பிரெய்லி முறை

`பிரெய்லி முறை’ என்பது பார்வையற்றவர்கள் விரல்களால் தொட்டுப் பார்த்து படிக்க உதவும் ஆறு புள்ளிகளைக் கொண்ட அமைப்பாகும்.;

Update:2023-08-25 22:00 IST

பிரான்ஸின் பாரீஸ் நகருக்கு அருகே உள்ள கூப்வெரி கிராமத்தில் 1809-ம் ஆண்டு பிறந்தவர் லூயிஸ் பிரெய்லி. சிறு வயதில் ஒரு விபத்தில் கண்பார்வை இழந்ததால், தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் கேட்டு, தொட்டு, முகர்ந்து அவைகளைப் பற்றி அறிந்துகொண்டார். இவர் பார்வையற்றவர்களுக்கான பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு எழுத்துக்களை விரலால் தொட்டு படிப்பதற்கு ஏற்றவாறு புத்தகங்களை மேடாக்கி தயாரித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இது கடினமாக இருந்ததால், `சார்லஸ் பார்பியர்' என்ற ராணுவ அதிகாரி கண்டுபிடித்த 12 புள்ளிகளை வைத்து படிக்கக் கூடிய `நைட் ரைடிங்' என்ற புதிய முறை கொண்டு வரப்பட்டது. ராணுவ வீரர்களுக்கு இரவில் ரகசியங்களை படிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதே இந்த `நைட் ரைடிங்' முறை. ஏற்கனவே இருந்த பழைய முறையை விட இந்த முறை சிறந்தது என்றாலும், நைட் ரைடிங் முறையில் மெதுவாகவே படிக்க முடிந்தது.

எனவே மாணவர்கள் வேகமாக படிப்பதற்கு ஏற்றவாறு ஒரு புதிய முறையை உருவாக்க எண்ணினார் பிரெய்லி. இதற்காக பல நாட்கள் ஆராய்ச்சிக்கு பின், ஆறு புள்ளிகளை வைத்து பாடங்கள், சூத்திரம், அறிவியல் கோட்பாடு, கணக்கு, இசைக்குறிப்பு, கதை, கட்டுரை, நாவல் ஆகிய அனைத்தையும் படிக்கும் ஒரு புதிய குறியீட்டு முறையை உருவாக்கினார். இந்த முறை பார்வையற்றவர்களுக்கு எழுத்துக்கள் மற்றும் எண்கள் மட்டுமல்லாமல் இசைக் குறிப்புகள், அறிவியல் மற்றும் கணிதக் குறியீடுகள் போன்றவற்றையும் தொடு உணர்வின் மூலம் அடையாளம் காண உதவியது.

1852-ம் ஆண்டு அவர் இறந்த பிறகுதான் பிரெய்லி முறை அனைத்து மக்களுக்கும் தெரிய வந்தது. 19-ம் நூற்றாண்டில் பிரெய்லி முறையை உலகமெங்கும் பயன்படுத்த ஆரம்பித்தனர். பிரெய்லி அமைப்பு பார்வையற்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். புத்தகங்கள் மட்டுமில்லாமல், பிரெய்லி டைப்ரைட்டர், பிரெய்லி கீபோர்டு, காலண்டர், ஏ.டி.எம் போன்ற அனைத்திலும் இந்த முறை கொண்டு வரப்பட்டது, பிரெய்லி கண்டுபிடித்த கற்றல் முறை, பார்வையற்றவர்களின் வாழ்க்கையை பிரகாசமாக்கியது.

Tags:    

மேலும் செய்திகள்