வாடகை வீடு சொந்தமாகுமா?
12 வருடங்களாக வாடகை கட்டணம் ஏதும் செலுத்தாமல் வாடகைதாரர் இருக்கும்பட்சத்தில் அந்த வீட்டிற்கு உரிமை கோர சட்டத்தில் வழியிருக்கிறது.;
வாடகை வீட்டில் நீண்டகாலம் வசிப்பவர்கள் அந்த வீட்டை சொந்தமாக்க சட்டத்தில் இடம் இருக்கிறதா? வாடகை வீட்டுக்காரர் 100 வருடமே வசித்தாலும் அந்த வீட்டை சொந்தம் கொண்டாட சட்டத்தில் வழிமுறை இல்லை. ஆனால் 12 வருடங்களாக வாடகை கட்டணம் ஏதும் செலுத்தாமல் வாடகைதாரர் இருக்கும்பட்சத்தில் அந்த வீட்டிற்கு உரிமை கோர சட்டத்தில் வழியிருக்கிறது. அதாவது வீட்டு உரிமையாளர் வாடகை வசூலிக்காமல் இருக்கும்பட்சத்தில் இது சாத்தியமாகும். வாடகை கட்டணம், அட்வான்ஸ் நிர்ணயிப்பதில் சட்ட வரையறை உண்டா?
வாடகை கட்டணம் வசூலிப்பதில் சட்ட வரையறை எதுவும் சட்டத்தில் இல்லை. ஆனால் வாடகை கட்டணம் கூட்டுவது குறித்து வாடகை ஒப்பந்தப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் உரிமையாளர் அதற்கேற்றபடி வாடகை கட்டணத்தை கூட்டலாம். ஆனால் அதற்கு வாடகைதாரருக்கு உடன்பாடு இல்லாதபோது அவர்கள் நீதிமன்றத்தில் சென்று முறையிடலாம். அதுபோல உரிமையாளரும் வாடகை கட்டணம் உயர்த்தும்போது வாடகைதாரர் ஒத்துக்கொள்ளாதபட்சத்தில் கட்டணம் உயர்த்துவதற்கான உரிய காரணத்தைத்துடன் நீதிமன்றம் சென்று முறையிடலாம். வாடகைதாரர் அதிகமான வாடகை கட்டணத்திற்கு குடிவந்த பிறகு, அந்தக் கட்டணம் அதிகம் என நினைத்தாலும் நீதிமன்றத்தை அணுகலாம். உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு ஒருவர் குடி வருகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் குடி வந்த பிறகு அருகில் உள்ள வீட்டு வாடகைக் கட்டணங்கள் மிகக் குறைவாக இருக்கிறது.
இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் நீதிமன்றத்தை அணுகலாம். வாடகை முன்பணத்தை பொறுத்தவரை அதற்குச் சட்டம் நிர்ணயித்திருக்கும் தொகை என்பது ஒரு மாத வாடகைதான். அதாவது வாடகைதாரர் அளிக்கவிருக்கும் வாடகையை முன்பணமாக செலுத்தினாலேயே போதுமானது.
வாடகைதாரர்களை காலி செய்யச் சொல்ல என்னென்ன காரணங்கள் உள்ளன? வாடகை ஒப்பந்த பத்திரத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் வாடகையை செலுத்த தவறும்போது காலிசெய்யச் சொல்லலாம். அதாவது 5-ந் ேததிக்குள் வாடகை தருவதாக ஒப்பந்தம் என்றால் உரிமையாளர் அந்த தேதியில் இருந்து 15 நாட்கள் வரை பார்க்கலாம். அதற்கு பிறகு வாடகை செலுத்த தவறினால் காலிசெய்ய சொல்லலாம். வாடகை ஒப்பந்த பத்திரத்திற்கு மாறாக வீட்டை வேறு ஒருவருக்கு உள்வாடகைக்கு விடும்போது காலிசெய்ய சொல்லலாம்.