தானியங்கி பார்க்கிங் தொழில் நுட்பம்
புதிய தொழில்நுட்பத்தை பாஷ் உருவாக்கியுள்ளது. தானியங்கி பார்க்கிங் தொழில் நுட்ப கருவியை உருவாக்க பாஷ் பொறியாளர்கள் சுமார் 5 ஆயிரம் மணி நேரம் செலவிட்டுள்ளனர்.
பல்வேறு சவுகரியங்களை கருத்தில் கொண்டு வங்கியில் கடன் வாங்கி கார் வாங்கியவர்கள் நொந்து கொள்ளும் ஒரே விஷயம் குடும்பத்தினருடன் கடைகளுக்கு சென்று நிம்மதியாக பொருள்களை வாங்க முடியாததுதான். காரை நிறுத்த உரிய இடத்தைத் தேடி அலைவதே பெரும் பிரச்சினையாக இருப்பதுதான் இதற்குக் காரணம்.
சென்னை போன்ற நகரங்களில் இந்த பிரச்சினை ஓரளவு சமாளிக்கும்படி இருந்தாலும் டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா போன்ற நகரங்களில் உரிய பார்க்கிங் வசதி இல்லையெனில் அந்தப் பகுதிகளுக்கு காரில் செல்லவே பலரும் தயங்குகின்றனர். இதுபோன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டியது தவிர்க்க முடியாது போனால் வாடகைக் காரில் செல்லும் குடும்பத்தினரும் உண்டு. காரை நிறுத்த உரிய இடம் தேடி குறைந்தது 5 கி.மீ. தூரமாவது பயணிக்க வேண்டிய நிலை இப்போது உள்ளது.
இதற்கு இப்போது தீர்வு கண்டுள்ளது பாஷ். ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள இந்தநிறுவனம் அல்ட்ரா சோனிக் அதிர்வலைகளில் செயல்படக் கூடிய கருவியை உருவாக்கியுள்ளது. இக்கருவி கார் நிறுத்துமிடங்களில் எந்தெந்த இடங்களில் இடம் காலியாக உள்ளது என்று துல்லியமாக காட்டும். அத்துடன் கார் எவ்வித ஸ்கிராட்ச் இல்லாமல் நிறுத்தவும், திரும்ப எடுக்கவும் வழிகாட்டுகிறது. கார்களில் ஏற்படும் உராய்வுகள் மற்றும் ஸ்கிராட்சுகளில் 30 சதவீத அளவுக்கு பார்க் செய்யும்போது உருவாகிறது. இதிலும் பல சமயங்களில் காரின் வெளிப் பாகங்கள் சேதமடையும் நிகழ்வுகளும் ஏற்பட்டு விடுகின்றன.
இவற்றை தவிர்க்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை பாஷ் உருவாக்கியுள்ளது. தானியங்கி பார்க்கிங் தொழில் நுட்ப கருவியை உருவாக்க பாஷ் பொறியாளர்கள் சுமார் 5 ஆயிரம் மணி நேரம் செலவிட்டுள்ளனர். இந்த கருவி இருப்பதால் கார்களை நிறுத்த இடம் தேடி அலைய வேண்டியிருக்காது. இதனால் எரிபொருள் செலவு மிச்சமாகும். காரை எந்த இடத்தில் நிறுத்தினோம் என்று தேடி அலைவதும் குறையும். இந்த தானியங்கி பார்க்கிங் கருவி ஜெர்மனியில் அதிகம் விற்பனையாகிறது. ஜெர்மனியில் புதிதாக தயாராகும் கார்களில் பாதிக்கு மேல் இதுபோன்ற தானியங்கி பார்க்கிங் வசதி கொண்ட தொழில் நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.
ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் காலியாக உள்ள இடத்தை காண்பிப்பதோடு அங்கு எவ்வித உரசலும் இன்றி காரை நிறுத்த இந்தத் தொழில்நுட்பம் உதவுகிறது. இந்தத் தொழில் நுட்பம் கொண்ட கார்களை நிறுத்துமிட வாயிலில் நிறுத்தி டிரைவர் இறங்கிக் கொண்டாலே போதும். மொபைலில் உள்ள ஆப்ஸ் மூலம் கார் தானாக இயங்கி காலியான இடத்தில் நின்றுவிடும். பிறகு வெளியில் வரும்போது ஸ்மார்ட்போன் மூலம் இயக்கினால் நாம் இருக்குமிடத்துக்கு கார் வந்துவிடும். இதனால் காரை நிறுத்த இடம் தேடி அலைவதோ பிறகு பார்க் செய்த இடத்தை மறந்து தேடிச் செல்வதோ இருக்காது. திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் கார் நிறுத்துமிட வசதி உள்ள பொது உபயோக பகுதிகளில் காலியாக உள்ள இடத்தைக் கண்டறிவதால் இந்த கருவி பொறுத்தப்பட்ட கார்கள் தயாரிப்பு இப்போது அதிகரித்துள்ளது.