'கேசினோ ராயல்' நாவல் உருவானது எப்படி?

இயன் பிளெமிங் எழுதிய 'கேசினோ ராயல்' என்ற முதல் ஜேம்ஸ் பாண்ட் நாவல் மூன்று முறை மறுபதிப்பு செய்யப்பட்டது.

Update: 2023-10-05 15:36 GMT

உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களால் அறியப்பட்ட கதாபாத்திரம் ஜேம்ஸ் பாண்ட். "என் பெயர் பாண்ட்..., ஜேம்ஸ் பாண்ட்..." என்று தன் பெயரை அவர் உச்சரிக்கும் விதம், அவருடைய 007 என்ற எண் ஆகிய இரண்டுமே அவரைவிட ரொம்பவும் பிரபலம்.

இங்கிலாந்து எம்.பி.யின் மகன்தான் இயன் பிளெமிங். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு 2-ம் உலகப் போரில் கடற்படை உளவுத் துறையில் பணியாற்றினார். இவரின் தலைமையில் 'ஆபரேஷன் கோல்டன் ஐ' என்ற திட்டம் செயல்பட்டது. இவரின் மேற்பார்வையில் மேலும் 2 உளவுப்பிரிவு குழுக்கள் இயங்கின. இந்த விவரங்களை மையமாக வைத்துத்தான் பிற்காலத்தில் தன்னுடைய கதாபாத்திரங்களையும், கதைக்களத்தையும் பிளெமிங் வடிவமைத்தார்.

இவருடைய காதலியுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு, கவனத்தை மாற்றிக்கொள்வதற்கு அவர் எழுதியதுதான் 'கேசினோ ராயல்' என்ற முதல் ஜேம்ஸ் பாண்ட் நாவல். முதல் புத்தகம் உடனடியாக விற்றுத் தீர, அடுத்தடுத்து மூன்று முறை மறுபதிப்பு செய்யப்பட்டது 'கேசினோ ராயல்'.

முன்னதாக தன் கதாநாயகனுக்கான பெயரை யோசித்துக்கொண்டு இருந்தபோது புகழ்பெற்ற பறவையியல் ஆய்வாளரான ஜேம்ஸ் பாண்ட் நினைவுக்கு வர, அவரது பெயரையே சூட்டினார். அவரது புத்தகத்தை டைப் செய்துகொடுத்தவர் அவருக்குச் செயலாளராக இருந்த ஜான் ஹோவே என்ற சிவப்பு கூந்தலுடைய பெண்மணி. இவரை மனதில் வைத்துதான் ஜேம்ஸ் பாண்டின் உளவுத்துறை செயலர் மணிப்பென்னி வடிவமைக்கப்பட்டார்.

2-வது உலகப்போரில் தன்னுடன் பணியற்றிய மேலதிகாரியை மனதில் வைத்து உளவுத்துறைத் தலைவரான எம் கதாபாத்திரத்தை அமைத்தார். 11 வயதில் ஒரு விபத்தில் பெற்றோரை இழந்த ஜேம்ஸ், அத்தையின் பராமரிப்பில் வளர்கிறார். ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளில் புலமை பெற்ற அவர், நடத்தை காரணமாகப் பள்ளியில் இருந்து மாற்றப்படுகிறார். குத்துச்சண்டை, ஜூடோவில் சிறந்து விளங்கிய தன்னுடைய தந்தையின் நண்பர் உதவியுடன் கடற்படையில் சேர்கிறார். அதன் பிறகு அவரது திறமைகளை உலகமே அறிந்து வியக்கிறது.

பிரபல ஹாலிவுட் நடிகரும் பாடகருமான ஹோகி கார்மைக்கேலின் உருவத்தை மனதில் கொண்டு, தன்னுடைய குண நலன்களுடன் ஜேம்சை, பிளெமிங் உருவாக்கினார். ஜேம்சின் சூதாடும் வழக்கம், புகைப்பது, ஓட்டல்கள், மதுபான தேர்வு போன்ற அனைத்துமே பிளெமிங்கின் சொந்த விஷயங்களைப் பிரதிபலிப்பவைதான். இப்படித்தான் ஜேம்ஸ் பாண்ட் கதை உருவாகியது.

Tags:    

மேலும் செய்திகள்