நினைவகமும் அதில் தனித்தனியே அமையப் பெற்றிருந்தது. இந்தக் காரணங்களால்தான் எந்த சர்ச்சையும் இன்றி உலகம் முழுமனதாக சார்லஸ் பாபேஜை 'கணினி தந்தை' என்கிறது!